பால்கே விருதில் தொடரும் பாலின பாரபட்சம்

By எஸ்.எஸ்.லெனின்

அண்மையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. திரைக் கலைஞர்களின் வாழ்நாள் சாதனையை கவுரவிக்கும் வகையில். இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாக பால்கே விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இவ்விருதை நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார். அப்படியே பின்னோக்கி பார்த்தால், பால்கே விருது பெற்றவர்கள் அநேகமாக ஆண் கலைஞர்களாகவே தட்டுப்படுவார்கள்.

கடைசியாக, இந்த விருது ஒரு பெண் திரைக்கலைஞருக்கு வழங்கப்பட்டு 20 வருடங்களாகிறது. அதுமட்டுமல்ல, 52 ஆண்டுகளாக வழங்கப்படும் பால்கே விருதுகளில் இதுவரை 6 பெண்கள் மட்டுமே கவுரவிக்கப்பட்டுள்ளனர். ஏனிந்த பாரபட்சம்? இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனைக்கு தகுதி படைத்த பெண் கலைஞர்களே இல்லையா? அல்லது அவர்கள் அலட்சியத்துக்கு ஆளாகிறார்களா?

தேவிகா ராணி

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை படைத்தவர்கள் என்பதும், பால்கே விருதுக்கு அவர்கள் 101 சதவீதம் தகுதியானவர்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், புத்தாயிரத்தில் 21 வருடங்கள் ஆகியும் ஒரு பெண் திரைக் கலைஞருக்கு கூட பால்கே விருது சேரவில்லை! கடைசியாக இந்த விருதை 2000-ல் பாடகி ஆஷா போஸ்லே பெற்றிருக்கிறார். அதன் பிறகு, எந்தப் பெண் கலைஞருக்கும் பால்கே விருது சென்று சேரவில்லை.

இந்தியாவின் முதல் சினிமாவான(ஆங்கிலம்) ’கர்மா’-வில் நடித்த தேவிகா ராணி (1969), சக நடிகர்களை விட அதிகம் ஊதியம் பெற்ற சுலோச்சனா(1973), சலனப் பட காலத்து வங்காள சினிமாவின் முதல் நாயகியான கனன் தேவி(1976), மராத்திய சினிமாவின் முதல் நாயகியான துர்கா கோடே(1983), பன்மொழி பாடக சகோதரிகளான லதா மங்கேஷ்கர்(1989) மற்றும் ஆஷா போஸ்லே(2000) என 6 பெண் கலைஞர்களுடன் பால்கே பெண் விருதாளர் பட்டியல் சுருங்கி விடுகிறது.

அதிலும் ’இந்திய சினிமாவின் முதல்’ என்பதிலேயே பாதிப்பேருக்கான தகுதியை தீர்மானித்திருக்கிறார்கள். அது மட்டுமன்றி ஒரேயொரு வங்காள பங்களிப்பாளர் தவிர்த்து மற்ற எல்லோருமே இந்தி மற்றும் மராத்தி படவுலகைச் சேர்ந்தவர்கள். இதர மண்ணிலிருந்தும், மொழிகளில் இருந்தும் இதுவரை வாழ்நாள் சாதனை படைத்த பெண் கலைஞர்களே இல்லை போலும்.

லதா - ஆஷா சகோதரியர்

பால்கே

இந்த இடத்தில் ஒரு பிளாஷ்பேக் அவசியமாகிறது.

இந்திய சினிமாவின் தந்தையான தாதாசாகேப் பால்கே காலத்துக்கே போவோம். அப்போது அவர் தாதா சாகேப் எல்லாம் இல்லை. துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பவராக, தனது முதல் சினிமா கனவை செல்லுலாய்டில் வார்க்க தடுமாறிக்கொண்டிருந்தார். பால்கேவின் சினிமா கனவுக்கு ஒரு நடிகை தேவைப்பட்டார். ஆனால், குடும்பப் பெண்களுக்கு ஆகாத தொழில் அது என அறிந்தோர் தெரிந்தோர் கூட மறுத்துவிட்டனர். அதாவது, ஆண்கள் தங்கள் உடைமைகளான பெண்களை நடிப்பதற்கு அனுமதிக்கவில்லை.

அப்படி ஒருநாள் அலைந்துதிரிந்து ஓரிடத்தில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, பரிமாறியவர் கரங்களை தரிசித்ததில் கண்கள் விரிந்தார். நீளமும் நளினமுமான அழகான விரல்கள்! ஆனால், அந்த விரலுக்கு சொந்தக்காரர் ஒரு ஆணாக இருந்தார். அதனாலென்ன என்று அந்த நபரை அள்ளிவந்து சேலைகட்டிப் பார்த்தார். இப்படித்தான் இந்திய சினிமாவின் முதல் ’நாயகி’ உருவானார். சலனப்படங்கள் கோலோச்சிய அக்காலத்தில், இந்த ஆண்களிடம் பெண்ணுக்கான நடிப்பை வாங்குவதற்கு பெரும்பாடு பட்டார் பால்கே. அந்த வகையில் இந்திய சினிமாவின் தந்தை பெரும் பரிதாபத்துக்கு உரியவர்.

’ஸ்த்ரீபார்ட்’ ஆண்கள்

இன்று, பால்கே தன் பெயரில் அளிக்கப்படும் விருதுப் பட்டியலை பார்க்க நேரிட்டால், அன்றைய பரிதாபத்தை மீண்டும் அடைவார். பால்கே விருதின் பெயரில் இந்த பாலின பாரபட்சம் தொடர்வது நிச்சயம் பால்கேக்கு பெருமை சேர்க்காது. அரை நூற்றாண்டுக்கும் மேலாய் வழங்கப்படும் ஓர் உயரிய விருதுக்கு, பெண் திரைக் கலைஞர்களில் தட்டுப்பாடு இன்றுமா நிலவுகிறது?.

மும்பைக்கு அப்பாலும் இந்திய சினிமா உலகம் பரந்து விரிந்திருப்பதும், பாலிவுட் உட்பட எல்லா பிராந்திய சினிமாக்களிலும் திரையிலும், திரைக்குப் பின்னேயும் பெண் சாதனையாளர்கள் ஏராளமாக நிறைந்திருப்பதை எடுத்துச் சொல்வார் இல்லையா? அவர்களில் ஓரிருவரை பால்கே போன்ற விருதுகள் சென்று சேர்ந்தால், இன்னும் பெண் சாதனையாளர்கள் வரவும், உயரவும் வாய்ப்பாகும் அல்லவா. ரசிக எதிர்பார்ப்பிலிருந்து இதை ஒரு கோரிக்கையாக தொடங்குவோம். அடுத்த வருடமேனும், விருது தேர்வு கமிட்டியின் கண்களில் பெண் கலைஞர்கள் புலப்படட்டும். பால்கேவின் ஆத்மா பணிக்கட்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE