அடுத்தடுத்து ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் மோகன்லால் திரைப்படங்கள்

By காமதேனு

மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 2’ திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்கிற சரித்திர படத்தையும் ஓடிடி-யில் வெளியிடப்போவதாக, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் அறிவித்துள்ளார்.

இதுதவிர, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் மோகன்லால் நடித்து வரும் மற்ற படங்களான ‘ப்ரோ டாடி’, ‘டுவெல்த் மேன்’, ‘அலோன்’ மற்றும் புலிமுருகன் இயக்குநர் வைசாக், மோகன்லாலை வைத்து இயக்கும் அடுத்த படம் என அடுத்தடுத்து 4 படங்களையும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட அவர் முடிவு செய்துள்ளாராம்.

இத்திரைப்படங்களை திரையரங்கங்களில் திரையிட்டு, 21 நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் வெளியிடப் படக்குழுவினர் அனுமதி கேட்டதாகவும், திரையரங்கு உரிமையாளர்கள் அதை ஏற்காமல், 80 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததால், திரையரங்கத்துக்குப் பதிலாக ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடும் முடிவை எடுத்திருப்பதாகத் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE