எழும்பூர் காவலர் அருங்காட்சியகத்தை பார்த்து நெகிழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

By ரஜினி

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதை ரூ.5.50 கோடி செலவில் புனரமைக்கும் பணி அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. அருங்காட்சியகம் புனரமைக்கும் பணிகள் முடிவடைந்து கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

சிறைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய தனது தந்தையை எண்ணி பெருமை கொள்வதுடன் தனது தந்தையுடனான சிறு வயது அனுபவங்களை நினைவு கூர்வதாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பொதுமக்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இதற்குக் கட்டணமாகப் பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறார்களுக்கு 5 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளை தவிர்த்துப் பிற நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் காவல்துறையினர் பழங்காலம் முதல் தற்போதுவரை பயன்படுத்திய ஆயுதங்கள், வாகனங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்களும், காவல்துறையின் திறமையைப் பறைசாற்றும் வகையில் குறிப்பேடுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சென்னை காவல்துறையின் அழைப்பை ஏற்று எழும்பூரில் அமைந்துள்ள காவலர் அருங்காட்சியகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் குறிப்பேடு புத்தகத்தில், ”இத்தகைய சிறப்புமிக்க காவலர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட தன்னை அழைத்தமைக்கு காவல்துறைக்கு நன்றி. இந்த அருங்காட்சியகத்தில் காவல்துறை மற்றும் சிறைத்துறையின் பல்வேறு சாதனைகளை பார்த்துப் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும் சிறைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய தனது தந்தையை எண்ணி பெருமை கொள்வதுடன் தனது தந்தையுடனான சிறு வயது அனுபவங்களை நினைவு கூர்வதாகவும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காவலர் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் சிவகார்த்திகேயன், ”காவலர் அருங்காட்சியகம் குறித்து கேள்விப்பட்டதும் அங்கு என்ன இருக்கும் என்பதை காண ஆர்வம் உண்டானது. நானும் ஒரு காவலர் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதாலேயே என்னை அழைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் வந்தேன். காவல்துறையில் சேர வேண்டும் என்ற லட்சியமுடையவர்கள் நிச்சயம் வந்து பார்க்க வேண்டிய இடம் இந்த காவலர் அருங்காட்சியகம்” என்று தெரிவித்தார்.

மேலும் காவல்துறையைப் பற்றி பல்வேறு தகவல்கள், காவல்துறையால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களால் ஒவ்வொரு விஷயங்களும் சிறந்த முறையில் விளக்கப்படுவதாகவும் கூறினார். அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களை நிச்சயம் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அமைந்துள்ளதால் அனைவரும் கட்டாயம் இந்த காவலர் அருங்காட்சியகத்தை வந்து பார்வையிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE