நெட்ஃப்ளிக்ஸ் வரலாற்றில் அதிக விலைக்கு போணியான திரைப்படம் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது, அமெரிக்க ஆக்ஷன் காமெடியான ’ரெட் நோட்டீஸ்’ திரைப்படம். இந்திய மதிப்பில் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.1்,480 கோடி! ட்வைன் ஜான்சன், கல் கதோத், ரியான் ரெனால்ட்ஸ் என ஊதியத்தில் உலக அளவில் முதன்மை வகிக்கும் நட்சத்திரங்கள் நடிக்க, ராஸன் மார்ஷல் இயக்கியிருக்கிறார்.
திருடன் - போலீஸ் விளையாட்டு
கலைப்பொருட்களைக் குறிவைத்து களவாடும் உலகமகா திருடர்கள் வரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பவனை வளைப்பதற்கான ’ரெட் நோட்டீஸ்’ அறிவிப்பை, சர்வதேசப் போலீஸான இன்டர்போல் விடுக்கிறது. அமெரிக்க உளவு அமைப்பான எஃப்பிஐ ஏஜென்ட் ஒருவர் இந்தக் கலைத்திருடனைப் பிடிக்க களமிறங்குகிறார். இந்த முயற்சியில், கலைப்பொருள் திருடர் பட்டியலின் திருவாளர் வரிசையில் முதலிடத்தில் இருப்பவரையும் எதிர்கொள்ள நேர்கிறது. இந்தத் திருடர்களை வளைக்க முற்படும் எஃப்பிஐ ஏஜென்ட் மீதே, ஒரு கட்டத்தில் குற்றச்சாட்டு திரும்புகிறது. தன்னை நிரூபிப்பதோடு, தேடப்படும் திருடர்களைப் பிடிப்பது, கலைப்பொருட்களையும் மீட்பது என்று எஃப்பிஐ ஏஜென்டுக்குச் சவால்கள் எகிறுகின்றன. அவற்றை இவர் சாதித்தாரா என்பதே ‘ரெட் நோட்டீஸ்’ திரைப்படம்.
குறைவில்லாத பொழுதுபோக்கு
பிரம்மாண்டமான பொழுதுபோக்குத் திரைப்படத்தை, பெரும் பொருட்செலவில், பிரதான நட்சத்திரங்கள் பங்கேற்பில் உருவாக்குவது என்ற தீர்மானத்தோடு இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். ரோமில் தொடங்கி, ரஷ்யா, பாலி, அர்ஜென்டினா, எகிப்து என்று ஒற்றைத் திரைப்படத்தில் சர்வதேச சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள். கண்களுக்குக் குளிர்ச்சியான இயற்கைச் சூழல்கள், மிரட்டும் சாகசக் காட்சிகள் என பிரம்மாண்டத்துக்குப் பங்கமில்லாத காட்சிகள் வரிசைகட்டுகின்றன. ஆக்ஷன் திரைப்படத்தில் அதற்கு நிகராகக் காமெடியையும் களமாட விட்டிருப்பது இன்னும் சிறப்பு. குழந்தைகள், குடும்பம் என கூடி அமர்ந்து ரசிப்பதற்கான ஒரு ஹாலிவுட் திரைப்பட அனுபவத்தை ‘ரெட் நோட்டீஸ்’ தருகிறது. செல்போன் திரையைவிட டிவி போன்ற சற்று அகல திரைகளில் திரைப்படத்தை ரசிப்பது, முழுமையான ஒலி-ஒளி அனுபவத்தை கொடுக்கும்.
காமெடி - அதிரடி
எஃப்பிஐ ஏஜென்டாகத் தோன்றும் ட்வைன் ஜான்சன், காமெடியில் தடுமாறினாலும் ஆக்ஷனில் வழக்கம்போல அதகளம் செய்கிறார். காமெடியில் இவர் விட்டதை, உடன் நடிக்கும் ரியான் ரெனால்ட்ஸ் பூர்த்தி செய்கிறார். ரியான் தோன்றும் காட்சிகள் எல்லாமே ஜாலி பட்டாசு. முன்னாள் மிஸ் இஸ்ரேல் அழகியான கல் கதோத், கிறங்கடிப்பதுடன் தனது ‘வொண்டர் வுமன்’ பட பாணியில் அநாயச ஆக்ஷனிலும் கவர்கிறார். ஸ்பானிய சாயலுடன் தோன்றும் இந்திய வம்சாளியான ரிது ஆர்யா, இவர்கள் மூவரையும் துரத்தும் இன்டர்போல் இன்ஸ்பெக்டராக வருகிறார். சாகசமா, காமெடியா என்ற போட்டியில் இரண்டுமே சளைக்காது மோதுகின்றன. ட்வைன் - ரியான் இடையிலான திருடன்-போலீஸ் விரட்டல்களும், பரஸ்பரப் பகடி வாரல்களும் அந்த அனுபவத்தைத் தருகின்றன.
கிளியோபாட்ராவின் தங்க முட்டைகள்
கிளியோபாட்ராவுக்குத் திருமணப் பரிசாக மார்க் ஆன்டனி அளித்த, விலைமதிப்பற்ற தங்க முட்டைகளைத் தேடி கலைப்பொருள் திருடர்கள் நோட்டமிடுகிறார்கள். தங்க முட்டையின் வரலாற்றுப் பயணத்தில், ஹிட்லருக்குப் பிந்தைய நாஜி தலைவர்களையும் கோத்திருக்கிறார்கள். ஆவணப்படமாக, இந்தப் பின்புலச் சரடுகள் இரண்டும் சடுதியில் கடந்துபோனாலும் கதையில் எந்த வகையிலும் ஒட்டவில்லை. 2000 ஆண்டு பின்னணியிலான புராதனப் பெருமையும், கலைப்பொருள் என்பதன் அர்த்தமும் அவற்றுக்கான எதிர்பார்ப்பும் கதையில் பதியவே இல்லை.
மற்றபடி, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இடையிடும் திருப்பங்கள், படத்துக்கு விறுவிறுப்பு சேர்க்கின்றன. யார், எவருடன் கூட்டு சேர்கிறார்கள், எவரைக் கழற்றிவிடுகிறார்கள் என்ற குழப்படிகளை சாமர்த்தியமாய் க்ளைமாக்ஸ் வரை நீட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.
மற்றுமொரு ஜுமான்ஜி?
ஆக்ஷன் அதிரடியில் புதுமையாய் ஆரம்பிக்கும் கதை, பிற்பாடு ட்வைன் ஜான்சனின் ‘ஜுமான்ஜி’ பட வரிசை பாணிக்குள் சுருண்டுவிடுகிறது. இதற்கு இன்னொரு ‘ஜுமான்ஜி' திரைப்படத்தையே எடுத்திருக்கலாம்; ’ரெட் நோட்டீஸ்’ எதற்கென்று தெரியவில்லை. அதிலும் இத்தனைப் பெரிய பட்ஜெட்டில் தயாரான படத்தின் பெரும்பாலான காட்சிகளை செட் போட்டு எடுத்திருப்பதும், பல இடங்களில் துருத்திக்கொண்டு தெரிகிறது. ஸ்பெயின் காளையுடனான மோதல், அர்ஜென்டினா நீர்வீழ்ச்சி போன்ற காட்சிகளில் சிஜிஐ படு சுமார். ட்வைன் ஜான்சன், கல் கதோத் இருவருக்கு மட்டுமே தலா ரூ.145 கோடி ஊதியமாம். இப்படி நட்சத்திரங்களுக்கே பட்ஜெட் காலியானதில், காட்சியாக்கங்களில் சோடை போயிருக்கிறார்கள் போல.
ட்ரெய்லர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிறதா?
’சென்ட்ரல் இன்டலிஜென்ஸ்’, ’ஸ்கை ஸ்க்ராப்பர்’ திரைப்பட வரிசையில் மீண்டும் ட்வைன் ஜான்சனுடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் ராஸன் மார்ஷல். படமாக்கலில் பிரம்மாண்டம் தெறித்தாலும், கதைக்கான எழுத்தில் சுணங்கியிருப்பது உள்ளடக்கத்தில் அவ்வப்போது அப்பட்டமாய் வெளிப்படுகிறது. லாஜிக் மீறலையும் காமெடி கணக்கில் கோர்த்துவிட்டிருக்கிறார்கள். இந்த வகையில், திரைப்படத்தில் முழுநீள வில்லன் இல்லாத குறையைத் திரைக்கதை தீர்த்துவைக்கிறது. ரஷ்ய பின்னணியிலான சிறைக்கூடம், அதையொட்டிய ஆக்ஷன் போன்ற காட்சிகளுக்காக மெனக்கிட்டிருக்கிறார்கள். ஆனால், கால் நூற்றாண்டுக்கும் மேலாக பல ஹாலிவுட் படங்களில் பார்த்துப் பழகிய அந்தச் சித்தரிப்புகளுக்கு இன்னும் சிரத்தை கூட்டியிருக்கலாம்.
இவை உட்பட ட்ரெய்லர் பார்த்து, சிலபல எதிர்பார்ப்புகளுடன் திரைப்படம் பார்ப்பவர்களுக்குச் சற்றே ஏமாற்றமும் காத்திருக்கலாம். கிராஃபிக்ஸ் சொதப்பல்களில் விட்டதை, ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசையில் நிரப்பிவிடுகிறார்கள். ட்வைன் ஜான்சன் அறிமுகமாகும் அந்தத் தொடக்க காட்சி ஒன்றின் மூலமே, ஒளிப்பதிவாளர் மார்கஸ் தன்னை கூகுளில் தேடச் சொல்லிவிடுகிறார்.
ட்வைன் ஜான்சனின் தீவிர ரசிகர்களான சிறார்களுக்கு ‘ரெட் நோட்டீஸ்’ திரைப்படம் பிடித்துப் போகும். நட்சத்திரங்களுக்காகவே திரைப்படம் பார்ப்பவர்களுக்கும் பிரச்சினையில்லை. ஏனைய ரசிகர்களுக்கு முழுப்படமாக இப்படம் ஏமாற்றினாலும், பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளில் சற்றே பொழுதுபோக வாய்ப்புண்டு. திரைப்படத்தைத் தமிழ் டப்பிங்கிலும் ரசிக்க நெட்ஃப்ளிக்ஸ் வழி செய்திருக்கிறது.