நாடு தழுவிய அளவில் பேரதிர்வை ஏற்படுத்திய ’ஜெய் பீம்’ திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளாக்கவும்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் நிஜ கதாநாயகனான, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு ‘காமதேனு’ இதழுக்காக நம்முடன் மனம் திறந்து உரையாடியதிலிருந்து...
பொதுவாக தமிழ் சினிமாவில், எதிரிகளை அடித்து வீழ்த்தி நீதியை நிலைநாட்டுபவர்களாகவே நாயகர்கள் சித்தரிக்கப்படுவார்கள். ஆனால், நிதர்சனம் வேறு. 1993-ல் வழக்கறிஞராக வாதாடி ராசாக்கண்ணு கொலை வழக்கில் நீங்கள் நீதி பெற்றுத் தந்ததை ’ஜெய் பீம்’, திரைப்படம் விறுவிறுப்பான திரைமொழியில் சித்தரித்திருக்கிறது. சூர்யா நடித்த வழக்கறிஞர் பாத்திரம் குறித்து உங்கள் கருத்து என்ன?
தனிமனிதர்களின் சாகசத்தைக் குறைத்து, மக்கள் தங்களை இயக்கமாக ஆக்கிக்கொண்டு தெருவில் இறங்கிப் போராடுவதுதான் பிரச்சினைக்கான தீர்வு என்பதையும், எழுத்தறிவில்லாத மக்களுக்குப் படிப்பறிவுதான் விடுதலைக்கான வழி என்பதையும் சரியான முறையில் இப்படத்தில் உணர்த்தியிருக்கிறார்கள். பாபா சாகேப் அம்பேத்கர் சொன்னது போல், ‘கல், கற்பி, கலகம் செய்’ என்ற வாசகத்தை இப்படம் உறுதிப்படுத்தியுள்ளது. அதனால்தான் சூர்யா ஏற்று நடித்த வழக்கறிஞர் பாத்திரத்தை, ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்றாமல் சாதாரணமாகச் செயல்படும் மனிதராகக் காட்டியிருக்கிறார்கள்.
படத்தில் வழக்கறிஞர் சந்துருவுக்குக் கொலை மிரட்டலோ பேரமோ இருந்ததாக வெளிப்படையாகச் சித்தரிக்கப்படவில்லை. நீங்கள் நிஜத்தில், விருத்தாச்சலம் அருகே உள்ள கம்மாபுரத்திலிருந்து பார்வதியை (செங்கேணி) சென்னை உயர் நீதிமன்றம் அழைத்துவந்து நீதி பெற்றுத் தந்தது எவ்வளவு சவால் மிகுந்ததாக இருந்தது?
பார்வதியை அவரது கிராமத்திலிருந்து வக்கீலிடம் அழைத்து வந்து அறிமுகம் செய்ததும், பின்னர் அவருக்கு உதவி செய்ததும் அங்கிருந்த வாலிபர் சங்கத் தோழர்கள். பார்வதி முதல் முறையாக என்னை நெய்வேலியில் சந்தித்த பிறகு, இரண்டு மூன்று முறை சென்னைக்கு வந்தார். ஆனால், அவருக்கு இங்கு உறவுகளோ தொடர்புகளோ இல்லை. நாதியற்றவர் என்று அவரை நினைத்த காவலர்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர். அம்மக்களுக்கும் நீதிமன்றமும் சட்டமும் இருக்கின்றன. அவரும் சட்டத்தை வைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று காவல் துறையினருக்குத் தோன்றவில்லை. அதேபோன்று சிறையிலிருந்த ராசாக்கண்ணுவின் மருமக்களை மிரட்டி காணாத தூரத்திற்கு விரட்டி அனுப்பிவிட்டனர். பிறகு இருட்டப்பனும் மொசக்குட்டியும் மீண்டும் திரும்பிவருவார்கள்; நீதிமன்றத்தில் சாட்சி அளிப்பார்கள்; தங்கள் மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றத்திற்கு முக்கிய சாட்சியாக மாறிவிடுவார்கள் என்று காவலர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
விளைவு, சாதாரண மக்களும் உறுதியுடன் செயல்பட்டால் அரசு இயந்திரத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்று அந்த வழக்கு நிரூபித்தது. இதைத் துல்லியமாக இப்படம் காட்டுகிறது. சவால் மிகுந்த வழக்காக இருப்பினும் சாதாரண மக்களுக்குப் போராடி வெற்றி பெற்றுத் தருவதில் கிடைக்கும் இன்பம்தான் அதுபோன்ற வழக்கறிஞர்களுக்கு டானிக்.
காவல் துறை அத்துமீறலின் உச்சபட்சமான ’என்கவுன்ட்டர்’, சினிமாவிலும் பொதுச்சமூகத்திலும் இத்தனை காலம் விதந்தோதப்பட்டு வந்திருக்கிறது. நீதித் துறை மற்றும் சட்ட வல்லுநராக காவல் துறையினரின் அதிகாரம் எதுவரை என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல முடியுமா?
காவல் துறை காலனி ஆதிக்கத்தால் ஏற்படுத்தப்பட்டது. காலனி அரசுக்கு சட்டம் - ஒழுங்கை நிர்வகிப்பதற்கு ஆயுதம் தரித்த காவல் படை தேவைப்பட்டது. அதையும் தாண்டி குற்றங்களைத் துப்புத் துலக்கும் பயிற்சி என்பது அவர்களது காட்டுமிராண்டித்தனத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பயனாக உருவாக்கப்பட்டதே குற்றப்பரம்பரைச் சட்டம். தமிழ்நாட்டில் பரவலாக கீறல் சட்டம் என்று அழைக்கப்பட்டது.
இதன்படி குற்றம் நடந்த பகுதியில் தண்டோரா மூலம் செய்தி அறிவிப்பார்கள். செய்தி கிடைத்து ஒரேநாளில் காவல் நிலையத்தில் சரணாகதி அடையாதவர்கள் குற்றவாளிகள் என்று கருதப்பட்டார்கள். குற்றப்பரம்பரை சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டாலும், அவர்கள் சீர்மரபினர் என்று புதிய பெயரில் அழைக்கப்பட்டாலும், காவல் துறையைப் பொறுத்தவரை அவர்களை இன்னும் குற்றவாளிகளாகவே கருதி வேட்டையாடுவது உண்மை. அதனுடைய நீட்சிதான் லாக்கப் சித்ரவதைகளும், பொய் வழக்குகளும். காவல் நிலையங்கள் நீதிமன்றங்களாகவும், காவலர்கள் நீதிபதிகளாகவும் மாறிக்கொண்டு தண்டனைகள் விதிப்பதும் என்கவுன்ட்டர் மூலம் மரண தண்டனை விதிப்பதும் நடைபெற்று வருவதை நாம் பார்க்கிறோம்.
இதற்கெல்லாம் முடிவுகட்ட வேண்டுமென்றால் மனித உரிமைகளுக்காகத் தனிமனிதர்கள் போராடினால் மட்டும் போதாது. பல மனித உரிமை இயக்கங்கள் தோன்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது பற்றிய புரிதல் வேண்டும். இப்படிப்பட்ட புரிதல்கள் உருவாக்குவதற்கு மனித உரிமைகள் பற்றிய ஞானத்தை உண்டாக்குவதற்குப் பள்ளிக்கூடங்களிலிருந்து பயிற்சி தொடங்க வேண்டும். சாதாரண மனிதனும் சட்டத்தின் ஆட்சியை மதித்துச் செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும்வரை ராசாக்கண்ணுகள் காவல் நிலையங்களில் மரணிப்பது தொடரும்.
படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தாலும், பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தன்னுடைய கணவரைத் தேடி வந்த உண்மையான பார்வதி கதையை மட்டும் எடுத்திருந்தால், இது ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக மட்டுமே வந்திருக்கும். இயக்குநர் த.செ.ஞானவேல் நுட்பமாக யோசித்து கதைக்களத்தை மாற்றினார். வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்வியலையும் புனைந்தார். ஆனால், இதை எப்படிச் செய்யலாம் என்பதுபோன்ற கேள்விகளைச் சிலர் எழுப்புகிறார்கள். முதலாவதாக இது ஒரு படைப்பாளியின் சுதந்திரம்.
’ராசாக்கண்ணுவின் லாக்கப் கொலை வழக்கைத் தழுவி எடுக்கப்பட்ட கதை’ என்றுதான் படத்தின் ஆரம்பத்திலும் எழுத்துபூர்வமாகப் போடப்பட்டது. அப்படியிருக்க உண்மைச் சம்பவங்களை மட்டுமே ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புபவர்கள், அவர்கள்தாம் படம் எடுக்க வேண்டும். இதுபோக உண்மையான பார்வதி - ராசாக்கண்ணு தம்பதியின் குறவர் சமூகத்தைப் பற்றி பேசுவதானால், அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் இருக்கிறார்களே தவிர இன்னும் எஸ்.டி பட்டியலுக்கே மாற்றப்படவில்லை.
படத்தின் கதைக்களம், சில கதாபாத்திரங்களின் பெயர்கள் ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிஜத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சட்டரீதியாக நீதியும் இழப்பீடும் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. இனி வரும் காலத்தில் இத்தகைய அநீதி நிகழ்வதைத் தடுக்க வேண்டுமானால் கதைக் களத்தை வேறொன்றாக மாற்றுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதைத்தான் இந்தப் படமும் செய்திருக்கிறது. இதுபோக படத் தயாரிப்புக் குழுவினர் குறவர் சமூகத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் தனது அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார். கதைக்களத்தை விஸ்தரித்ததால்தான் அனைத்து விதமான விளிம்புநிலையினர் மீதும் கவனத்தைக் குவிக்க இந்தப் படம் தூண்டியிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் குறுகலான பார்வையோடு படத்தைக் குறுக்கு விசாரணை செய்வது வருத்தமளிக்கிறது.
அதேபோல் வன்னியர் சமூகத்தினரைப் புண்படுத்தும் விதமாக, குற்றமிழைத்த போலீஸ்காரர் கதாபாத்திரத்துக்கு பின்னால் அக்னிசட்டி படம் இடம்பெற்ற காலண்டரைக் காட்டிவிட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. அந்தக் காட்சியில் காலண்டர் மாற்றப்பட்டது. இப்போது இந்து கடவுளரை, வில்லனுடன் சேர்த்துக் காட்டியது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அந்தோணிசாமியை குருமூர்த்தியாக மாற்றியது, காடுவெட்டி குருவைக் குறிப்பதாகவும் வாதிடுகிறார்கள்.
இந்த வழக்கில் அந்தோணிசாமி தண்டனை அனுபவித்து சிறையிலிருந்து விடுதலை ஆகிவந்திருக்கிறார். அவருடைய பெயரைப் பயன்படுத்துவது சட்டச் சிக்கலை உண்டாக்கும். ராசாக்கண்ணு இறந்துவிட்டதால் அவரது உண்மையான பெயர் பயன்படுத்தப்பட்டது. என்னுடைய பெயரைப் பயன்படுத்த நான் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆகையால் இந்த இரண்டு பெயர்களும் படத்தில் எடுத்தாளப்பட்டன. ஆனால், இருளர் சமூகத்தில் பார்வதி போன்ற இந்து கடவுளர்களின் பெயர்கள் சூட்டப்படுவதில்லை. மாறாக ’செங்கேணி’ அங்கு புழக்கத்தில் உள்ள பெயர். கதைக்களம் மாறவே பெயர்களும் மாறின. அப்படிப் பார்த்தால் எந்தப் பெயரையுமே வைக்க முடியாது.
“வழக்கறிஞர் சந்துருவாக நடித்த சூர்யா கதாபாத்திரம் ஏன் தானே தோசை சுட்டார்? அவருக்குக் காதலி, தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லையா? இவற்றையெல்லாம் படம் காட்டத் தவறிவிட்டது” என்று திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் கேலி செய்ததையும் கேள்விப்பட்டேன். என்னுடைய வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும் என்றுகூட ஏன் அவரால் யோசிக்க முடியவில்லை என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். என்னுடைய 40-வது வயதில்தான் திருமணம் செய்துகொண்டேன். அதுவரை நானேதான் தோசை ஊற்றிச் சாப்பிட்டு வந்தேன். தனியாக நான் கையாளும் கேஸ்கட்டுகளை நானே தைத்துக்கொண்டேன். அதிலென்ன தவறு? சமூகத்துக்காகத் தங்களை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டு கடைசிவரை மணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்த வழக்கறிஞர்களை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.