பொதுவுடைமை இயக்கத்தை கவுரவித்த ’ஜெய் பீம்’!

By சி.மகேந்திரன்

‘ஜெய் பீம்’ திரைப்படம் மூலம் இருளர் மக்கள் உள்ளிட்ட விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் இன்னல்கள், டாக்டர் அண்ணல் அம்பேத்கர் ஒளியில் சட்டப் போராட்டம் நடத்துபவர்களின் முக்கியத்துவம் போன்ற பல விஷயங்கள் பேசு பொருளாகி உள்ளன. இதுபோக, படம் நெடுக மனித உரிமைகளுக்கான இடதுசாரிகளின் இடைவிடாத போராட்டம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அது பெரிதும் சிலாகித்துப் பேசப்படவில்லை. இந்நிலையில் 'ஜெய் பீம்’ படத்தைப் பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சி.மகேந்திரன், தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு இது:

’ஜெய் பீம்’ திரைப்படம் பார்த்தேன். அது எனக்கு ஒரு திரைப்படமாகத் தோன்றவில்லை. எளிய மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடி வரும் ஆயிரம் ஆயிரம் கம்யூனிஸ்டு போராளிகளின் வாழ்க்கையாகத் தெரிகிறது.

திரைப்பட நாயகன் சந்துரு ஒரு குறியீடு. இதற்குள் ஆயிரம் ஆயிரம் சந்துருக்கள் இருக்கிறார்கள். அந்த வழக்கறிஞர்கள் ஒவ்வொருவராக என் ஞாபகத்திற்கு வந்தார்கள். நான் அடைந்த மனநிறைவுக்கு அளவே இல்லை. ‘ஏதுமற்ற' மக்களின் துயரத்திலும் அதற்காகப் போராடி வருபவர்களின் உறுதிப்பாட்டிலும் நான் கரைந்து போனேன். காரணம் அப்படி போராடி வருபவர்களில் நானும் ஒருவன்.

ஒரு மாபெரும் கலைப்படைப்பின் சிறப்பு ஒவ்வொரு தனி மனித அனுபவத்தையும் சமூக பொது அனுபவமாக மாற்றி வீரியம் கொள்ள வைப்பதில்தான் இருக்கிறது. புரட்சி என்னும் சமூக மாற்றத்தின் சாத்தியங்கள் இதிலிருந்துதான் சாத்தியமாகின்றன. இந்த சாத்தியத்திற்கான பாதையை ‘ஜெய் பீம்‘ திறந்த வைத்துள்ளது.

குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பொறுப்பு காவல் துறையிடம் இருக்கிறது. சிறையிலிருந்து விடுதலையானவர்களில் குற்றம் செய்யும் பழக்கமுள்ள சாதி, குற்றமே செய்தாத சாதி என்று சிறை வாயிலிலேயே பிரிக்கப்படுகிறார்கள். தேங்கிக் கிடக்கும் வழக்குகளை அகற்ற இந்த விளிம்புநிலை மனிதர்கள் சந்தைக் கடையில் புரோக்கர்களால் நடத்தப்படும் சண்டையைப்போல நடத்தப்படுகிறார்கள். உலகில் பெரியது என்று பெருமைபட்டுக் கொள்ளும் இந்திய ஜனநாயகம் இங்கு வெட்கித் தலைக் குனிந்து விடுகிறது.

1982-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் ஒன்றில் பங்கேற்று 15 நாட்கள் மதுரை சிறையில் இருந்தேன். அப்பொழுது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா அவர்கள் சென்னை சிறையில் இருந்தார். என்னைச் சுற்றி கண்ணீரோடும் புலம்பலோடும் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவர்கள் அனைவரும் மாத கணக்கிலும், சிலர் வருடங்கள் கடந்தும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படாத விசாரணைக் கைதிகளாக இருந்தார்கள். திருட்டு வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட விளிம்பு நிலை மக்கள் அவர்கள். அந்தக் கண்ணீரை, படம் எனக்கு ஞாபகப்படுத்தியது.

திரைப்படம் பொதுவுடைமை இயக்கத்திற்கு ஒரு கௌரவத்தை அளித்திருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடித்தளத்தில் நின்று மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடக் கூடிய லட்சக்கணக்கான பொதுவுடைமை இயக்கத் தொண்டர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவப்படுத்தியுள்ளது. சில திரைப்படங்கள் கம்யூனிஸ்டுகளின் அர்ப்பணிப்பைக் கேவலமாகக் கொச்சைப்படுத்தியபோது வேதனையடைந்த மனம் இப்பொழுது திருப்தியில் இருக்கிறது.

நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்கையை அப்படியே காட்டியதன் மூலம் திரைப்படம் தனது கடமையைச் சிறப்புறச் செய்துள்ளது. திரைப்படத்தில் சந்துரு முந்தைய கம்யூனிஸ்டு வழக்கறிஞர் பாரம்பரியத்தின் தொடர்ச்சி.

திரைப்படக் கலைஞர் சிவகுமார் அவர்களின் மீது எனக்குத் தனிப்பட்ட மதிப்புண்டு. அவரின் தொடர்ச்சியாக ஜோதிகா, சூர்யா தம்பதியினர் இந்த மாபெரும் கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். சூர்யாவை பல்வேறு பாத்திரங்களில் ரசித்திருக்கிறேன். ஆனால், சந்துருவாக தோற்றம் தருவது என்னை பிரமிக்க வைத்துவிட்டது. சமூக மாற்றத்திற்கான அறிவார்ந்த மிகப்பெரிய ஒரு ஆளுமையை மனக்காட்சியில் பதிய வைத்துவிட்டார். மனம் மகிழ்ந்து போனேன். சில இடங்களில் கண் கலங்கிப் போனேன்

இந்திய அரசியல் சட்டம் வலிமை மிக்கது. அதன் வலிமை ’ஜெய் பீம்’ என்பதில் இருக்கிறது. மிக வலிமை வாய்ந்த ஆளுமையான சந்துருவை போன்ற ஆயிரமாயிரம் இளம் வழக்கறிஞர்களும், வெகுமக்களும் இணைந்து இந்த கொடுமைகளுக்கு எதிராக கைகளை உயர்த்த வேண்டும் என்பதை திரைப்படம் வலியுறுத்துகிறது. இயக்குநர் ஞானவேல் அவர்களைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை. தமிழ் அகராதிகளில் தேடிக் கொண்டிருக்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE