ரஜினி சரிதம் 39: சூப்பர் ஸ்டாரின் குருபக்தி!

By திரை பாரதி

திரையுலகில் மொழி, இனம் கடந்து மக்களின் இதயங்களை வென்ற கலைஞர்களை தேசத்தின் உயரிய திரை விருதுகளில் ஒன்றான ‘தாதா சாகேப் பால்கே விருது’ கவுரவம் செய்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரையும் அலங்கரித்த அவ்விருது இன்னும் மேன்மை பெற்றது. அப்படிப்பட்ட விருதை, குருவுக்குப் பிறகு அவருடைய மாணவரும் பெற்றிருப்பதை தேசம் வியந்து கொண்டாடுகிறது.

ரஜினியின் கடும் உழைப்பும், வெளிநாட்டவரையும் எளிதில் தன்வசமாக்கிவிடும் வசீகரமும் 45 ஆண்டுகளைக் கடந்தும் வற்றாமல் துலங்கிக் கொண்டிருப்பதுதான், அவரை இந்த விருதுக்குத் தகுதியாக்கியிருக்கிறது. இருப்பினும் இன்னொரு உணர்வுபூர்வமான காரணம், ரஜினி இந்த விருதைப் பெறுவதற்கு முழுமையான தகுதியுடையவர் என்று சொல்லிவிடலாம். அதுதான் அவருடைய குரு பக்தி.

பெற்றோரையே துச்சமாகக் கருதுபவர்கள் வாழும் சமூகத்தில், ஓர் உயர்ந்த இடத்தை அடைந்து, பொருளும் புகழும் நிறைந்த வாழ்க்கையில் குரு பக்தியை அப்படியே மனதில் இருத்தி வைத்து போற்றுவதில் ரஜினி மாபெரும் முன்மாதிரி. பால்கே விருதைத் துணைக் குடியரசுத் தலைவரின் கையால் பெற டெல்லிக்குச் செல்வதற்கு முன்பாக, சென்னையில் பேட்டியளித்த ரஜினி, “பால்கே விருது எனக்குக் கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த நேரத்தில் கே.பாலசந்தர் சார் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று மனதில் இருந்ததை பளிச்சென்று பகிர்ந்தார். டெல்லியில் விருதைப் பெற்றுக் கொண்டபின், “இந்த விருதை எனது குருநாதர் இயக்குநர் கே.பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன். விருதுக்குக் காரணமாக இருந்த தமிழக மக்களுக்கு என் நன்றி” என்று நெகிழ்ந்து உருகினார்.

இந்தப் பண்பும் நன்றியுணர்ச்சியும் ரஜினியிடம் இன்று வந்ததல்ல. ஸ்டைல் வில்லனாக அறியப்பட்ட ஒரு நடிகர், அதை உதறியெறிந்துவிட்டு, ‘முள்ளும் மலரும்’ படத்தில் காளியாக ‘உருமாற்றம்’ செய்து காட்டினார். அதற்காக ரஜினிக்கு சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது 1980-ல் கொடுக்கப்பட்டது. அப்போது, அதையும் தன்னுடைய குருநாதருக்கே அர்பணிப்பதாகக் கூறி பாலசந்தரைப் பெருமைப்படுத்தினார். 40 வருடங்களுக்கு முன்பும் சரி... இன்றும் சரி. அதே ரஜினி... அதே பணிவு. பலரும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்துகொண்டிருந்த நேரத்தில், இயக்குநர்கள் சங்கம் நடத்திய ‘டி40’ விழாவில் 65 வயது ரஜினியை, நேரு ஸ்டேடியத்தில் நிறைந்திருந்த பார்வையாளர்களுக்கு முன்னால் பாலசந்தர் பேட்டி கண்டார். அப்போது அவரது காலைத் தொட்டு வணங்கினார் ரஜினி.

பாலசந்தருக்கும் ரஜினிக்குமான இந்த பந்தம் என்பது, ரஜினியைத் திரைக்கு ஒரு நடிகராக அறிமுகப்படுத்தியதோடு முடிந்துவிடவில்லை. அதையும் தாண்டி, கேபி, ரஜினி இருவருமே தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உறுதுணையாகவே பயணப்பட்டிருக்கிறார்கள். இதற்கு ஒருபடி மேலேபோய், கேபி மறைந்தபோது “எனது தந்தையை நான் இழந்துவிட்டதுபோல் உணர்கிறேன்” என்றார் ரஜினி. அது உண்மைதான். திருமண வாழ்வில் சங்கடம் வந்தபோது ரஜினியும் சரி... லதாவும் சரி. கேபியின் வீட்டுக்கதவைத்தான் தட்டினார்கள்.

பிணைத்த சிகரம்

தன்னுடைய ‘அக்னிசாட்சி’ படத்தில் ரஜினி - லதா இருவரையும், ரஜினி - லதாவாகவே ஒரு காட்சியில் வரும்படி செய்தார் இயக்குநர் கேபி. மனநலப் பிரச்சினையின் தொடக்கத்தில் இருக்கும் சரிதா, ‘அவர்கள்’ படத்தில் கொடுமைக்கார கணவன் ராமநாதனாக நடிக்கும் ரஜினியின் கேரக்டரை உண்மையாகக் கருதிக்கொண்டு ஆவேசம் கொள்வார். ரஜினியின் வீட்டுக்கு நடுராத்திரியில் வந்து ரஜினியிடம், “நீ ரொம்பக் கெட்டவன்... அந்தப் பெண் அனுவை ரொம்பக் கொடுமைப்படுத்துறே” என்று ஒரு பெண் தெய்வத்தைப்போலக் கேட்பார். அதற்குள் அங்கே சரிதாவின் கணவர் சிவகுமார் வந்துவிட, விஷயத்தைப் புரிந்துகொள்ளும் ரஜினி, “இங்க பாரும்மா... நீங்க நினைக்கிற மாதிரி நான் ராமநாதன் இல்ல; ரஜினிகாந்த். நீங்க பார்த்தது நான் நடிச்ச ஒரு படம். நான் என் மனைவியோட சந்தோஷமா வாழ்க்கை நடத்திட்டு இருக்கேன். அது நிஜம். ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லிவிட்டுப்போய், லதாவை அழைத்து வந்து, “இவங்கதான் என் மனைவி” என்று சொல்லி, அந்த நிமிடத்தில் சரிதாவின் மனச்சிக்கலுக்குத் தெளிவைக் கொடுப்பார்.

ரஜினியின் வாழ்வில் திருப்புமுனையாகவும் அமைதியின் பரிசாகவும் அமைந்த திருமண வாழ்வில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புயல் மையம் கொண்டது. ‘சிந்து பைரவி’ படப்பிடிப்புத் தளத்துக்கு கேபியைத் தேடிவந்த லதா, “ரஜினி என்னைப் பிரிந்து செல்ல முடிவெடுத்துவிட்டார்” என்று மனமுடைந்து முறையிட்டார். அந்தக் கணமே படப்பிடிப்புக்கு பேக் அப் சொன்ன கேபி, லதாவுடன் ரஜினியைக் காண போயஸ் கார்டனுக்கு விரைந்தார். கேபியை ரஜினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. குழப்பம் ஏதுமின்றி தெளிந்த மனதுடன் காணப்பட்ட ரஜினியிடம் பேசினார் கேபி.

“உனக்கு என்னப்பா ஆச்சு... என்ன இத்தனை வருடங்கள் கழித்து கசப்பு?”

”எனக்குப் பிடிக்கல...”

“ஏன் பிடிக்கல..? அவ என்ன தப்பு பண்ணினா?”

“அதெல்லாம் ஒரு தப்பும் பண்ணல. எனக்குப் பிடிக்கல” என்று பிடி நழுவாமல் பேசினார் ரஜினி. ஆனால், கேபி விடவில்லை.

“கல்யாணம்கிறதே பிடிக்கலைன்னா அப்பவே யோசிச்சிருக்கணும். கல்யாணம் பண்ணியிருக்கவே கூடாது. இப்ப வேண்டாம்னா என்ன அர்த்தம். உனக்கு இப்ப நல்ல மார்க்கெட் இருக்கு. இன்னும் நீ போக வேண்டிய உயரங்கள் அதிகம். அப்படி இருக்கிறச்சே... இந்த மாதிரியொரு முடிவை உன் சொந்த வாழ்க்கையில் நீ எடுத்தா, அது உன்னோட சினிமா வாழ்க்கையை கட்டாயம் பாதிக்கும். இதுக்குன்னே நிறையபேர் காத்துகிட்டிருக்காங்க. அவங்கள்லாம், இதோட நீ க்ளோஸ்னு பரப்பிவிடுவாங்க. சினிமால ஒருத்தன் கழட்டிவிட்டுட்டா எல்லாரும் கழட்டி விட்டுருவாங்க.. இதுக்காகவா உன்னை அறிமுகப்படுத்தினேன்?” என்று கேபி குரலை உயர்த்தியபோது, குழந்தையைப்போல ரஜினியின் கண்களிலிருந்து கண்ணீர். அருகில் நின்றிருந்த லதாவும் அழுதுகொண்டுதான் நின்றிருந்தார்.

இருவரையும் அருகில் அழைத்த கேபி, “பூஜை அறை எங்க இருக்கு?” என்று கேட்டுகொண்டே இருவரையும் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் அங்கே நிறுத்தி, இருவருடைய கரங்களையும் சேர்த்து வைத்துவிட்டுச் சொன்னார். “இப்படியே ரெண்டு பேரும் எப்பவும் இருக்கணும். இல்லாட்டி எனக்குக் கெட்ட கோவம் வந்துடும். அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று சொல்லிவிட்டு வந்தார்.

தடுமாற்றங்கள் இல்லாத மாற்றம்

அதன் பின்னர், தெளிந்த நீரோடைபோல் சென்றுகொண்டிருந்த ரஜினியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ‘ஆன்மிக விழிப்பு’ பாலசந்தருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால்.. ஒருமுறை திரையரங்கு ஒன்றில் பின்னிரவுக் காட்சி முடிந்ததும், அங்கே நைட் ஷூட் செய்துகொண்டிருந்தார் கேபி. அப்போது அங்கே வந்த ரஜினி, “கேபி சார் என்னை கவனிக்கும்வரை யாரும் அவருக்கு நான் வந்திருப்பதைப் பற்றிச் சொல்லாதீர்கள்… என்னால் அவருடைய படப்பிடிப்பில் சலசலப்பு இருக்கக் கூடாது ப்ளீஸ்.” என்றார். அவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரம் சொல்லும்போது கேட்காமல் இருப்பார்களா... அனைவரும் கப் சிப் என்று அமைதியாக அவரவர் வேலைகளைப் பார்த்துகொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்துக்கெல்லாம் கேபியே ரஜினியைப் பார்த்துவிட்டார். “என்னப்பா... எப்போ வந்தே. என்ன விஷயம்?” என்று கேபி கேட்டதுமே, “எனக்கு பந்தம், பாசம், திருமணம் எதிலும் நம்பிக்கையில்லை” என்றார் ரஜினி. “ ஏம்பா... இதைச் சொல்ல இந்த நடுராத்தியில வந்திருக்கே… சரி வா, என்னோட ஒரு காபி சாப்பிடு” என்று ரஜினியுடன் பேசி அவருடைய மனதைப் படிக்க விரும்பினார் கேபி.

“இல்லயில்ல... உங்களைப் பார்த்து நாளாச்சு. மனசுக்குள்ள ஏதோ ஒரு ஏக்கம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய ரஜினியை கூப்பிட்டு அனைத்துகொண்டார் கேபி. அப்போது ரஜினியின் காதில், “நான் இருக்கேண்டா... எதுக்கு மனம் வெறுத்தமாதிரி பேசறே… இந்த சின்ன வாழ்க்கை எவ்வளவு அழகுன்னு நான் எத்தனை முறை உனக்கு சொல்லியிருக்கேன். கமான் மேன்” என்று மெல்லிய குரலில் சொல்லி அனுப்பினார் கேபி.

தன்னுடைய மாணவனை ஏதோவொன்று ஆழமாக ஊடுருவிப் பாதித்திருக்கிறது. அது ஏன் ‘ஆன்மிக விழிப்பு’ ஆக இருக்கக்கூடாது என்று கேபி அந்த நிமிடத்தில் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். இத்தனைக்கும், தனது ஆன்மிகத் தேடல் பற்றி ரஜினி அவரிடம் விவாதித்ததே இல்லை. ஆனால், ரஜினியிடம் தடுமாற்றங்கள் இல்லாத மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கேபி கண்கூடாகக் கண்டார். அதன்பிறகு ரஜினியை கேபி அணுகிய விதமே வேறாக இருந்தது. ஒரு மாணவனிடம் காட்டிய உரிமைகளைக் குறைத்துக்கொண்டு, ஒரு மகானை அணுகுவதுபோலத் தான் ரஜினியை அணுகத் தொடங்கினார். அதற்கு கேபி கண்கூடாகக் கண்ட ஒரு காரணமும் இருந்தது!

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE