’என் கண் முன்பாக வளர்ந்த குழந்தை..’: உருகிய ரஜினி

By எஸ்.சுமன்

அண்மையில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இழப்புக்கு, நடிகர் ரஜினிகாந்த் இன்று(நவ.10) இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் மறைந்தபோது தான் மருத்துவனையில் இருந்ததையும், 2 நாள் கழித்தே தன்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதையும் தன்னுடைய இரங்கலில் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

குரல் வழி தகவலை பகிர்வதற்கான ’ஹூட்’ என்ற சமூக ஊடகத்தில், ரஜினிகாந்தின் இரங்கல் செய்தி வெளியாகி இருக்கிறது. இது ரஜினி மகள் சௌந்தர்யாவின் சொந்த சமூக ஊடகமாகும். ரஜினி ஆக்டிவாக இருந்த டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில், தற்போது அவர் நேரடியாக தகவல்களை பகிர்வதில்லை. ’ஹூட்’டில் தனது பகிர்வு குறித்த தகவலையும், அதற்கான இணைப்பையும் மட்டுமே காணமுடிகிறது.

ரஜினியுடன் புனித்

ரஜினிகாந்த் குரல் பதிவின் எழுத்து வடிவம் இங்கே: ‘அனைவருக்கும் வணக்கம். எனக்கு சிகிச்சை முடிந்து நல்லபடியாக குணமாகி வருகிறேன். (நான்) மருத்துவமனையில் இருக்கும்போது புனித் ராஜ்குமார் அவர்கள் அகால மரணமடைந்திருக்கிறார். அந்த விஷயத்தை 2 நாள் கழிந்த பிறகே என்னிடம் சொன்னார்கள். அதைக்கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என் கண்ணுக்கு முன்பாக வளர்ந்த குழந்தை; திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. பெயரும் புகழும் உச்சியிலிருக்கும்போது, இவ்வளவு சிறிய வயதில் மறைந்திருக்கிறார். அவருடைய இழப்பு, கன்னட திரைப்படத் துறையால் ஈடுசெய்யவே முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடையட்டும்’ இவ்வாறு ரஜினி காந்த் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் குரல் பதிவை, அது வெளியான ஒரு மணி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கேட்டுள்ளனர். முன்னதாக ரஜினிகாந்த் மருத்துவனையிலிருந்து வீடு திரும்பிய தினத்தன்று, தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து குரல் பதிவு வெளியிட்டார். அதன் பிறகு 9 நாள் இடைவெளியில் ரஜினிகாந்தின் குரல் இன்று வெளியாகி உள்ளது. அதன்பொருட்டு ரஜினிகாந்தின் ரசிகர்கள் தங்கள் ’தலைவரி’ன் உடல்நலம் குறித்தான விசாரிப்புகளை அதில் பதிந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE