‘தி கலர் பர்ப்பிள்’, ‘ஜாஸ்’, ஈ.டி - எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல்’, ‘ஜுராசிக் பார்க்’, ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’, ‘இண்டியானா ஜோன்ஸ்’ என வகைக்கு ஒரு படம் எடுத்து முத்திரை பதித்த, திரைமேதை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய முதல் படம் ‘ட்யூயல்’(1971). ஒரு தொலைக்காட்சிப் படமாக எடுத்து, அதைத் திரைப்படமாக விஸ்தரித்து ஹாலிவுட் திரையுலகையே மிரட்டியிருந்தார் ஸ்பீல்பெர்க்.
இப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகளாகின்றன. ஒரு கார், ஒரு ட்ரக்... எனப் படத்தில் 2 வாகனங்களைப் பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் ‘ரோடு மூவீஸ்’ வகையறாக்களுக்கு முப்பாட்டன் எனச் சொல்லலாம். ‘ப்ளேபாய்’ இதழில் வெளியான ஒரு சிறுகதையை மையமாக வைத்து, அதிநாயகத் தன்மை இல்லாத ஒரு தத்ரூபமான த்ரில்லர் படமாக ‘ட்யூயல்’ வெளிவந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியும், இன்று நாம் பார்க்கும் பல படங்களில் நகலெடுக்கப்பட்டிருப்பதை உணர முடியும். மொத்தப் படத்தையும் நகலெடுத்து ஹாலிவுட் படங்கள் வரை மலையாளப் படங்கள் வரை உருவாகியிருக்கின்றன. விறுவிறுப்பும் வேகமும் கொண்ட இப்படத்தின் மூலம் உலகுக்கு ஒரு திரைமேதையாக ஸ்பீல்பெர்க் கிடைத்தார். தனது 25 வயதில் திரைக்கு வந்தபோதே அவர் ஒரு முன்னோடியாக வருவார் எனும் எதிர்பார்ப்பை அவர் ஏற்படுத்தினார்.
தொடர்ந்து ‘க்ளோஸ் என்கவுன்டர்ஸ் ஆஃப் தி தேர்டு கைண்ட்’, ‘சேவிங் ப்ரைவேட் ரயான்’, ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’, ‘மைனாரிட்டி ரிப்போர்ட்’, ‘கேட்ச் மீ இஃப் யூ கேன்’ என அவர் தந்த படைப்புகள் அனைத்தும் உலகத் திரைக் களத்தைப் பல படி முன்னே கொண்டுசென்றவை.
இது ‘ட்யூயல்’ படத்தின் ட்ரெய்லர்தான்... மெயின் பிக்சருக்கு அமேசான் ப்ரைம் வீடியோவுக்குச் செல்லுங்கள்: