‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்துவருகிறார் டாப்ஸி. சில மாதங்களுக்கு முன்பு, புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார் டாப்ஸி. சினிமா பின்புலம் ஏதுமின்றி திரையுலகில் முன்னணி இடத்தை வென்றவர் டாப்ஸி. அதைக் குறிக்கும் விதமாக, தன் தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘அவுட்சைடர் பிலிம்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளதாக டாப்ஸி தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடிகை சமந்தா ‘பேமிலி மேன்’ வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து, அவருக்கு பாலிவுட்டில் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், சமந்தா நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை டாப்சியின் அவுட்சைடர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட திரைப்படமாக உருவாக உள்ள இத்திரைப்படத்தைப் பற்றி, விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.