ரஜினி சரிதம் - 40 பிளாட்பாரத்தில் படுத்திருந்த ரஜினி!

By திரை பாரதி

இயல்பாகவே பிறருக்கு உதவும் மனம் கொண்டவர் ரஜினி. ஆரம்ப நாட்களில் குறைவான சம்பளம் வாங்கியபோதே, அதிலிருந்து, கஷ்டப்பட்டுவந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காதும் காதும் வைத்ததுபோல் உதவினார். சம்பளம் 5 லட்சத்தைத் தொட்டபோது திரையுலகிலும் பலருக்கு உதவியதுடன் உதவி கேட்டுவந்த ரசிகர்களுக்கும் உதவிக்கரம் நீட்டினார் ரஜினி.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைத் தொட்டபிறகு, பள்ளி - கல்லூரிக்கான கல்விக் கட்டணம், உயர் சிகிச்சைக்கு உதவி மட்டுமல்லாது தனது பட ரிலீஸ் நேரத்தில் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை விட்டுக்கொடுப்பது வரை, பல வடிவங்களில் தன்னுடைய உதவியைத் தொடர்ந்தார் ரஜினி. உதவிகேட்டு வருபவர்கள் உண்மையாகவே இக்கட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிட்டால், தாமதம் இல்லாமல் ரஜினியிடமிருந்து உதவி கிடைக்கும். பிறருக்குச் செய்யும் உதவிகள் எதற்கும் மறந்தும் விளம்பரம் தேடிவிடக் கூடாது, ஊடகங்களின் காதுக்கும் அவை சென்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் ரஜினி.

ஆனால், ரஜினியால் உதவி பெற்றவர்கள் மவுனமாக இருக்கவில்லை. இயக்குநர் சிகரம் பாலசந்தரே, ரஜினியிடம் தான் பெற்ற உதவிகளை பொதுவெளியில் வெளிப்படுத்தியபோது, கையறு நிலையில் ரஜினியிடம் உதவிபெற்றவர்கள் மவுனமாக இருப்பார்களா?

கடனிலிருந்து கப்பாற்றிய மாணவன்

ரஜினி பிறருக்கு மறுக்காமல் உதவி செய்யத் தொடங்கியது, அவருக்குள் ஆன்மிகத் தேடல் வந்த பிறகுதான் என்பது கேபியின் தீர்க்கமான முடிவு. “தான் யார் என்பதை அவனால் தெரிந்துகொள்ள முடிந்தது. தன்னை ஏதோவொரு மகத்தான சக்தி ஆட்டி வைக்கிறது என்று புரிந்துகொள்ள முடிந்தது. அதைத் தேடிப்போவதில்தான் அவனுக்கு நிம்மதி கிடைக்கிறது. இதுதான் அவனை மென்மைப்படுத்தியது; மேன்மைப்படுத்தியது” என்று சொல்லியிருக்கும் கேபி, கடனிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ரஜினியைப் பற்றியும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

“நான் ரஜினிக்குச் செய்த உதவிக்கு அவன் என்னிடம் நன்றிக்கடன்பட்டிருப்பதாகப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவன் தன்னுடைய நன்றியைக் காட்டியதுபோல் யாராலும் காட்டமுடியாது. நான் கடனில் சிக்கித் தத்தளித்த போதெல்லாம் ஒருமுறையல்ல... 3 முறை எனக்காக படங்களில் நடித்து என்னைக் காப்பாற்றியிருக்கிறான். நான் தான் அவனுக்குக்குக் கடன்பட்டிருக்கிறேன். சொல்லக் கூச்சமாக இருந்தாலும் உண்மையைப் பேசும் சுகத்தைத் தள்ளிப்போட முடியுமா?” என்று சொல்லி இருக்கிறார் கேபி.

தன்னுடைய மாணவன் ரஜினி, என்.டி.டிவியால் சிறந்த பொழுதுபோக்காளர் என்று விருதளித்துப் பாராட்டப்பட்டபோது கேபி மனம் திறந்து பகிர்ந்தவற்றையும், பாபே சாகேப் விருது பெற்றிருக்கும் இந்த நேரத்தில் நினைவுகூர்வது மிகுந்த பொருத்தமாக இருக்கும்.

விருதுகளில் விருப்பமில்லாத ரஜினி!

“எனக்கு ஏதாவது பிரச்சினை வந்து ரஜினியைச் சந்திக்க அவன் வீட்டுக்குச் செல்வோம் என்றால், என்னை வீட்டுக்கு வரவிடவே மாட்டான். ‘நான் வரேன் சார்’ என்று அவனே வந்துவிடுவான். ‘நீங்க ரொம்ப உழச்சாச்சு சார்... உங்க சாதனைகள் அப்படியே இருக்கும் இன்னும் பல தலைமுறைக்கு. நிம்மதியா ரெஸ்ட் எடுங்க’ என்று வாஞ்சையுடன் சொல்வான். அன்றைக்கு எப்படியிருந்தானோ அதேபோல் இன்றைக்கும் என்னிடம் மிகவும் மரியாதையாகவும் இருந்து, மிகத் தேவையான தருணங்களில் எனக்கு உதவ ஓடோடி வந்த ரஜினிக்கு நான் எப்படி நன்றி சொல்வது?

ரஜினிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும் என்று எனக்கு ஆசையிருக்காதா? ஆனால், அதிலெல்லாம் அவனுக்கு ஆசையில்லை. தன்னுடைய படங்கள் வியாபார ரீதியாக வெற்றிபெற வேண்டும்; தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வரக்கூடாது. தன்னுடைய ரசிகர்கள் திருப்தியாக இருந்தால் போதும். பரிசோதனை முயற்சிகள் தன்னைப் பொறுத்தமட்டில் ஆபத்தானது என்றே அவன் நினைக்கிறான். ‘குசேலன்’, ‘பாபா’ போன்ற சோதனை முயற்சிகளை அவனுடைய ரசிகர்கள் ஏற்கவில்லை.

ரஜினிக்கே தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை... நான் ரஜினியை யாரோடும் ஒப்பிட விரும்பவில்லை. சரியாகப் புரியவேண்டும் என்பதற்காக ஒரு உதாரணம் சொல்கிறேன். அமிதாப் பச்சன்... அவரைத் தாண்டியும் ரஜினியால் பண்ணமுடியும். அந்த அளவுக்கு ஒரு கதாபாத்திரத்தை நுணுக்கமாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ரஜினுக்கு உண்டு. அதேபோல் அமிதாப்புக்கு இணையான வசீகரம்... அந்தத் திரைத்தோற்றப் பொலிவு (screen presence) ரஜினிக்கு இருக்கிறது.

ஆனால் அந்த நாசூக்கு தன்மை (sophistication), அந்தஸ்து (stature) தனக்கு வேண்டாம் என்பது ரஜினியின் முடிவு. அப்படிச் செய்தால், தன்னுடைய ரசிகர்களை இழந்துவிடுவோமோ என்கிற அச்சம் ரஜினிக்கு இருக்கிறது. நான் சொல்கிறேன்... ரஜினிக்கு அந்த அச்சம் தேவையில்லை. வயதானவர்களிலிருந்து சின்னக் குழந்தைகள் வரை, படித்தவர் முதல் பாமரர் வரை ரஜினி ரசிகர்களின் எண்ணிக்கை பல கோடி. வேறு யாருக்கும்... எப்போதும் இப்படி இருந்ததில்லை. இந்த தசாப்தத்தில் சிறந்த பொழுதுபோக்கு நாயகனாக ரஜினியை என்டிடிவி அறிவித்ததில் ஆச்சரியம் இல்லை (No wonder that NDTV declared him as the best entertainer of the Decade.)

இப்படியொரு பாராட்டு நம்மவர்களில் யாருக்கும் இதுவரை கிடைத்ததில்லை” என்று புகழ்ந்திருக்கிறார் கேபி. இனி, கேபியிடமே “எனக்குப் பிடித்த இயக்குநர் மகேந்திரன்” என்று சொன்ன ரஜினி, மகேந்திரனுடன் இணைந்து பயணித்த நாட்களுக்குப் பயணிப்போம்.

பிளாட்பாரத்தில் தூங்கிய ரஜினி!

‘ஆடு புலி ஆட்டம்’ படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட ரஜினியும் மகேந்திரனும் ஒரே மாதிரியான ரசனையுடையவர்களாக இருந்தனர். “சினிமா ஒரு காட்சி ஊடகம். ஆனால், அதன் தன்மைக்கு நேரெதிராக பல அம்சங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. நான் எடுக்க விரும்பும் சினிமாவே வேறு” என்று ரஜினியிடம் சொன்னார் மகேந்திரன். ரஜினியும் “நான் சிறந்த நடிகனாக அறியப்பட விரும்புகிறேன். ஆனால், அதற்கான வேடங்கள் எனக்கு அமைவதில்லை” என்று தன்னுடைய ஆதங்கத்தை மகேந்திரனிடம் கொட்டினார்.

‘ஆடு புலி ஆட்டம்’ மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது. இருவரும் தொடர்ந்து சந்திக்க ஆரம்பித்தார்கள். மகேந்திரனை வீட்டுக்கு வரும்படி அழைக்கத் தொடங்கினார் ரஜினி. இருவரும் அதிகாலை 4 மணிவரை தூங்காமல் பேசிக்கொண்டிருப்பார்கள். தூங்கலாம் என்று நினைக்கும்போது படப்பிடிப்பு வேன் வந்துவிடும். எழுந்து படப்பிடிப்புக்கு கிளம்பிச் சென்றுவிடுவார்கள்.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் கட்டத்துக்கு வந்திருந்தது. சென்னைக்கு அருகில் புறநகரில் படப்பிடிப்பு நடந்தது. மறுநாள் படப்பிடிப்பு இல்லை. அன்று படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குநர், மேனேஜர் என எல்லோரும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். ரஜினி, மகேந்திரன், அசோசியேட் இயக்குநர் மூவருக்காகவும் ஒரு அம்பாசிடர் கார் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், “வீட்ல ஒரு குடும்ப நிகழ்ச்சி. நான் சிக்கிரம் போகணும் வர்றீங்களா?” என்று அசோசியேட் இயக்குநர் அவசரப்படுத்த, “நீங்கள் கிளம்புங்கள்... நாங்கள் டாக்ஸி அரேஞ்ச் செய்துகொள்கிறோம்” என்று சொல்லிவிட்டார் ரஜினி.

ஆனால், டாக்ஸிக்கு சொல்லியனுப்பி வரவேயில்லை. நன்றாக இருட்டிவிட்டது. சாப்பாடு கொண்டுவந்த பாத்திரங்கள், நாற்காலிகள் எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு புரொடக்‌ஷன் வேன் கடைசியாகப் புறப்பட்டது. அப்போது இரவு 8 மணி. அந்த வேனையும் விட்டுவிட்டால் வீடுபோய் சேரமுடியாது என்று ரஜினியும் மகேந்திரனும் ஓடிப்போய் தொற்றிக் கொண்டார்கள். மெல்ல மெல்ல ஊர்ந்த வேன், தாம்பரத்தில் இருந்த பரோட்டா கடை வாசலில் நின்றது. டிரைவர், “அண்ணே... வாங்க சாப்பிடலாம்” என்றார்.

ரோட்டோர பரோட்டா கடையில் அமர்ந்தபடி ‘பதேர் பாஞ்சாலி’ பற்றிப் பேசித் தீர்த்த மகேந்திரனிடம், “அதைவிட சிறந்த படம் நீங்க எடுக்கணும்... அதுல நான் நடிக்கணும். அப்படியொரு ஸ்கிரிப்ட் பண்ணுங்க மகி” என்றார் ரஜினி. பரோட்டா கடையிலேயே 2 மணிநேரம் ஓடிவிட்டது. அப்போது சிலர், “நீங்க பரட்டையா நடிச்ச ரஜினி தானே?” என்று கேட்டுக்கொண்டு பக்கத்தில் வந்தனர். அதிலொருவர், “டேய்... நீ என்ன பெரிய வஸ்தாதா?” என்று வம்புக்கும் வந்துவிட்டார். அப்போது மகேந்திரன், ‘இதுதான் ரஜினி வேணும்.. உங்களக் கேரக்டரா ஆடியன்ஸ் நியாபகம் வச்சுக்கணும். வாங்க போலாம்” என்று சொன்னார்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் தியாகராய நகர் பாண்டிபஜாருக்கு வந்து சேர்ந்தது வேன். “சார் நீங்க ரெண்டு பேரும் இங்க இறங்கி ஒரு அரை மணிநேரம் வெயிட் பண்ணுங்க. நான் கம்பெனி வரைக்கும்போய் கணக்குக் குடுத்துட்டு வந்து உங்களைப் பிக் அப் பண்ணி வீட்ல விட்டுடுறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார் வேன் டிரைவர். வேன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் பேய் மழை.

வேன்காரர் திரும்ப வந்து தங்களை அழைத்துப் போவார் என்று அங்கேயே இருந்த பேருந்து நிழற்குடையில் உட்கார்ந்து, மீண்டும் உரையாடலைத் தொடங்கினார்கள் இருவரும். நள்ளிரவு 12 மணிக்கு மழைவிட்டது. சாலையில் ஆள் அரவமில்லை. அப்போதும் வேன்காரர் வரவில்லை. ரஜினியும் மகேந்திரனும் கைவசம் இருந்த ஒரேயொரு சிகரெட்டை கூட்டணிபோட்டு புகைத்துவிட்டு, பிளாட்பாரத்திலேயே படுத்துத் தூங்கிப்போனார்கள்.

அதிகாலை 5 மணிக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. பிளாட்பாரத்தில் படுத்திருந்த ரஜினியையும் மகேந்திரனையும் பால்காரர்களும் பேப்பர்காரர்களும் சூழ்ந்துகொண்டு, “ஹேய் ரஜினிடா…” என்று பிடித்துக்கொண்டார்கள். ரோட்டுக்கு ஓடிப்போய் ஆட்டோவை அழைத்து வந்த மகேந்திரன், ரஜினியை அதில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE