பிட்லீ

By காமதேனு

'சரவணா ஸ்டோர்ஸ்' உரிமையாளர் சரவணன் நடிக்கும் திரைப்படத்தின் கதாநாயகி ஊர்வசி ரவுத்தலா, இந்த ஆண்டு நடந்த ஃபிலிம் ஃபேர் விழாவில் ‘சர்வதேச ஐகான்’ விருதைப் பெற்றுள்ளார். விருது விழாவுக்கு அவர் அணிந்து வந்த 60 லட்ச ரூபாய் உடையைப் பார்த்து, பாலிவுட் முன்னணி நடிகைகளே ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார்களாம்.

அது அண்ணாச்சி கடை கிஃப்ட்டா இருக்குமோ?

அஞ்சலி நாயர்

குணச்சித்திர நாயகிகள் கதாபாத்திரங்களில் நடிக்க மலையாள நடிகைகளையே தமிழ் இயக்குநர்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படி ரஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ் வரிசையில் அடுத்ததாகத் தமிழ் சினிமாவில் நுழையவுள்ளார் அஞ்சலி நாயர். விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’, விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’ என்று நம்பிக்கையளிக்கும் தமிழ்ப் படங்களைக் கையில் வைத்துள்ளாராம் அஞ்சலி நாயர்.

வாழவைக்கும் தமிழ்நாட்டுக்கு தண்ணி கொடுக்கச் சொல்லுங்க அம்மணி!

கயடு லோகர்

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில், தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள கயடு லோகருக்கு சரித்திர கால படங்களில் நடிப்பதில் ரொம்ப இஷ்டமாம். மலையாளத்தில், நங்கேலி கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள ‘பத்தொன்பதாம் நூட்டாண்டு’ திரைப்படம் அவர் மனதுக்கு நெருக்கமான ஒன்றாம்.

பேய் படத்துல நடிப்பீங்களா?

ப்ரியாமணி

‘ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸைத் தொடர்ந்து ப்ரியாமணிக்கு ஹிந்தியில் பல திரைப்பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம், அஜய் தேவ்கன் நடிப்பில் ‘மைதான்’ திரைப்படம் என்று சிறப்பான திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறாராம் ப்ரியாமணி.

தமிழ்ப் பொண்ணுக்கு தமிழ் சினிமா வாய்ப்பு இல்லியே?!

கங்கணா ரணாவத்

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் திருமணம் முடித்து குடும்பத்தலைவியாக, ஒரு தாயாக மாறிவிடுவேன் என்று கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். தன்னுடைய இணையரைத் தேர்ந்தெடுத்துவிட்டதாகவும், விரைவில் அவரை அறிமுகப்படுத்துவேன் என்றும் அறிவித்துள்ளார்.

சீக்கிரம் சொல்லுங்க சீசன் முடிஞ்சுடப் போவுது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE