இந்தியத் திரையுலகில் இன்னமும் எளிதில் கைவசமாகாத மந்திரமாகவே இருந்துவருகிறது வரலாறு. அதுவும் சுதந்திரப் போராட்ட வரலாறு என்றால், அதில் வரலாற்றுத் துல்லியத்தையும் கடந்து அதீத உணர்ச்சிப் பெருக்கும், தேசபக்தியைத் தட்டியெழுப்பச் செய்யும் பிரச்சார தொனியும் அதிகமாகவே இருக்கும். ஆவணங்களும் சான்றுகளும் நிறைந்த வரலாற்றுப் பதிவுகளே பெரும்பாலும் இந்த வடிவில் வெளியாகும் சூழலில், முழுமையாக அறியப்படாத, பெரும்பாலும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் நிறைந்த ‘உதம் சிங்’கின் வாழ்க்கையின் முக்கியத் தருணங்களை, ரத்தமும் சதையுமாக முன்வைக்கும் ‘சர்தார் உதம்’ திரைப்படம், கலைநேர்த்தியும் உலகத் தரமும் கொண்ட படைப்பாக வெளிவந்திருக்கிறது.
அறியப்படாத தகவல்கள்
பள்ளிப் பாடப் புத்தகங்களில்கூட அதிகம் இடம்பெற்றிராத விடுதலைப் போராட்ட வீரர் உதம் சிங். அவரது தாய் மண்ணான பஞ்சாப் மாநிலத்தின் பள்ளிப் பாடங்களில்கூட, ஓரிரு வரிகளில் வரலாறு அவரைக் கடந்து சென்றிருக்கிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்துக்குக் காரணமான மைக்கேல் ஓ'ட்வையரை லண்டனில் சுட்டுக்கொன்ற பின்னர்தான், உதம் சிங் எனும் மனிதர் இருப்பதைப் பலரும் அறிந்துகொண்டனர்; இந்தியத் தலைவர்கள் உட்பட. அதன் பின்னர், மூன்றே மாதங்களில் விசாரணை நடத்தப்பட்டு அந்த மாமனிதர் தூக்கிலிடப்பட்டார். அவரைப் பற்றிய தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கின்றன. சில புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் கடந்து, சுதந்திரப் போராட்டத்தின் பிற தலைவர்களுக்கு நிகராக அவர் பேசப்படுவதில்லை. ஷூஜித் சிர்க்கார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம், உதம் சிங் குறித்த உரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது. பெரும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உதம் சிங் தொடர்பாகப் பிற்பாடு வெளியான பல தகவல்கள் மிகுந்த வியப்பை அளிப்பவை. ஜாலியன் வாலாபாக் நினைவு நூற்றாண்டை ஒட்டி பத்திரிகையாளர் அனிதா ஆனந்த் எழுதிய ‘பேஷன்ட் அசாஸின்’ புத்தகத்தில் உதம் சிங் அமெரிக்காவுக்குச் சென்று பணியாற்றியதாகவும் ஒரு தகவல் உண்டு. கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தில் உதம் பணிபுரிந்ததாகவும், அங்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகவும் அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்ட தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகளும் எழுந்தன. அதேவேளையில், பிரிட்டனில் இருந்த காலத்தில் ‘தி எலிஃபென்ட் பாய்’, ‘தி ஃபோர் ஃபெதர்ஸ்’ என 2 ஆங்கிலப் படங்களில் துணை நடிகராக உதம் சிங் நடித்திருக்கிறார் எனும் செய்தி நம்மை ஆச்சரியப்பட வைப்பது. ‘சர்தார் உதம்’ படத்தில் பிரிட்டனுக்குச் சென்ற பின்னர் மைக்கேல் ஓ'ட்வையரின், வீட்டில் சில நாட்கள் பணியாளராக வேலை பார்த்ததாக சித்தரிக்கப்படுகிறது. அது தொடர்பான மேடை நாடகப் பதிவுகள் உண்டு.
அதேபோல், ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தின்போது உதம் சிங் அங்கு இருந்தாரா, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தாரா என்பது குறித்து வெவ்வேறு தகவல்கள் நிலவுகின்றன. எனினும், ஒழுங்கற்ற தரவுகளை ஒரே இழையில் இணைத்து சுவாரசியம் குன்றாத திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள் சுவெந்து பட்டாச்சார்யாவும், ரித்தேஷ் ஷாவும். வரலாற்று ரீதியிலான தரவுகளின் அடிப்படையில் சம்பவங்களை அழுத்தமாகவே கோர்த்திருக்கிறார்கள்.
ஜாலியன் வாலாபாக் சம்பவம்
பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் முற்றிலும் தடை செய்த ரவுலட் சட்டம், இந்தியர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்துக்காக யுத்தக் களத்தில் இறங்கிய இந்திய வீரர்கள் நாடு திரும்பிய பின்னர், தங்களுக்கு எதிராகத் துப்பாக்கி ஏந்தக்கூடும் எனும் அச்சம் பிரிட்டிஷ் அரசுக்கு இருந்ததன் விளைவாகவே, ரவுலட் சட்டம் கொண்டுவரப்பட்டது என வரலாற்றாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்தச் சட்டம் அமல்படுத்தப்படக் கூடாது என காந்தி உள்ளிட்ட தலைவர்கள் போர்க்கொடி எழுப்பியும் பிரிட்டிஷ் அரசு பின்வாங்கவில்லை. சட்டம் அமல்படுத்தப்பட்டதும் சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தி தொடங்கினார். நாடு முழுவதும் எதிரொலித்த அந்த அகிம்சைப் போராட்டம் பஞ்சாபிலும் வலுவாக ஒலித்தது. சத்யபால், சையஃபுதீன் கிச்லு எனும் முக்கியத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், மக்கள் கொந்தளிப்பில் இருந்தனர்.
பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ’ட்வையர் அந்தப் போராட்டத்தை நசுக்க, அமிர்தசரஸ் நகரின் கட்டுப்பாட்டை ராணுவ ஜெனரல் டயரிடம் ஒப்படைத்திருந்தார். அந்தக் கொடூர டயர், 1919 ஏப்ரல் 13-ல் நிகழ்த்திய படுகொலை உலகறிந்தது. அந்தக் கொடூரச் சம்பவம் குறித்து துளியும் குற்றவுணர்வோ, துடிக்கத் துடிக்க உயிரிழந்த தளிர்கள் குறித்த இரக்க உணர்வோ பிரிட்டிஷாரிடம் வெளிப்படவில்லை என்பதுதான், இதில் இன்னும் கொடூரமான விஷயம். 1857 சிப்பாய்க் கலகம் போல், இன்னொரு கலகம் உருவாகிவிடாமல் இரும்புக் கரம் கொண்டு தடுத்த நடவடிக்கை என்றே மைக்கேல் ஓ’ட்வையர் கருதினார். எதை வேண்டுமானாலும் செய்துகொள்ள ஜெனரல் டயருக்கு அதிகாரம் அளித்தார். அறுவடைத் திருநாளான பைசாகி பண்டிகையைக் கொண்டாடவும், ரவுலட் சட்டம், தலைவர்கள் கைது போன்றவற்றுக்கு அமைதியாகத் தங்கள் எதிர்ப்பை அமைதியான முறையில் காட்டவும் அங்கு கூடியிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 379 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். உண்மையில் அந்த எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்தது. அப்போது உதம் சிங்குக்கு வயது 20. அங்கு கூடியிருந்த மக்களுக்குக் குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் மற்ற இளைஞர்களோடு சேர்ந்து அவர் ஈடுபட்டிருந்தார். படத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த தருணத்தில், ஆதரவற்றோர் இல்ல அறையில் தூங்கிக்கொண்டிருந்ததாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உதம் சிங், பேச்சுத் திறனற்ற மாற்றுத் திறனாளிப் பெண்ணைக் காதலித்தாரா, அந்தப் பெண்ணும் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானாரா என்பதெல்லாம் ஊகங்கள். சொல்லப்போனால் படத்தின் சுவாரசியத்துக்காகச் சேர்க்கப்பட்டவை. எனினும், உதம் சிங் எனும் அசாத்தியமான சுதந்திரப் போராளி இருந்தார் என்பதையும், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக மைக்கேல் ஓ’ட்வையரைப் பழிவாங்கினார் என்பதையும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து இனி யாராலும் அகற்ற முடியாது.
21 வருடத் தேடல்
21 வருடங்களாகத் தன் மனதை உலுக்கிக்கொண்டிருந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம், இறுதியில் மைக்கேல் ஓ’ட்வையரைச் சுட்டுக்கொல்லும் கணம் வரை உதம் சிங்கின் மனதில் நெருப்பாகக் கனன்றுகொண்டே இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு உதம் சிங்கை அலையச் செய்தது. ஆனால், இலக்கின்றி அவர் சுற்றித் திரியவில்லை. அவர் மனதில் இருந்த பழிவாங்கும் உணர்ச்சி கடைசியில் இலக்கை நோக்கி அவரது கைத்துப்பாக்கியை முழங்கச் செய்தது. கூடவே, ஒவ்வொரு நாட்டிலும் அவர் அவதானித்த அடக்குமுறை ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அவரது மனதைத் துன்புறுத்திக்கொண்டே இருந்தன. ஜெனரல் டயரைத் தன் கையால் கொல்ல முடியாத ஆதங்கமும் அவருக்கு இருந்தது.
இவை அனைத்தையும் தனது படைப்பில் மிக நுட்பமாகப் பதிவுசெய்திருக்கிறார் ஷூஜித். குறிப்பாக, அதீத உணர்வுக்குவியலாக அல்லாமல், உண்மைக்கு நெருக்கத்தில் இவற்றைப் பதிவுசெய்திருக்கிறார். பள்ளி நாட்களிலிருந்து தனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய பகத் சிங் குறித்து ஒரு படம் எடுக்க எண்ணிய ஷூஜித், ஜாலியன் வாலாபாக் தொடர்பான ஆய்வில் இருந்தபோது, உதம் சிங்கின் அசாதாரண வாழ்க்கை அவருக்கு அறிமுகமானது. 21 வருடங்கள் காத்திருந்து மைக்கேல் ஓ’ட்வையரை உதம் சிங் சுட்டுக்கொன்றதைப் போலவே, 21 ஆண்டுகள் தொடர்ந்து உதம் சிங் குறித்து ஆய்வுசெய்து தனது லட்சியக் கனவைத் திரைமொழியில் வார்த்தெடுத்திருக்கிறார் ஷூஜித்.
அவர் இயக்கிய மற்ற படங்களின் கதாபாத்திரங்கள் அவரது வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களிலிருந்து பிரதியெடுக்கப்பட்டவர்கள். ஆனால், இந்தப் படம் ஒரு வரலாற்று நிகழ்வின் சாட்சியம். அதேவேளையில் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்ட மனிதரின் கதையும் அல்ல. எனினும், தனக்குக் கிடைத்த தரவுகள், ஆவணங்களின் அடிப்படையில் சிறிதளவு புனைவைச் சேர்த்து ஒரு சாமானிய ரசிகருக்கும் சென்று சேரும் வகையில் அடர்த்தியான திரைக்கதையை ஷூஜித் உருவாக்கியிருக்கிறார்.
இதில் புனைவு என்பது வெறும் கற்பனை அல்ல. உதம் சிங்கின் அந்த ஒற்றைச் செயலை நோக்கி அவரை உந்தித்தள்ளிய நகர்வுகளின் தொகுப்பை, கிடைத்த வரலாற்றுத் தரவுகளின் துணையுடன் தர்க்க ரீதியாக, இன்னும் துல்லியமாகச் சொன்னால் உளவியல் ரீதியாகப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர். உதமின் உள்மனப் பயணம்தான் படத்தின் அடிநாதம். அவர் மனதில் கனன்றுக்கொண்டிருந்த நெருப்பின் உஷ்ணத்தை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணர முடிகிறது. எளிதில் கணிக்க முடியாதவராக, கொந்தளிக்கும் மனநிலை கொண்டவராகப் படத்தில் உதம் சிங் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
உறவின் எல்லைகளைக் கடந்தவர்
உதம் சிங் 7 வயதிலேயே குடும்பத்தை இழந்தவர். அமிர்தசரஸில் ஆதரவற்ற குழந்தையாக வாழ்வைத் தொடங்கியவர். தன் அண்ணனையும் பிற்பாடு இழந்தார். ஆனால், மனிதர்கள் அனைவரையும் தன் குடும்பத்தவராகப் பார்த்தவர் அவர். தேசபக்தி, தன் இன மக்களைப் படுகொலை செய்தவரைப் பழிவாங்கும் லட்சியம் என எல்லாவற்றையும் கடந்து, மனிதர்களுக்கிடையே சமத்துவம் மலர வேண்டும் எனும் லட்சியம் அவருக்குள் இருந்ததைப் படம் நுட்பமாகச் சித்தரிக்கிறது.
பகத் சிங் ஒரு பாத்திரமாக சில காட்சிகளில் வந்துசெல்கிறார். ஆனால், அந்தச் சில காட்சிகளிலேயே அந்தப் புரட்சியாளனின் மனவோட்டத்தை அழுத்தமான வசனங்களின் மூலம் பதிவுசெய்திருக்கிறார் ஷூஜித். பகத் சிங்குக்கும் உதம் சிங்குக்கும் இடையிலான சந்திப்புகள் குறித்த ஷூஜித்தின் கற்பனை, படத்தின் லட்சிய உணர்வுக்கு வலுவூட்டுகிறது. மியான்வாலி சிறையில்தான் (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது) பகத் சிங்கை உதம் சிங் சந்தித்தார் என்கிறது ஒரு குறிப்பு. பகத் சிங் மீதும் அவரது கொள்கைகள், வழிமுறைகள் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார் உதம். பகத் சிங் தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்ததும் அதுவரையிலான கடவுள் பக்தியைத் துறந்து நாத்திகரானார் என்கிறது ஒரு குறிப்பு. லண்டன் நீதிமன்றத்தில் தனது பெயரை ராம் முகமது சிங் ஆசாத் என முன்வைத்து முழங்கியவர் உதம். அது படத்திலும் மிக உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
படத்தின் காட்சிகளைப் பற்றி எத்தனையோ சொல்லலாம். மிக முக்கியமானது ஜாலியன் வாலாபாக் படுகொலைக் காட்சி. பிரம்மாண்டம் என்பது இங்கு மனித உடல்களின் குவியல். வண்ணமயம் என்பது இங்கு வழியும் ரத்தத்தின் நிறத் தொகுப்பு. அட்டன்பரோவின் காந்தி படமும், குறிப்பாக அப்படத்தில் வரும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக் காட்சியும் தனக்குப் பெரிய அளவில் தாக்கம் தந்ததாகச் சொல்லும் ஷூஜித் சிர்க்கார், ஜாலியன் வாலாபாக் காட்சிகளில் ‘காந்தி’யை ஒருபடி கடந்து, உலகின் எந்தத் திரைப் படைப்புக்கும் இணையான காட்சிமொழியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உதம் சிங்காக நடித்த விக்கி கவுஷல், மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அடிப்படையில் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜாலியன் வாலாபாகிலிருந்து 2 மணி நேரப் பயணத்தில் அவரது சொந்த ஊர் இருக்கிறது. எனவே, உதம் சிங், பகத் சிங்கின் வரலாறு வாய்மொழியாக இளம் வயதிலிருந்தே அவருக்கு அனிச்சையாகவே புகட்டப்பட்டிருக்கிறது. நம்மைப் போன்ற ஒரு மனிதர் எனும் உணர்வே உதம் சிங்கை உணர்வுபூர்வமாக உள்வாங்க துணை புரிந்திருக்கிறது. மறுபுறம், படத்தின் இயக்குநர் ஷூஜித் சிர்க்கார் ஒரு வங்காளி. திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான சுவெந்து பட்டாச்சார்யாவும் வங்காளி (இன்னொருவரான ரித்தேஷ் ஷா காஷ்மீரி!). ஒளிப்பதிவாளர் ஆவிக் முகோபாத்யாய், இசையமைப்பாளர் ஷந்தனு மொய்த்ரா என படத்தின் முக்கிய கர்த்தாக்களும் வங்காளிகள்தான். மொழி, பிராந்திய எல்லைகளைக் கடந்து சக இந்தியர்களாக, அதையும் கடந்து சக மனிதர்களாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனும் கொள்கை கொண்ட உதம் சிங்கின் படத்தை உருவாக்கியவர்கள், அதையெல்லாம் கடந்தவர்களாக இருப்பது வரலாற்றுப் பொருத்தம்.
வரலாற்றுத் துரோகம்
நாடாளுமன்றத்தில் சசி தரூர் சுட்டிக்காட்டியதுபோல், முதலாம் உலகப் போரின்போது பிரிட்டன் ராணுவத்துக்கு இந்தியாவைச் சேர்ந்த படைவீரர்கள் காட்டிய விசுவாசம், டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என முன்வைக்கப்பட்ட வாக்குறுதி என எல்லாவற்றையும் புறந்தள்ளி பிரிட்டிஷ் அரசு காட்டிய துரோகம்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை.
2019-ல் ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தின் நூற்றாண்டு அனுசரிக்கப்பட்டபோது, அந்தச் சம்பவத்துக்காக பிரிட்டன் அரசு மன்னிப்புக் கோரவேண்டும் எனும் குரல் இந்திய மக்களிடம் ஒலித்தது. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு அதை முன்னெடுக்கவில்லை. இதுவரை பிரிட்டன் அரசு சார்பில் மன்னிப்பு கோரப்படவில்லை. அதைத்தான் படத்தின் இறுதியில் இயக்குநர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஓடிடி வெளியீடு என்பதால், படத்தின் எந்தக் காட்சியும் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. இதனால் உயிர்ப்புடனான காட்சிகள் கத்தரிக்குத் தப்பி வந்திருக்கின்றன. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பில் இந்தப் படம் தேர்வாகவில்லை. அதற்குத் தேர்வுக் குழு சொன்ன விளக்கம்தான் விநோதமானது - “இந்தப் படம் பிரிட்டிஷார் மீது வெறுப்பை வெளிக்காட்டுகிறது. உலகமயமாக்கலின் யுகத்தில் வெறுப்பைச் சுமந்துகொண்டிருப்பது சரியல்ல.” இதில்கூட தர்க்கம் இருக்கிறது. ஷூஜித் சர்க்காரும் தேர்வுக்குழுவின் வாதத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார். தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான சுமித் பாஸு, “படத்தின் நீளம் அதிகம். ஜாலியன் வாலாபாக் காட்சிகளுக்காக ரசிகர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது” என்று கூறியிருப்பது, தேர்வுக்குழுவின் சினிமா ரசனையை(!) காட்டுகிறது!
லண்டனில் நடக்கும் காட்சிகளை ரஷ்யாவில் படமாக்கியிருக்கிறார் ஷூஜித். லண்டனில் படமாக்க அனுமதி மறுக்கப்பட்டதா என்பதைப் பற்றி அவர் விளக்கமாகச் சொல்லவில்லை. ஆனால், இப்படியான வரலாற்றுப் படங்களைப் படமாக்கும்போது சம்பந்தப்பட்ட நாடுகள் அனுமதி மறுப்பது என்பது இயல்பாக நடப்பதுதான். ஆனால், ஷூஜித் அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தியதால் அதிகம் செலவாகவில்லை என்று மட்டும் புன்னகையுடன் சொல்கிறார்.
கண்ணீர்க் காட்சி
தனது எதிர்ப்பைக் காட்ட உதம் சிங் உண்ணாவிரதம் ஒரு காட்சி வருகிறது. சிறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவருக்கு உணவு புகட்டும் காட்சியில் இருக்கும் குரூரம், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு நிகராகப் படத்தில் பதிவாகியிருக்கிறது. அது பகத் சிங்கின் மிக நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நினைவூட்டுகிறது. 1929-ல் மியான்வாலி சிறையில் இருந்தபோது பகத் சிங்கும், பட்டுகேஸ்வர் தத்தும் ஜதீன் தாஸுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ராஜகுரு, சுகதேவ், அஜய் குமார் கோஷ் உள்ளிட்டோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். தங்களை அரசியல் கைதிகளாக அறிவிக்கக்கோரியும், சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் அவர்கள் நடத்திய அறப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசின் சிறை நிர்வாகம் எத்தனையோ தந்திரங்களைச் செய்தது. தண்ணீருக்குப் பதில் பாலை அருந்துமாறு கைதிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். அதன் பின்னர், அடக்குமுறை மூலம் உணவைப் புகட்ட காவல் துறையினர் கையாண்ட வழிமுறைகள் மிகக் கொடூரமானவை. பக்த் சிங், அஜய் குமார் கோஷ் உள்ளிட்டோர் கொதிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, பலகையில் படுக்கவைக்கப்பட்டிருந்த ஜதின் தாஸ் மீது காவலர்கள் அமர்ந்துகொண்டு வாயில் பம்ப், பிளாஸ்டிக் குழாயை வைத்து பாலை வலுக்கட்டாயமாகச் செலுத்தினர். 63 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஜதீன் தாஸின் வாயிலும் மூக்கிலும் வழிந்த உறைந்த ரத்தத்தில் சில ஈக்கள் வந்து அமர, அவற்றை வாயில் போட்டு மென்று வாந்தியெடுத்து அந்தப் பாலை அந்த வீரர் வெளியேற்றினார் என்கிறது வரலாறு. அந்தக் கணத்திலேயே ஜதீன் தாஸ் மரணமடைந்தார். அதன் பின்னர், 2 ஆண்டுகளில் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
அதேபோல், தனது 40-வது வயதில் உதம் சிங் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் தூக்குக் கயிற்றியிலிருந்து இறக்கப்பட்டபோது, அவரது கையில் பகத் சிங்கின் புகைப்படம் மடித்துவைக்கப்பட்டிருப்பதாகப் படத்தில் காட்டியிருப்பார் ஷூஜித். ஜாலியன் வாலாபாக் காட்சிகளைப் பார்த்து அழுது களைத்த கண்களில், அந்தக் காட்சியில் மீண்டும் நீர் துளிர்க்கும்!