பருவநிலை மாற்றத்தால் உலகம் அபாயகரமான விளைவுகளைச் சந்தித்து வருவதை, ஐநா சபையும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து கவலையுடன் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
புவி வெப்பமடைவதைத் தடுத்து நிறுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள், 2015-ல் நடந்த பாரிஸ் மாநாட்டில் பட்டியலிடப்பட்டன. அவற்றை ஒப்புக்கொண்டு இந்தியா உட்பட பல நாடுகள் கையெழுத்திட்டன. அதன்படி ஒவ்வொரு நாடும் தாங்கள் குறைப்பதாக ஒப்புக்கொண்ட பசுமைக்குடில் இல்ல வாயு வெளியேற்றத்தை, 2023-க்குள் குறைத்துக் காட்ட வேண்டும்.
இந்நிலையில், நாளை (அக்.31) முதல் நவம்பர் 12 வரையில் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ‘கிளாஸ்கோ மாநாடு’ நடைபெறவிருக்கிறது. பருவநிலை மாற்றத்தைத் தடுக்க ஐநா சபை நடத்தும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பலர் பங்கேற்கவிருக்கின்றனர். இச்சூழலில், ‘அழிவைத் தேர்ந்தெடுக்காதீர்’ என்ற விழிப்புணர்வு கிராஃபிக்ஸ் குறும்படத்தை, ஐக்கிய நாடுகள் முன்னேற்றத் திட்டம் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை!
அதில், பெரிய அரங்கம் ஒன்றில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் அமர்ந்திருக்கிறார்கள். திடீரென அனைவரும் நில அதிர்வை உணர்கிறார்கள். அரங்கத்தின் நுழைவாயில் கதவைத் திறந்துகொண்டு பிரம்மாண்டமான டைனோசர் ஒன்று உள்ளே வருகிறது. அத்தனை நாட்டு பெருந்தலைவர்களும் அச்சத்தில் அலறுகிறார்கள். எல்லோரையும் கடந்து மேடையை நோக்கி டைனோசர் நடைபோடுகிறது.
மேடை அருகில் நிற்பவரிடம், “நீங்கள் நலம்தானே?” என்று கேட்கிறது டைனோசர். “ஒரு நிமிடம் வேண்டுமா என்ன?” என்றும் கேட்கிறது. அவர் திகிலில் இல்லை என்பதுபோல் பக்கவாட்டில் தலை அசைக்கிறார். ‘cool’ என்று சொல்லிவிட்டு மைக்கை சரி செய்து, அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளையும் பார்த்து தனது உரையைத் தொடங்குகிறது டைனோசர்.
”கவனியுங்கள் மக்களே, அழிவைப் பற்றி எனக்கு ஓரிரு விஷயங்கள் தெரியும். உங்களுக்குச் சொல்கிறேன்... எல்லாம் உங்களுக்கே தெரிந்ததுதான். அழிந்துபோவது மோசமானது. அப்படியானால் அழிவை நோக்கி நீங்கள் உங்களை கொண்டு செல்வது எப்படிப்பட்டது? 7 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் அழிந்தோமென்றால், காரணம் சொல்ல எரிகல் இருந்தது. நீங்கள் எதை காரணமாகச் சொல்லப் போகிறீர்கள்? நீங்கள் பருவநிலை பேரழிவுக்கு இட்டுச்சென்றிருக்கிறீர்கள். இதற்காகவே, ஆண்டுதோறும் பொது நிதியில் கோடிக்கணக்கான பணத்தை படிம எரிபொருள் மானியத்துக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒதுக்குகின்றன. இது ராட்சத விண்கற்களுக்கு மானியம் ஒதுக்குவதற்கு ஒப்பாகும். அதைத்தான் நீங்கள் தற்போது செய்துகொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு பணத்தைக் கொண்டு நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசித்துப் பாருங்கள். உலகெங்கிலும் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். ஆனால், நீங்களோ ஒட்டுமொத்த மனித இனத்தின் அழிவுக்காக செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று எச்சரிக்கிறது.
’மிருகத்தனமான’ யோசனை!
தொடர்ந்து பேசும் டைனோசர், “சரி... இந்த நிமிடத்துக்கு வருவோம். இப்பவும் உங்கள் முன்னால் பெரிய வாய்ப்புள்ளது. பெருந்தொற்றுக் காலத்திலிருந்து விடுபட்டு, உங்களுடைய பொருளாதார நிலையை சீரமைக்க முயலும் இத்தருணத்தில் நீங்கள் மீண்டெழ முடியும். மனித குலத்துக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இது. என்னுடைய ஒரு ’மிருகத்தனமான’ யோசனையைச் சொல்கிறேன் கேளுங்கள். ‘அழிவைத் தேர்ந்தெடுக்காதீர்’. காலம் கடப்பதற்குள் உங்களுடைய மனித இனத்தைக் காப்பாற்றுங்கள். இனியும் தவறிழைத்துவிட்டு மன்னிப்பு கேட்க மனிதர்களுக்கு நேரமில்லை. மாற்றங்களை ஏற்படுத்தத் துவங்குங்கள்.
நன்றி”.
டைனோசரின் இந்தப் பேச்சைக் கேட்டு, அனைத்து நாட்டு உறுப்பினர்களும் நெகிழ்ச்சியுடன் எழுந்து கை தட்ட 2:30 நிமிட குறும்படம் ‘இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை’ என்ற இறுதி வாசகத்துடன் நிறைவடைகிறது. அழிவைத் தேர்ந்தெடுக்காதே என்று பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினமே வந்து சொல்வது, உண்மையாக, மனத்துக்குள் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்துகிறது.
170 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐநா சபையின் இந்த குறும்படத்தை, இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் மட்டுமே கண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கானோரை கட்டாயம் சென்றடைய வேண்டிய கருத்துள்ள குறும்படம் இது.
பருவநிலை மாற்றம்: தீர்வை முன்வைக்குமா கிளாஸ்கோ மாநாடு?