சீரியல்ல நிலைக்கணும்னா ரொம்பவே பொறுமை வேணும்!

By பகத்பாரதி

பள்ளிப் பருவத்தை கடந்ததுமே, தமிழ் சின்னத் திரையில் அறிமுகமானவர் ஶ்ரீவித்யா. தொடர்ந்து 12 ஆண்டுகள் கடந்தும் சீரியல் உலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்திருக்கும் ஸ்ரீவித்யா, தற்போது ஸீ தமிழின் ‘சத்யா’ தொடரில் நடித்து வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

நடிப்பின் மீது உங்களுக்கு ஆர்வம் வந்த காலகட்டம் நினைவிருக்கா?

எங்க அம்மா சொல்வாங்க, நான் சின்ன வயசா இருக்கும்போது டிவியை பார்த்துட்டே, “இதுக்குள்ள நான் எப்போ வருவேன்”னு கேட்பேனாம். அப்படி என்னை அறியாமலேயே எனக்கு பிடிச்ச விஷயமா நடிப்பு இருந்திருக்கு. நான் ஸ்கூல் படிக்கும்போது விஜய் டிவியில் வந்த 'கனா காணும் காலங்கள்' சீரியல் எனக்கு ரொம்பவே ஃபேவரெட். 2009-ல அந்த சீரியல்ல நடிக்க செலக்ட் ஆனேன். ஆனா, அந்த சீரியல்ல நடிக்க முடியல. ‘கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்’னு ஒரு சீரியல்ல தான் ஸ்கூல் ஸ்டூடன்ட்டா நடிச்சேன். ரியலா நான் அப்போ காலேஜ்ல ஜாய்ன் பண்ணிருந்தேன். அந்த சீரியல் ஒன்றரை வருடத்தில் முடிஞ்சதும், காலேஜை முடிச்சுட்டு முழுமையா நடிக்க வந்துட்டேன்.

ஆரம்பத்துல நிறைய சீரியல்ஸ்ல உங்களை பார்க்க முடிந்ததே!

ஆமா... கேப் விடாம நடிச்சிட்டு இருக்கேன். காட்ஸ் கிரேஸ்னு தான் சொல்லணும். 'முந்தானை முடிச்சு' ‘இளவரசி’, ‘அழகி’, ‘சிவசங்கரி’, ‘கல்யாண பரிசு’னு வரிசையா நடிச்சேன். 'கல்யாண பரிசு' எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான சீரியல். அதுல பண்ண கேரக்டருக்காக, வெளியில் போகும்போது பல பேர்ட்ட திட்டு வாங்கிருக்கேன். அதே மாதிரி முந்தானை முடிச்சுல, அவந்திகா கேரக்டர இப்பவும் நியாபகம் வச்சிருக்காங்க. இப்ப சத்யா சீரியல்ல அனிதா கேரக்டரும் நல்ல ரீச் ஆகிருக்கு. சொந்தப் பெயரை விட கேரக்டர் பேரைச் சொல்லி மக்கள் கூப்பிடும் போது தான் நாம எந்தளவுக்கு ரீச் ஆகிருக்கோம்னு தெரியுது.

சின்னத்திரையைக் கடந்து சினிமா பக்கம் உங்களை பார்க்க முடிவதில்லையே?

சீரியல் நடிக்க வந்த புதுசுல சினிமாவுக்கும் ட்ரை பண்ணேன். ஒரு சில படங்கள் தான் கமிட் ஆனேன். அந்த டைம்லயே ஒரே நேரத்துல 4 சீரியல் வரைக்கும் நடிச்சேன். அதனால சினிமால கவனம் செலுத்த முடியல. இப்ப யோசிக்கும்போது இன்னும் கொஞ்சம் ட்ரைய் பண்ணிருக்கலாமோனு நிஜமாவே ஃபீல் பண்றேன். இப்பவும், “சினிமாவுல நல்ல கேரக்டர் அமைஞ்சா சொல்லுங்க”னு ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டுத்தான் இருக்கேன்.

உங்களுடைய சக்சஸ்ஃபுல் கெரியருக்கு காரணமா எதைச் சொல்வீங்க?

ஃபேமிலி சப்போர்ட் முக்கிய காரணம். குறிப்பா, எங்க அம்மா. "உனக்கு பிடிச்சத போல்டா பண்ணு"னு சொல்வாங்க. அதுதான் முக்கியம். கல்யாணத்துக்குப் பிறகு என் ஹஸ்பண்ட் சப்போர்ட்டோ சப்போர்ட். நாங்க லவ் மேரேஜ். நான் கமிட் ஆன முதல் படத்துல அவருதான் கேமராமேன். ஷூட் டைம்ல, “ஃபோகஸ் ஃபோகஸ்”னு சொன்னாரு. நான் சீன்ல ஃபோகஸ் பண்ணாம அவர ஃபோகஸ் பண்ணிட்டேன்.

ஏதோ காரணத்தால அந்தப் படம் டிராப் ஆகிருச்சு. ஆனா, எங்க லவ் டிராக் ஓகே ஆகிடிச்சு. சீரியல் இண்டஸ்ரில நிலைச்சு நிக்கணும்னா ரொம்பவே பொறுமை வேணும். ஆரம்பத்துல பெருசா ஆக்ட் பண்ண வாய்ப்பு அமையாது. சரியா சீன், கேரக்டர் அமையாது. அதையெல்லாம் பொறுமையா ஃபேஸ் பண்ணி, ஆர்வம் குறையாம இருந்தாதான் அங்க நீடிக்க முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE