சினிமா சிற்பிகள்-15: திகில் திரை மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்

By க.விக்னேஷ்வரன்

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாமல், பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமரவைத்துக் கதை சொல்லும் த்ரில்லர் படங்களுக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஒரு நல்ல த்ரில்லர் படம் என்பது, கதாபாத்திரங்களோடு பார்வையாளர்களும் இரண்டறக் கலந்து, கதாபாத்திரத்தின் பிரச்சினையைத் தனது பிரச்சினையாக உணர்ந்து எப்படியாவது இதற்குத் தீர்வு கிடைத்துவிடாதா என்று ரசிகர்களின் மனதை ஏங்க வைக்க வேண்டும். உளவியல் ரீதியாக ரசிகர்களைப் புரிந்துகொள்ளாமல் இப்படியான கதைக்களத்தை அமைக்க முடியாது. திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை உளவியல் ரீதியாகக் கவர்ந்த வெகுசில இயக்குநர்களில் முதன்மையானவர், ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்றழைக்கப்படும் ஹிட்ச்காக் உருவாக்கிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து, இன்றளவும் பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வெற்றியடைந்து வருகின்றன.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்

பிரம்படி பயம் தந்த சஸ்பென்ஸ் கலை

கிழக்கு லண்டனிலுள்ள லெய்ட்னன்ஸ்டோன் பகுதியில் 1899-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி, வசதியான குடும்பம் ஒன்றின் 3_வது குழந்தையாகப் பிறந்தார் ஹிட்ச்காக். சிறுவயது முதல் மிகவும் கட்டுப்பாடான சூழலில் வளர்ந்த ஹிட்ச்காக், கான்வென்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். தன்னுடைய 11_வது வயதில் கத்தோலிக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மிகவும் கட்டுப்பாடான அந்தப் பள்ளியில், தவறு செய்யும் மாணவர்களை அந்த நாளின் இறுதியில் ஆசிரியர்கள் ரப்பர் பிரம்பைக் கொண்டு அடித்து தண்டனை வழங்குவார்கள். நாள் முழுக்க, நாம் இன்று ஆசிரியரின் கோபத்துக்கு உள்ளாகி உள்ளோமா இல்லையா என்ற பயத்திலேயே, மாணவர்களின் நேரம் கழியும். ஆபத்தைப் பயத்துடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் இந்த அவஸ்தையே, பின்னாட்களில் சஸ்பென்ஸ் திரைப்படம் எடுப்பதில் தனக்குத் தூண்டுகோலாக இருந்ததாகப் பின்னாட்களில் ஹிட்ச்காக் தெரிவித்துள்ளார்.

கல்லூரிப் படிப்பில் இயந்திரவியல், மின்சாரவியல், ஒலியியல் ஆகியவற்றைப் படித்துத் தேர்ந்தார். 1914-ல் ஹிட்ச்காக்கின் தந்தை இறந்துவிட, குடும்பத்தைப் பராமரிக்க ஹென்லி டெலிகிராப் அண்ட் கேபிள் கம்பெனி என்ற தந்தி நிறுவனத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். 1917-ல் முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றினார். போர் முடிந்து லண்டன் திரும்பிய ஹிட்ச்காக் எழுதுவதில் ஆர்வம் கொண்டு, தான் முன்னால் வேலைபார்த்த ஹென்லி தந்தி நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் பணியில் சேர்ந்தார். இக்காலகட்டத்தில் திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக நேரத்தைச் செலவிட்டவர், சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன், டி.டபுள்யூ.க்ரிஃபித், ஆலிஸ் கை ப்ளச்சே போன்றோரின் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டார். இக்காலகட்டத்தில் பாராமவுன்ட் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஃபேமஸ் பிளேயர்ஸ்- லாஸ்கி கார்ப்பரேஷன், லண்டனில் ஒரு புதிய ஸ்டூடியோ தொடங்குவதை அறிந்துகொண்ட ஹிட்ச்காக், அவர்கள் ஸ்டூடியோவில் பயன்படுத்த டைட்டில் கார்டுகளை வரைந்து அனுப்பி வேலையில் சேர்ந்தார்.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்

ஜெர்மன் எக்ஸ்ப்ரஷனிசம்

1923-ம் ஆண்டு தயாரிப்பாளர் மைக்கல் பால்கானின் கெய்ன்போரவ் பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் கிரஹாம் கட்ஸ் இயக்கிய ‘வுமன் டு வுமன்’ என்ற திரைப்படத்தில் செட் வடிவமைப்பாளராகச் சேர்ந்த ஹிட்ச்காக், விரைவில் அத்திரைப்படத்தின் உதவி இயக்குநராக மாறினார். கிரஹாம் கட்ஸ் இயக்கிய பல திரைப்படங்களில் தொடர்ந்து உதவி இயக்குநராகப் பணியாற்ற ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் ஜெர்மன் அரசின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஊஃபா-வுடன் இணைந்து, சிறிது காலம் பணியாற்றினார் ஹிட்ச்காக்.

இக்காலகட்டத்தில், ஜெர்மன் எக்ஸ்ப்ரஷனிச தத்துவத்தால் ஈர்க்கப்பட்டார் . அவருடைய படங்களின் தனித்தன்மைக்கு எக்ஸ்ப்ரஷனிச வகை திரைமொழியை அவர் சிறப்பாகக் கையாண்டதே காரணம். தன் நிறுவனத்தின் உதவி இயக்குநராக இருந்த ஹிட்ச்காக்கை, 1925-ம் ஆண்டு ‘தி ப்ளெஷர் கார்டன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக மாற்றினார் தயாரிப்பாளர் பால்கான். ‘தி ப்ளெஷர் கார்டன்’ திரைப்படம் வர்த்தக ரீதியாகத் தோல்வியடைந்தாலும் சினிமா விமர்சகர்களின் மனதைக் கவர்ந்தது. தயாரிப்பாளர் பால்கனின் மனதையும்தான்!

எனவே, அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஹிட்ச்காக்குக்கு அளித்தார். தன்னுடைய 2_வது திரைப்படமாக ஹிட்ச்காக் இயக்கிய ‘தி மவுன்டெய்ன் ஈகிள்’(1926) என்ற திரைப்படத்தின் படச்சுருள்கள் தற்போது அழிந்துவிட்டன.

‘தி லாட்ஜர்: எ ஸ்டோரி ஆஃப் தி லண்டன் ஃபாக்’

முதல் வெற்றி

ஜெர்மனியிலிருந்த காலகட்டங்களில், ஜெர்மன் மற்றும் ரஷ்யத் திரைப்படங்களில் நுணுக்கங்களை நன்கு கற்றுத் தேர்ந்த ஹிட்ச்காக், லண்டன் திரும்பியதும் இயக்கிய ‘தி லாட்ஜர்: எ ஸ்டோரி ஆஃப் தி லண்டன் ஃபாக்’ என்ற திரைப்படம் புகழின் உச்சிக்கு அவரைக் கொண்டு சென்றது. செய்யாத கொலைகளுக்குப் பழி சுமத்தப்படும் ஒருவனின் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, இத்திரைப்படத்தின் மையக் கதாபாத்திரத்தோடு ரசிகர்களால் மிக எளிதாகத் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்ததால்தான் இத்திரைப்படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது. நம் அனைவருக்குமே செய்யாத குற்றத்துக்குப் பழி சுமத்தப்படும்போது ஏற்படக்கூடிய கோபம், பரிதவிப்பை மையமாகக் கொண்டு கதை எழுதுவதில் வல்லவராக இருந்தார் ஹிட்ச்காக். அவர் இயக்கிய 53 திரைப்படங்களில் 11 திரைப்படங்கள், இதுபோன்ற தவறான பழிசுமத்துதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். ரகசிய உளவாளிகள், மர்மமாக நடந்த கொலையின் புதிருக்கு விடை தேடுபவர்கள் போன்ற கதாபாத்திரங்கள் அவரது படங்களில் அதிகம் இடம்பெற்றார்கள்.

‘ரெபேக்கா’ திரைப்படக் காட்சி...

ஆஸ்கர் பெறாத ஹிட்ச்காக்

தனது 10_வது திரைப்படமான ‘பிளாக்மெயில்’ திரைப்படத்தை ஹிட்ச்காக் உருவாக்கிக்கொண்டிருந்தபோது, அத்திரைப்படத்தைத் தயாரித்துவந்த பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தைப் பேசும் திரைப்படமாக மாற்ற முடிவெடுத்தது. பேசும் திரைப்படமாகவும், மவுனத் திரைப்படமாகவும் இத்திரைப்படம் இரு வடிவில் வெளியானது. பிரசித்திபெற்ற இடங்களைக் கதையின் பின்னணியாக வைக்கும் பாணியை, ‘பிளாக்மெயில்’ திரைப்படத்தில்தான் ஆரம்பித்தார் ஹிட்ச்காக். இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சி, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் நடப்பதுபோல் காட்சிப்படுத்தியிருப்பார்.

அவரது திரைப்படங்களில் சுதந்திரதேவி சிலை, மவுன்ட் ரஷ்மோர், கோல்டன் கேட் பிரிட்ஜ் போன்ற பிரசித்திபெற்ற இடங்கள் காட்சியின் பின்னணியாக இருப்பதைக் காணலாம். 1933-ம் ஆண்டு காமொன்ட் நிறுவனத்தின் பிரிட்டிஷ் கிளையான காமொன்ட்-பிரிட்டிஷ் பிக்சர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘தி 39 ஸ்டெப்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஹிட்ச்காக்கின் புகழை பிரிட்டனைத் தாண்டி அமெரிக்காவிலும் பரவச்செய்தது.

‘கான் வித் தி விண்ட்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தைத் தயாரித்த டேவிட் ஓ.ஷெல்ஷ்னிக், டைட்டானிக் கப்பலை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை தன் நிறுவனத் தயாரிப்பில் இயக்குமாறு கேட்டதையடுத்து, அமெரிக்காவுக்கு வந்தார் ஹிட்ச்காக். ஆனால், அத்திரைப்படத்தை இயக்க முடியாமல் போனது. ஹாலிவுட்டில் தன்னுடைய முதல் திரைப்படமான ‘ரெபேக்கா’(1940) திரைப்படத்தை இயக்கி முதல் படத்திலேயே அமெரிக்க ரசிகர்களைக் கவர்ந்தார். 1940-ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக ‘ரெபேக்கா’ தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக சினிமா ரசிகர்களாலும், பெரும் இயக்குநர்கள் பலராலும் தங்கள் மானசீக குருவாகக் கொண்டாடப்படும் ஹிட்ச்காக், தன் வாழ்நாளில் 5 முறை ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், ஒருமுறைகூட அவர் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது பெறவில்லை என்பது விசித்திரமான விஷயம்.

‘ரோப்’ திரைப்படத்திலிருந்து...

குறுகிய இடத்துக்குள் சஸ்பென்ஸ்

குறுகிய இடத்துக்குள் நடக்கும் சஸ்பென்ஸ் திரைக்கதைகளைக் கையாளுவதில் ஹிட்ச்காக் பெரும் மேதைமையாகத் திகழ்ந்தார். உதாரணத்துக்கு அவர் இயக்கிய ‘ரோப்’(1948), ‘ரியர் விண்டோ’(1954) போன்ற திரைப்படங்களை இதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். குறிப்பாக, ‘ரோப்’ திரைப்படம் ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்

தொலைக்காட்சியில் ஹிட்ச்காக்

திரைப்படங்களில் பல உன்னத படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்த அதே நேரத்தில், 1955 முதல் 1965 வரை பத்தாண்டுகள் தொலைக்காட்சியில் ‘ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் ப்ரெசன்ட்ஸ்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 1955-ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஹிட்ச்காக், 1958-ல் ‘வெர்டிகோ’ திரைப்படத்தை இயக்கினார். இன்று நாம் திரைப்படங்களில் அதிகமாகப் பார்க்கும் ‘டாலி ஷாட்’ முதன்முதலில் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்ட திரைப்படம் ’வெர்டிகோ’. இதைத் தொடர்ந்து அவர், 1960-ல் இயக்கிய ‘சைக்கோ’ திரைப்படம் உலகின் மிகச்சிறந்த, மிகப் பிரபலமான திரைப்படங்களில் ஒன்றாகும். இன்று நாம் பார்க்கும் பல சைக்கோ திரைப்படங்களுக்கு அடித்தளம் இத்திரைப்படம்தான். சைக்கோ திரைக்கதையின் நீட்சியாக, அடுத்தடுத்து 3 பாகங்கள் வெவ்வேறு இயக்குநர்களால் இயக்கப்பட்டு வெளிவந்தாலும் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் திரை ஆளுமையை யாராலும் நெருங்க முடியவில்லை.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்

ஹிட்ச்காக்கியன் சினிமா

தன் திரைப்படங்களுக்கென்று தனி இலக்கணத்தையே ஹிட்ச்காக் உருவாக்கினார். அந்த இலக்கணத்தைப் பயன்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் ‘ஹிட்ச்காக்கியன்’ திரைப்படங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. மேகாஃபின் (MacGuffin) திரைக்கதை அம்சத்தைப் பிரபலப்படுத்தி, அதைச் செம்மையாகக் கையாண்டவர்களில் முதன்மையானவர் ஹிட்ச்காக். மேகாஃபின் என்பது, திரைக்கதையில் வரும் ஒரு பொருளாகவோ அல்லது கதாபாத்திரத்தின் லட்சியமாகவோ இருக்கலாம். மேகஃபின் திரைக்கதையை நகர்த்திச் செல்லப் பயன்படும், ஆனால் அதற்குக் காட்சியில் முக்கியத்துவம் காட்ட வேண்டுமென்ற அவசியமில்லை.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், ‘பல்ப் ஃபிக்ஷன்’ திரைப்படத்தில் வரும் அந்த மர்மமான சூட்கேஸ். சூட்கேஸை மையமாகக் கொண்டே திரைக்கதை நகர்ந்தாலும் பார்வையாளர்களுக்கு அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என்பதைக் காட்டாமலேயே திரைப்படத்தை முடித்திருப்பார் டாரன்டினோ. இது ஹிட்ச்காக்கியன் இலக்கணத்துக்குச் சிறந்த உதாரணம். திரைப்படங்களுக்குத் தனி இலக்கணத்தை உருவாக்கி, ‘மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்’ என்று புகழப்பட்ட ஹிட்ச்காக் 1980-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி காலமானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE