திரையுலக விழாக்களில் விஜய் பேசுவது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்துவது வழக்கம். இதைத் தொடர்ந்து அவருக்கு சில அரசியல் அமைப்புகள் கண்டங்கள் எழுப்புவதும் வாடிக்கை.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றியைப் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை அழைத்துச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் விஜய். விரைவில் நேரடி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசியில் மிரட்டல் வந்துள்ளது. தகவலறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள், நடிகர் விஜய் வீட்டுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குப் பின் மிரட்டல் தகவல், புரளி எனத் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்தது விழுப்புரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பதும் தெரியவந்ததுள்ளது. புவனேஸ்வரன் வழக்கமாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர் என்றும் இவர், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.