தா.செ.ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. இருளர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தில் மிகைப்படுத்தப்பட்ட உண்மையோடு, சில விஷயங்களில் வேண்டுமென்றே சில இனத்தினர் மீது வன்மம் புகுத்தப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இயக்குநரும், நடிகருமான வ.கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அக்கண்டனத்தில், “உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று பிரகடனப்படுத்திவிட்டு, படைப்பின் பரபரப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு குடியின் அடையாளமான அக்னிக் குண்டத்தைத் திட்டமிட்டு நேர்மையற்ற ஒரு கொடூரனின் வீட்டு அடையாளமாகக் காட்சிப்படுத்தியதற்காகப் படத்தின் தயாரிப்பாளர், நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் ஞானவேலுவுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு படைப்பாளனாக நானும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்டோ சங்கர், சந்தனக்காடு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளேன். ஒரு படைப்பு என்பது எப்போதும் தன் சமூகத்தைப் பண்படுத்த வேண்டுமே தவிர, ஒருபோதும் புண்படுத்தி விடக்கூடாது. ஒரு கலவரத்தைப் படைப்பாக்கலாம். ஆனால், ஒரு படைப்பு ஒருபோதும் கலவரத்தை உருவாக்கி விடக்கூடாது.
அந்தோணிசாமி என்கிற மிருகம் செய்தது ஒரு மன்னிக்க முடியாத குற்றம். அவன் தவறு செய்தான் என்பதற்காக அவன் சார்ந்த சமூகத்தையோ, மதத்தையோ கூட குற்றம் சுமத்துவது நேர்மையாகாது. ஆனால், நீங்கள் அதனையும் தாண்டி அந்தோணிசாமி என்கிற பெயருக்குப் பதிலாகக் குருமூர்த்தி எனப் பெயரிட்டு குருவையும், அக்கினிகுண்டத்தையும் திட்டமிட்டு அவமானப்படுத்தியது, அந்தோணிசாமி செய்த தவறையும் தாண்டி நீங்கள் செய்த மாபெரும் தவறு. தவறுதலாக நாட்காட்டி இடம் பெற்றுவிட்டது எனப் படக்குழு சொன்னதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.
சிரத்தை எடுத்து அக்னி குண்டத்தோடு 1995-ல் எனப் பதிவு செய்து, சுவரில் மாட்டப்பட்ட நாட்காட்டி தவறுதலாக வந்துவிட்டது என்று இதற்கு மேலும் உங்களால் எப்படிப் பொய் சொல்ல முடிகிறது? மேலும், இந்த வழக்கில் நீதி கிடைத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என அந்தக் குரலற்றவர்களின் குரலாக இறுதிவரை உயிர் உருக அருகில் நின்ற கோவிந்தன் யார் என்பதையும், அவரின் தியாகத்தையும் மறந்தீர்களா? அல்லது மறைத்தீர்களா?
சில நூற்றாண்டுகளாகவே இந்த மண்ணிற்குச் சம்பந்தமில்லாத ஒரு கூட்டம் தங்களின் அரசியலுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் வடக்கே வன்னியர்கள், பட்டியல் சமூகத்தினரை அடித்துக் கொல்ல வைத்ததோடு மட்டுமல்லாமல் தெற்கே தேவர்கள், தேவேந்திர குல வேளாளர்கள் இடையிலேயும் கலவரத்தை உருவாக்கி தமிழர் குடிகளுக்குள் நிரந்தர பகையினை உருவாக்கிக் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நேர்மையற்ற காட்சியினை நீக்குவதோடு, தங்களையும் சரி செய்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.