மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை: நடிகர் ரஜினிகாந்த் கருத்து

By KU BUREAU

சென்னை: மக்களவைத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், நரேந்திர மோடி3-வது முறை பிரதமராக பதவியேற்பது மிகப்பெரிய சாதனை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து நேற்று மாலை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மோடி 3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். இதையொட்டி பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை டெல்லி சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள செல்கிறேன். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

ஜனநாயகத்துக்கு ஆரோக்கியம்: அதேபோல மக்களும் இந்தமக்களவைத் தேர்தலில் ஒரு வலுவான எதிர்க் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு ஆரோக் கியமான அறிகுறியாகும்.

அடுத்த 5 ஆண்டுகள் பாஜகவின் ஆட்சி நன்றாகதான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. இன்னும் முடிவு செய்யவில்லை.

மாநில கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றதுக்கு, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரேமலதா வாழ்த்து: இதற்கிடையே பிரதமருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “குஜராத்தில் 3 முறை தொடர்ந்து முதல்வராக இருந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த நரேந்திர மோடி, அதேபோல தொடர்ந்து 3-வது முறையாகநாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

அவருக்கு எனது வாழ்த்துகள்.அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு மக்கள் பணியை சிறப்பாக ஆற்றவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE