ரஜினி சரிதம் 38:

By திரை பாரதி

மனைவி லதாவின் அன்புத் தொல்லைகளிலிருந்து ரஜினியால் தப்பிக்கவே முடியவில்லை. பகல் முழுவதும் நடித்து முடித்து வீடு திரும்பும் ரஜினி, அக்கடா என்று படுக்கையில் விழுவார். கணவரின் முகத்தை இன்னும் பொலிவானதாக மாற்றவேண்டும் என்று அவரது முகத்தில் கிரீம் தடவிவிட்டு, குறைந்தது ஒருமணி நேரமாவது மல்லாந்து படுத்திருக்க வேண்டும் என்று உத்தரவுபோடுவார் லதா. “நடிக்கும்போது மேக்கப் சரி... தூங்கும்போது எதற்கு?” என்று கெஞ்சிப் பார்ப்பார் ரஜினி. லதா விடமாட்டார். விலையுயர்ந்த கிரீமைப் போட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். ஆசைக் கணவன் தூங்கி எழும்போது அவரது முகம் இன்னும் பளிச்சென்று இருப்பதைப் பார்த்து, லதாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். அவரது முகத்தில் அந்தப் புன்னகையைப் பார்ப்பதற்காகவே, லதாவின் கையால் கிரீம் போட்டுக்கொள்வார் ரஜினி.

ஷூட்டிங் முடிந்து வந்ததுமே குளியல்போடும் ரஜினி, அன்று பாடல்காட்சி ஷூட்டிங் என்றால், அவர் நடித்துவிட்டு வந்த பாடலை பாத்ரூமில் பாடியபடியே குளிப்பார். மெல்ல அடிமேல் அடிவைத்து பாத்ரூம் அருகில்வந்து, “ட்யூன் பிரமாதம்…” என்று லதா குரல்கொடுப்பார். பாத்ரூமில் ஒலித்த பாட்டு, பல்லவியோடு பம்மிவிடும். அதேபோல், ஜாலி மூடில் இருக்கும்போது, தான் நடித்த படங்களின் பாடல்கள் வானொலியில் ஒலித்தால், ஸ்டைலும் மென்மையும் கலந்து ரஜினி ஆட ஆரம்பித்துவிடுவார். அதைப் பார்த்து லதாவுக்கு சிரிப்புத் தாங்காது. சில சமயங்களில் ரஜினியின் நடனத்தில் லதாவும் இணைந்துகொள்வார்.

நடனத்தைப் போலவே, தன்னுடன் நெருங்கிய தொடர்புடைய திரையுலக ஆளுமைகளை இமிடேட் செய்து மனைவியிடம் நடித்துக் காட்டுவதில் ரஜினி கில்லாடி. திருமணத்துக்குப் பிறகு, ‘கழுகு’, ‘தில்லு முல்லு’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. அவற்றில் லதா - ரஜினி காதலுக்கு அச்சாரம் போட்ட தில்லு முல்லு அபார வெற்றியும் பெற்றிருந்தது. அதேநேரம், அதற்கு முந்தைய வருடம் வெளியாகி 100 நாட்களைக் கண்ட ‘ஜானி’, ‘முரட்டுக்காளை’ படங்களும் பல ஊர்களில் ஷிப்டிங் முறையில் ‘செகண்ட் ரன்’ ஓடிகொண்டிருந்தன. ‘ஜானி’ இயக்குநர் மகேந்திரன்இ ரஜினியைப் பார்க்க அவரது வீட்டுக்கு வந்திருந்தார். ரஜினி அவரிடம் புதிய படத்துக்கான கதையைக் கேட்க அழைத்திருந்தார். இவர்கள் எப்போது மீண்டும் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியிருந்த நேரம் அது.

லதாவுடன் ரஜினி

கார் அனுப்பி மகேந்திரனை அழைத்துவரச் சொல்லியிருந்தார் ரஜினி. கார் வீட்டில் நுழைவதைக் கண்டதும் ஹாலிலிருந்து மெல்லோட்டமாக ஓடிய ரஜினி, ஏதோ தனது காதலியைப் பார்த்ததுபோல, “மகி... மகி... வாங்க... வாங்க” என்று உருகிப் போய் அழைத்தார். அவரது கையைப் பிடித்த பிடியை விடாமல், ஹாலுக்கு அழைத்து வந்த ரஜினியின் முகமெங்கும் அவ்வளவு மலர்ச்சி. இதைப் பார்த்து லதா ஆச்சரியப்பட்டார்!

மகேந்திரனுக்கு காபி கொண்டுவந்து கொடுத்துவிட்டு, அவரை கவனித்த லதாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனால், மறந்தும் சிரித்துவிடக் கூடாது என்று கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார். “நீங்க பேசிட்டு இருங்க... இதோ வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு, கிச்சனுக்குப் போய் கஷ்டப்பட்டு.. சத்தமில்லாமல் சிரித்தார் லதா. அப்படியும் அவரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘கடவுளே.. மகேந்திரன் இங்கிருந்து கிளம்பும்வரை நான் சிரித்துவிடக் கூடாது’ என்று வேண்டிக்கொண்டார்.

அடுத்த ஒருமணிநேரத்தில் மகேந்திரன் விடைபெற்றுச் சென்றதும் வரவேற்பறைக்கு வந்த லதா, விழுந்து விழுந்து சிரித்தார். ரஜினி காரணம் புரியாமல், “இப்போ என்ன நடந்துபோச்சு?” என்றார். “எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான். கேபி சார், ஸ்ரீதர் சார், மகேந்திரன் சார் இவங்க மூணு பேரும் ஸ்பாட்ல எப்படி நடந்துப்பாங்க... எப்படி சிகரெட் பிடிப்பாங்கன்னு இமிட்டேட் செய்து நடிச்சுக் காட்டினதை மறந்துட்டீங்களா? மகேந்திரன் சாரைப் பார்த்ததும்... எனக்கு உங்க நடிப்பு நியாபகம் வந்துடுச்சு. அவரை மாதிரியே நடிச்ச நீங்க அவ்வளவு கூலா இருக்கீங்க. எனக்குச் சிரிப்பை அடக்கமுடியல” என்று லதா காரணம் சொல்ல, அதைக் கேட்டு ரஜினியும் விழுந்து விழுந்து சிரித்தார்.

அதன்பிறகு லதா கேட்டதுதான் தரமான கேள்வி! “மகேந்திரன் சரைப் பார்த்ததும் அப்படி உருகுறீங்களே... உங்க ரெண்டுபேருக்குள்ள அப்படி என்னதான் இருக்கு?” என்று மடக்கினார் லதா. “என்ன ஜில்லு இப்படிக் கேட்டுட்ட... என்னை எனக்கே கண்டுபிடிச்சுக் கொடுத்தது மகேந்திரன்தான்” என்று ரஜினி மனம் திறந்து கொட்டத் தொடங்கினார்.

ஒரு சிகரெட் கிடைக்குமா?

ரஜினிக்கும் - மகேந்திரனுக்குமான முதல் சந்திப்பு அது. ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘16 வயதினிலே’ வெற்றிகளுக்குப் பிறகு, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ‘ஆடு புலி ஆட்டம்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்துக்கொண்டிருந்தார் ரஜினி. அந்தப் படத்துக்குக் கதை, வசனம் மகேந்திரன். துக்ளக் பத்திரிகையில் ‘டாக்டர்’ என்கிற புனைப்பெயரில் ‘போஸ்ட் மார்ட்டம்’ என்ற தலைப்பில், தமிழ்ப் படங்களை நார் நாராகக் கிழித்த பத்திரிகையாளர் மகேந்திரன். பின்னர், பத்திரிகை வேலையை விட்டுவிட்டு 3 வெற்றிப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிப் பிரபலமாகியிருந்தார்.

‘ஆடுபுலி ஆட்டம்’ அவருக்கு 4-வது படம். “நல்ல ஸ்கிரிப்ட்டா எழுதிக்கொடுங்க” என்று காசோலையுடன் தேடிவரும் பெரியத் தயாரிப்பாளர்களிடம், “என்னிடம் கதை இல்லை... நல்ல நாவல்கள் இருந்தால் நீங்களே செலக்ட் செய்து கொண்டுவாருங்கள். அதற்கு நான் திரைக்கதை, வசனம் எழுதித் தருகிறேன்” என்று காசோலைகளை வாங்கிக் கொள்ளமால் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார். இதனால் பலரும், “தேடி வர்ற லட்சுமிய காலால எத்திவிடுறான்யா இந்த ஆளு” என்று மகேந்திரன் காதுபடவே பேசினார்கள். மகேந்திரன் அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை.

ஆடுபுலி ஆட்டம்

‘ஆடுபுலி ஆட்டம்’ படப்பிடிப்பு முருகாலயா ஸ்டுடியோவில் நடந்துகொண்டிருந்தது. இப்போது போல் கதை, வசனத்தை எழுதிக்கொடுத்துவிட்டு கதாசிரியர் வீட்டில் இருக்க முடியாது. வசனங்களை கூட்டியோ, குறைத்தோ, திருத்தங்கள் செய்தோ கொடுத்தாக வேண்டும். அதற்கு கதாசிரியர் அவசியம் படப்பிடிப்பில் இருக்க வேண்டும். மகேந்திரன் வேண்டா வெறுப்பாக படப்பிடிப்புக்கு வந்திருந்தார். அவருக்கு சிகரெட் புகைக்க வேண்டும்போல் இருந்தது. இயக்குநரை தவிர கண்ணில்பட்டவர்களிடம் எல்லாம் “ஒரு சிகரெட் கிடைக்குமா?” என்று கேட்டு வெறுத்துப்போய்விட்டார். யாரிடமும் சிகரெட் இல்லை!

நேராக ரஜினியின் ஒப்பனை அறைக்குள் நுழைந்தார். மகேந்திரன் வருவதைப் பார்த்ததும், “வாங்க மிஸ்டர் ஸ்கிரிப்ட் ரைட்டர்” என்று வரவேற்றார் ரஜினி. அதற்கு மகேந்திரன் சொன்ன பதில் ரஜினியை ஒரு விநாடி அசைத்துவிட்டது. “ஐ அம் நாட் எ குட் ஸ்கிரிப்ட் ரைட்டர். இங்கே டாக்கிக்கு தான் ஸ்கிரிப்ட் எழுதமுடியும்; மூவிக்கு எழுதமுடியாது. கேன் ஐ ஹவ் எ சிகரெட்?” என்றார்.

அவருக்கு 555 சிகரெட்டை எடுத்து நீட்டிக்கொண்டே.. “குட் யூ ப்ளீஸ் ரிபீட்...” என்றார் ரஜினி. “கேரக்டர்ஸ் எல்லாம் வசனம் பேசிக்கிட்டே இருக்கிற சினிமாவத் தான் நாம எடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்கோம். அதைத்தான் டாக்கீன்னு சொல்றேன். இது விஷுவல் மீடியம். அதைப் புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிற இயக்குநர்களும், வசனமும் பாட்டும் இருந்தாத்தான் அது படம்ன்னு நினைக்கிற தயாரிப்பாளர்களும் நம்ம சினிமாவோட குடுமியைப் பிடிச்சு வெச்சிருக்காங்க. நீங்க சத்யஜித் ராயோட ‘பதேர் பாஞ்சாலி’யப் பார்த்திருக்கீங்களா? எளிமையான பிரம்மாண்டம் அது! டேவிட் லீனோட ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா? அது பிரம்மாண்டத்தின் எளிமை” என்றார்.

முல்லும் மலரும்

“ரெண்டையுமே இன்ஸ்டியூட்ல பார்த்து வியந்திருக்கேன். ஆனால், நம்ம ரசிகர்கள் விரும்புறது அதுமாதிரி படங்கள் இல்லையே” என்றார் ரஜினி. இப்படிக்கேட்ட ரஜினியைத்தான் ‘முள்ளும் மலரும்’ படத்தில் புதிதாகக் கண்டுபிடித்துக் கொடுத்தார் மகேந்திரன். ‘முள்ளும் மலரும்’ படம் உருவானதன் பின்னணியில், ஆஃப் ஸ்கிரீனில் நடந்த விஷயங்களை லதாவிடம் சொல்லத் தயாரான ரஜினி, அதற்குமுன் ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து மனைவியிடம் காட்டினார். கேபி ரஜினிக்கு எழுதியிருந்த கடிதம் அது.

‘ மைடியர் பாய்...

முள்ளும் மலரும் படம் பார்த்தேன். உன்னை நடிகனாகத் தமிழ்த் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன் டா.

கீப் இட் அப்...’

என்று எழுதியிருந்தார் கேபி. அந்தக் கடிதம் எழுதி 35 ஆண்டுகள் கழித்து, தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கொண்டாடிய ‘டி-40’ என்கிற பிரம்மாண்ட விழாவில், ரஜினியை பேட்டி கண்டார் இயக்குநர் சிகரம் கேபி. அப்போது அவர், “உனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குநர்.. என்னைத் தவிர..?” என்று கேட்ட அடுத்த நொடி, “மகேந்திரன்” என்று பதில் சொன்னார் ரஜினி. ஏன் அப்படிச் சொன்னார்?

(சரிதம் பேசும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE