அடிப்பது தகும்; அணைப்பது கூடாது!

By எஸ்.எஸ்.லெனின்

டி20 கிரிக்கெட்டுக்கு அப்பால் பாகிஸ்தானியர்கள் அதிகம் விவாதிக்கும் பொருளாக மாறி இருக்கிறது, அந்நாட்டின் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்புகள்.

பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம், அண்மையில் அந்நாட்டின் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன்படி கணவன் மனைவியே ஆனபோதும், டிவி காட்சிகளில் கட்டியணைப்பது கூடாதென அறிவுறுத்தி உள்ளது. மேலும் திருமணத்தை தாண்டிய உறவுகள், மேற்குலக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடுத்துவது உள்ளிட்ட அநாகரிக காட்சிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. சுருக்கமாக இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும், பாகிஸ்தானின் கலாச்சாரத்துக்கும் புறம்பான காட்சிகள் கூடாது என்று வலியுறுத்தி உள்ளது.

குடும்ப வன்முறை

பாகிஸ்தான் மக்களின் நீண்டகால கோரிக்கையை அடுத்தே, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆணையத்தின் இந்த அறிவிப்புகளை கணிசமானோர் ஆதரித்தபோதும், எதிர்ப்பு விமர்சனங்களும் களைகட்டுகின்றன. பாகிஸ்தான் டிவிக்களில் அதிகரித்துவரும் பாலின வேறுபாடு மற்றும் குடும்ப வன்முறையை ஆதரிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்துமாறு, பொதுமக்கள் மத்தியிலிருந்து பலகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அவற்றை செவிமெடுக்காத ஆணையம், புதிதாக விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் பாகிஸ்தான், இன்னொரு ஆப்கானிஸ்தானாக மாறுவதன் அடையாளம் என விமர்சித்திருக்கிறார்கள்.

கணவன் மனைவி இடையிலான அன்பைப் பரிமாறும் வகையில் அணைப்பதை கூடாதென்று சொல்பவர்கள், காட்சிதோறும் ஆண்களிடம் பெண்கள் அறைவாங்குவது, அடித்து துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறை ஊக்குவிப்பை கண்டுகொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனபோதும் புதிய தணிக்கையை நடைமுறைப்படுத்துவதில், பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானமாக இருப்பதாகவே தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE