தமிழ் சினிமா வரலாற்றில் நிலைத்து நிற்கும் சில திரைப்படங்களில், கஸ்தூரி ராஜா இயக்குநராக அறிமுகமான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படமும் ஒன்று. நடிகர் ராஜ்கிரண் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமும் இதுதான். இத்திரைப்படத்தில் தொடை தெரிய வேட்டி கட்டுவது, நல்லி எலும்பு கடிப்பது என அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு அசல் கிராமத்துக்காரராக ரசிகர்களைக் கவர்ந்திருப்பார் ராஜ்கிரண்.
புகழ்பெற்ற இத்திரைப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. ராஜ்கிரணின் மகன் நைனார் முகம்மது இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதன் மூலம் அவர் சினிமா துறையில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தற்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ திரைப்படத்தில் கார்த்தியின் தாய்மாமா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஜ்கிரண். விரைவில், ‘என் ராசாவின் மனசிலே-2’ பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.