நடிகர் பிரபாஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிக எதிர்பார்ப்புக்குரிய ’ராதே ஷ்யாம்’ படத்தில் தனது விக்ரமாதித்யா கதாபாத்திரத்தை இன்று(அக்.23) டீஸராக அறிமுகம் செய்து வைத்தார்.
பீரியட் மற்றும் ஃபாண்டஸி கதையான ராதே ஷ்யாம், 70-களில் ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது. இதில் பிரபாஸ் புதிரான ஆருடக்காரராக வருகிறார். ஒருவரின் உள்ளங்கையை பற்றியதும் அவரது மரணத்தை கணித்துவிடும் சக்தி படைத்த விக்ரமாதித்யாவுக்கும், ஓர் இளவரசிக்கும் காதல் வருகிறது. அதையொட்டிய த்ரில்லர் கதையில் மோதல்களும் பிரபாஸின் சாகசங்களும் வருகின்றன. பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அண்மையில்(அக்.13) பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு, ராதே ஷ்யாம் நாயகியின் கதாபாத்திரத்தை போஸ்டராக அவர் வெளியிட்டார். இன்று பிரபாஸின் பிறந்தநாள் முறையாக டீஸர் வெளியாகி இருக்கிறது.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள ’ராதே ஷ்யாம்’ திரைப்படம், தெலுங்கில் மட்டுமன்றி தமிழ், இந்தி என 6 மொழிகளில் வெளியாக உள்ளது. ஜூலையில் அறிவிக்கப்பட்டிருந்த பட வெளியீடு கரோனா காரணமாக தள்ளிப்போனது. பொங்கல் வெளியீடாக 2022, ஜனவரி 14 அன்று ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியாகிறது.