தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பின்பு, குணச்சித்திர கதாபாத்திரங்கள், கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்கள் எனத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். மேலும் விளம்பரப்படங்களிலும் நடித்துவருகிறார்.
இவரது கணவர் நடிகர் பிரசன்னாவின் நண்பரான பிரசாந்த் என்பவர் சிமெண்ட் கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் தான் ஏற்கனவே அந்நிறுவனத்தில் 40 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி பிரசன்னா தனது மனைவி சினேகாவிடம் அந்நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டு கொண்டார்.
இதனையடுத்து ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் இயங்கி வரும் எம்.எஸ் கௌரி சிமெண்ட் & மினரல் கம்பெனியில் கடந்த மே மாதம் 25 லட்ச ரூபாயை ஆன்லைன் மூலமாகவும், 1 லட்ச ரூபாய் ரொக்கமாகவும் நடிகை சினேகா முதலீடு செய்தார்..
முதலீடு செய்த நாள் முதல் இன்றுவரை சிமெண்ட் கம்பெனி கூறியது போல் எந்தவிதமான லாபமும் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனை அடுத்து சிமெண்ட் கம்பெனியின் உரிமையாளர் சிவராஜ் கௌரி மற்றும் சந்தியாவிடம் பணம் குறித்து சினேகா கேட்ட போது அவர்கள் பணத்தை தரமுடியாது என்று கூறுயதுடன் மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நடிகை சினேகா இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய கானத்தூர் போலீசார் ஆந்திராவில் உள்ள சிமெண்ட் கம்பெனி நிர்வாகிகளை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.
மேலும் இது தொடர்பாக இரு தரப்பினரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.