வயசு மாறினாலும் மனசு அப்படியேதான் இருக்கு!

By பகத்பாரதி

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நடிப்புலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பவர் தாரணி கிச்சா. வெள்ளித்திரையில் பல ஜாம்பவான்களோடு கலக்கியதோடு மட்டுமின்றி, சின்னத்திரையிலும் முத்திரை பதித்து வரும் அவரிடம் உரையாடியதிலிருந்து...

நீங்க அறிமுகமான காலகட்டத்தைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கு?

கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்களேனு, என்னோட ஆரம்பகால திரைப்படங்களோட ஸ்டில்ஸை இன்ஸ்டாவில் அப்லோட் பண்ணலாம்னு தேடிட்டு இருந்தேன். அப்போ தோணுச்சி, வயசு மட்டும்தான் மாறிட்டே தவிர இன்னும் அப்போ இருந்த மனசோடதான் இருக்கிறதா. 15 வயசுலயே நடிக்க வந்துட்டேன். 40 படங்களுக்கு மேல நடிச்சாச்சு. 60 மெகா சீரியல்ஸ் வரை பண்ணிருக்கேன். இப்பவும் தாலாட்டு, அபியும் நானும் சீரியல்ஸ் போயிட்டு இருக்கு. அறிமுகம் ஆன காலத்திலேயே இயக்குநர் பாலசந்தர் சார், நடிகர்கள் ஜெமினி கணேசன் சார், கமல் சார் கூடலாம் நடிச்சத இப்போ நினைச்சாலும் பிரமிப்பா இருக்கு. அவங்களோட வொர்க் பண்ணத வாழ்க்கையில் எனக்குக் கிடைச்ச பெரும் பாக்கியமா நினைக்கிறேன்.

கேரக்டர் ஆர்டிஸ்ட்டா வந்துட்டு இருந்த நீங்க, ஒருகட்டத்துல காமெடி ரோல்ல கலக்குனீங்களே... அந்த சக்சஸ்ஃபுல் மாற்றம் எப்படிச் சாத்தியமானது?

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சுட்டு இருக்கும்போது ஒரு டைம், சங்கிலி முருகன் சார்தான் சொன்னாங்க, “மனோரமா ஆச்சிக்கு வயசாகுது, நீ இப்போ ஸ்டார்ட் பண்ணா, காமெடி ரோல்ல ஒரு நல்ல இடத்தை பிடிக்கலாம்”னு. அதோட, ‘பெரிய மருது’ படத்துல கவுண்டமணி சாருக்கு ஜோடியா நடிக்கவும் வச்சாரு. அடுத்தடுத்து நிறைய படங்கள் காமெடி ரோல்ஸ் பண்ணேன். கவுண்டமணி, செந்தில், வடிவேலுனு நிறைய பேரோட நடிச்சேன். அதுக்கு பிறகு, சில காரணங்களால் தொடர்ச்சியா காமெடி ரோல் பண்ண முடியாம போயிடுச்சு. கடவுள் நமக்கு விதிச்சதுதான் நடக்கும்னு நம்புற ஆள் நான். அதான் சின்ன இடைவெளிக்கு பிறகும் இப்போ சீரியல்ஸ்ல தொடர்ந்து நடிச்சிட்டு இருக்கேன்.

சினிமாவில் நடிக்க வந்த காலத்தோட ஒப்பிடும்போது ரொம்ப சீக்கிரமே சீரியல்ல அறிமுகம் ஆகிட்டீங்க இல்லையா?

ஆமா... சன் டிவி தொடங்கப்பட்டு, அவங்க சீரியல் ஸ்டார்ட் பண்ணுன டைம்லையே கமிட் ஆகிட்டேன். அப்போ இருந்து 2004-ல் எனக்குக் கல்யாணம் ஆகுற வரைக்கும் ரொம்பப் பிஸியா இருந்தேன். மாசத்துல 28 நாட்கள் ஷூட்டிங் இருக்கும். ஒரே சமயத்தில், குறைஞ்சது 4 சீரியல்ல நடிச்சேன். ஹீரோயின், செகண்ட் லீட்னு பல கேரக்டர்கள் பண்ணேன். கல்யாணத்துக்கு பிறகு என்னோட குழந்தையை பார்த்துக்க 7 வருசம் பிரேக் எடுத்துட்டு, அப்புறமா நடிக்க வந்தேன். இந்தளவுக்கு தொடர்ந்து நடிச்சிட்டு இருக்க, ஃபேமிலியோட சப்போர்ட்தான் முக்கிய காரணம். ஜாய்ன்ட் ஃபேமிலியா இருக்கிறதால மாமியார் சப்போர்ட் ரொம்பவே இருக்கு. என் கணவரும் சினிமா டைரக்டரா இருக்கிறதால என்னோட சிரமங்களை அவராலயும் புரிஞ்சிக்க முடியுது.

சீரியலைப் போல சினிமாவிலும் மீண்டும் நடிக்க ஆர்வம் இருக்கா... நடிப்பைத் தாண்டிய உங்க இலக்கு என்ன?

ஆரம்பத்துல இருந்தே வாய்ப்புகள் வந்துட்டே இருந்துச்சு. சில வருடங்களுக்கு முன் கூட 2 படங்கள்ல கமிட் ஆனேன். ஆனா, படப்பிடிப்பு நாட்கள் சரியான தேதில வராததால சீரியல் ஷூட்டிங் டிஸ்ட்ரப் ஆச்சு. அதனால அதுக்குப் பிறகு எந்தப் படத்துலயும் கமிட் ஆகல. இப்பவும் சினிமா வாய்ப்புகள் வருது. நேரம் சரியா பொருந்தி வந்தா கண்டிப்பா மீண்டும் சினிமாவில் நடிப்பேன். நடிப்பைத் தவிர்த்து உடைகள் மேல ஈர்ப்பு இருக்கிறதால பொட்டிக் நடத்த ஆர்வம் இருக்கு. முந்தியே ஒரு பொட்டிக் ஷாப் நடத்துனேன். ஆனா சரியான ஆட்களை வேலைக்கு வைக்காததால, சரியா நடத்த முடியாமப் போயிருச்சு. வருங்காலத்துல மீண்டும் தொடங்க வாய்ப்பு அமைஞ்சா நல்லாருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE