தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களிலும் பிரபலமான கதாநாயகியாக வலம்வருகிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்று, இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
தற்போது, ‘வேதாளம்’ திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக்கான ‘போலா ஷங்கர்’ படத்தில் சிரஞ்சீவியுடனும், மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’ திரைப்படத்திலும், மலையாளத்தில், மோகன்லாலுடன் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக மலையாள திரைப்படம் ஒன்றைத் தானே தயாரித்து நடிக்கவுள்ளார்.
‘வாஷி’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். இவர், ஏற்கெனவே தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தவர். தற்போது ‘மின்னல் முரளி’ என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.
‘வாஷி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.