அமைச்சர் தலையீட்டால் திரையரங்கில் வெளியாகும் ‘மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’

By காமதேனு

அமைச்சர் தலையீட்டால் முடிவுக்கு வந்த விவகாரம் : திரையரங்கில் வெளியாகும் ‘மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் கிட்டத்தட்ட ரூ.80 கோடி செலவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும் கூட, 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படம் வெளியாகும் அதே நாளில் மற்ற சில திரைப்படங்களும் வெளியானால், எதிர்பார்த்த எண்ணிக்கையில் திரையரங்கங்கள் கிடைக்காது என்பதுடன் வசூலிலும் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால், படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவுசெய்தார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.

அவரது இந்த முடிவு திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் சலசலப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. கேரள மாநில செய்தித் துறை அமைச்சர் ஷாஜி செரியன் இந்த விஷயத்தில் தலையிட்டு தற்போது சமரசம் ஏற்படுத்தியுள்ளார். அதன்படி, ‘மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ திரைப்படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி திரையரங்கங்களில் வெளியாகும் என்றும், அதன் பின்னரே ஓடிடியில் வெளியாகும் என்றும் சமரச முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றபடி இத்திரைப்பட வெளியீட்டில் சில சலுகைகள் அளிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது

இதுகுறித்து அமைச்சர் ஷாஜி செரியன் கூறும்போது, “தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் இந்த முடிவை எடுத்ததன் மூலம் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE