என்னதான் ஆச்சு கௌதம் மேனனுக்கு? - ‘அன்புச்செல்வன்’ திரைப்படக் காட்சிகளை வெளியிட்ட படக்குழு

By காமதேனு

வினோத் குமார் இயக்கத்தில், கௌதம் மேனன் நடிக்கவுள்ளார் என்ற செய்தியுடன் ‘அன்புச்செல்வன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. பா.ரஞ்சித் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து பல ரசிகர்களும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இந்நிலையில் “இந்தத் திரைப்படத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் என்று சொல்லப்படுபவரை நான் பார்த்ததுகூட இல்லை. பெரிய பெரிய ஆட்களை வைத்து எப்படி இந்தத் தயாரிப்பாளர் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிகிறது? இப்படி மோசடியை மிக எளிதாகச் செய்வதைப் பார்த்தால் அச்சமாகவும், கவலையாகவும் இருக்கிறது” என்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் கௌதம் மேனன் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் அவருடைய ட்விட்டை அகற்றினார். வளர்ந்து வரும் இயக்குநருக்கு உதவுவதற்காக ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்ததால், அவருக்கு இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அவரது நலம் விரும்பிகள் தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட இவ்விஷயத்தில் மேலும் ஒரு திருப்பம் நிகழ்ந்துள்ளது. கௌதம் மேனன் ‘அன்புச்செல்வன்’ திரைப்படத்தில் நடித்திருப்பதற்கான ஆதாரங்களை, அத்திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கௌதம் மேனன் நடித்த சில காட்சிகளை யூடியூப்பில் அத்திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கௌதம் மேனன் தரப்பில் என்ன விளக்கம் சொல்லப்போகிறார் என்று சமூக வலைதளத்தில் வைரலாக விவாதிக்கப்பட்டுவருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE