இமயமலைச் சாரலில் சமந்தா: ரிஷிகேஷில் ஆசுவாசம்

By எஸ்.எஸ்.லெனின்

நாக சைதன்யா உடனான விவாகரத்து முடிவுக்குப் பின்னர் கடும் மன அழுத்தத்திலிருந்த சமந்தா, இமயமலைச் சாரலின் புனித தலங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.

சமந்தா அக்கினேனி என்ற தனது சமூக வெளிக்கான பெயரை மீண்டும் சமந்தா ருத் பிரபுவாக மாற்றியதிலிருந்தே நடிகை சமந்தாவுக்கான சங்கடங்கள் அதிகரித்தன. சினிமா பிரபலம் என்பதற்காக தன்மீது தொடுக்கப்படும் மணவாழ்க்கை குறித்த தனிப்பட்ட கேள்விகளுக்கும், புகார்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பதில் தர சமந்தா தடுமாறினார். டோலிவுட்டின் பாரம்பரிய அக்கினேனி குடும்பத்தின் மருமகளாக இருந்தவர் அந்த அடையாளத்தை துறந்ததும் எளிதில் தூற்றுதல்களுக்கு ஆளானார்.

ஒரு சாமானிய பெண் எதிர்கொள்ளும் அந்தரங்க தாக்குதல்கள் அனைத்தையும் சமந்தா சந்தித்தார். வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது தவித்தார். பரபரப்பை விரும்பும் ஊடகங்கள், யூட்யூப் சேனல்கள் அவரை மோசமாக சித்தரித்தன. அப்படியான சில யூட்யூப் சேனல்களுக்கு எதிராக நீதிமன்றத்திலும் சமந்தா வழக்கு தொடுத்துள்ளார்.

அனைவரையும் போலவே தனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டென்றும், அவற்றில் தடுமாற்றங்கள் எழுந்திருப்பதையும் அவற்றிலிருந்து விடுபட அவகாசம் வேண்டுமென்றும் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார். மணவாழ்வு பிரச்சினைகள் மற்றும் தொடர் படபிடிப்புகள் காரணமாக கடும் மன அழுத்தத்தில் தவிப்பதாகவும் அண்மையில் வேதனை தெரிவித்திருந்தார். இதனையடுத்து அமைதிக்கான ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளுமாறு சமந்தாவின் குடும்ப நண்பர்கள் அவருக்கு ஆலோசனை தெரிவித்தனர்.

சமந்தா

இந்நிலையில் இமயமலைச் சாரலில் அமைந்திருக்கும் பல்வேறு புனித தலங்களுக்கான சவாலான பயணத்தை மேற்கொண்டிருப்பது குறித்தும் அங்கே காணக்கிடைத்த அனுபவங்கள் குறித்தும் தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா பதிவு செய்து வருகிறார். ரிஷிகேஷ் உள்ளிட்ட தலங்கள், இதிகாசங்களில் வாசிக்க கிடைத்ததன் அடையாளங்கள், இயற்கை கொஞ்சும் சூழல் என ஆன்மிகப் பயண அனுபவம் குறித்து, தனது தோழி ஷில்பாவுடனான புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் சமந்தா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE