சுயத்தை இழக்காத சூட்சுமன்! : நடிகர் நெடுமுடி வேணுவுக்கு அஞ்சலி

By அஜயன் பாலா

’இந்தியன்’ (1996) திரைப்படத்தில், கமலஹாசனால் குத்துப்பட்டு இறக்கும் சிபிஐ அதிகாரி கிருஷ்ணஸ்வாமிதான், நேற்று மறைந்த ‘நெடுமுடி வேணு‘ என்று தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மகத்தான கலைஞனை அறிமுகப்படுத்த நேர்வது துயரம்தான்.

நடிக்கும்போது என்னுடைய மனதை முழுவதுமாக நடிப்பில் இழந்து விடமாட்டேன். என்னதான் முதலில் நடிகனாகவும் பின் அந்த வடிவமைக்கப்பட்ட பாத்திரமாகவும் மாறினாலும் அவை எதுவுமே என் கட்டுப்பாட்டை மீறிப் போவதை அனுமதிக்க மாட்டேன். நான் நானாக இருந்தே, பாத்திரத்தின் லகானை பிடித்துக்கொண்டு அளவோடு வெளிப்படுத்துவேன்.

’மோகமுள்’, ’அந்நியன்’, ’பொய் சொல்லப்போறோம்’, ’சர்வம் தாளமயம்’ என மேலும் ஒருசில தமிழ்ப் படங்களில் நெடுமுடி வேணு நடித்துள்ளார். இருந்தபோதும் அவரது திறமையின் மேதமை இவற்றில் துளியளவும் இல்லை. இவற்றில் ’மோகமுள்’ விதிவிலக்கு எனலாம். தி. ஜானகிராமனின் ’மோகமுள்’ நாவல் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இதில், இசை குருவாக அற்புதமாக நெடுமுடி வேணு நடித்தபோதும் திரைப்படமாக அது சொற்ப பார்வையாளர்களை மட்டுமே சென்றடைந்தது என்பது வருத்தத்துக்குரியது.

சும்மா நிற்காத கலைஞன்!

நெடுமுடி வேணு எப்படிப்பட்ட சிறந்த நடிகர் என்பதைக் கீழே ஒருவர் சொல்லியிருக்கும் சிறந்த நடிகருக்கான அடையாளங்களே சான்று.

”ஒரு சிறந்த நடிகனை உணர்ச்சிமிக்க காட்சியில் அவன் காட்டும் உடல்மொழி அல்லது க்ளோசப் ஷாட்டில் அவன் வெளிப்படுத்தும் முகபாவம் ஆகியவற்றால் அளக்க முடியாது. அதேசமயம் முக்கியத்துவமில்லாத ஒரு காட்சியில் வெறுமனே நிற்கும் தருணங்களில் அந்த நடிகன் எவ்வாறு உடலையும் உணர்வையும் வெளிப்படுத்துகிறான் என்பதை வைத்துத்தான் ஒருவரின் சிறந்த நடிப்புத் திறமையை கண்டறிய முடியும் . அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகராக நான் நெடுமுடி வேணு அவர்களை காண்கிறேன்”.

கோழிக்கோட்டில் நடந்த புத்தக வெளியீட்டின்போது அங்கு வந்திருந்த நெடுமுடி வேணுவைப் பார்த்து, இப்படிப் பாராட்டியவர் கேரளாவின் புகழ்மிக்க ஆன்மீக குரு நித்ய சைதன்ய யதி. மேற்சொன்ன பாராட்டுதான் தனக்கு இதுவரை கிடைத்த அனைத்து விருதுகளையும் விட உயர்ந்த அங்கீகாரம் என நெடுமுடி வேணுவே குறிப்பிட்டார்.

சூப்பர்ஸ்டார்களுக்கு முன்னவர்!

மனித மனத்தின் சிதைவை, குரூரத்தை, அசிங்கத்தை நெடுமுடி அளவுக்குத் திரையில் நுணுக்கமாகச் சித்தரித்தவர் வேறு யாருமில்லை . ஆழ்மனத்தின் இருட்டறைகளைக் குணச்சித்திர நடிப்பில் வெளிப்படுத்திய நடிகர்கள் என்றால், இதே மலையாள திரையுலகில் கோபி, திலகன் என இவருக்கு முன் அகாலம் எய்திய இந்த இரு மேதைகளைத்தான் குறிப்பிட முடியும்.

ஆனாலும் அவர்களுக்கும்கூட கிடைக்காத வித்தியாசமான பாத்திரங்களை செய்தவர் என்றால், அது நெடுமுடி மட்டுமே.

கலையுலகுக்குப் பேர் போன குட்டநாடு பகுதியில், 1948 மே 22-ல் பிறந்தார் நெடுமுடி வேணு. சிறுவயதிலிருந்தே நடிப்புத் துறை மீதிருந்த ஆர்வம் காரணமாக, காவலம் நாராயண பணிக்கர் என்பவரது குழுவில் சேர்ந்தார். நடிப்பு, இசை, களறி எனப் பல துறைகளிலும் கற்றுத்தேர்ந்தார்.

மலையாள சினிமாவின் புதிய அலை வீசத் தொடங்கிய 70-களில், ஜி. அரவிந்தனின் ’தம்பு’ படத்தில் நெடுமுடி அறிமுகமானார். அவ்வாறு தொடங்கிய அவரது நடிப்புப் பயணம் 80-களில் பத்மராஜன், பரதன், கே.ஜி, ஜார்ஜ் மோகன், பாசில் போன்ற அக்காலத்தின் மேதைகள் அனைவரது சிறந்த படைப்புகளிலும் தொடர்ந்தது.

மலையாள திரையுலகில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள மம்முட்டி, மோகன் லால் இருவரும் போராடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதே தன் தொடர் வெற்றிகள் மூலமாக தனக்கென அழுத்தமான இடத்தை பிடித்துக்கொண்டவர் நெடுமுடி வேணு. ’தகரா’ (1979), ’கள்ளன் பவித்ரன்’ (1981), ’ஓரிடத்து ஒரு பயில்வான்’ (1981), ’மஞ்சள் விரிஞ்ச பூக்கள்’ (1980), ‘விடை பறையும் மும்பே‘ (1981), ’கோலங்கள்’ (1981) என அவர் நடித்த அனைத்துப் படங்களுமே மலையாள சினிமாவின் உன்னத படைப்புகள்.

ஒரே பாத்திரமானாலும் வித்தியாசப்படுத்தியவர்!

இவற்றை தொடர்ந்து அடுத்த அலையின் சிறந்த இயக்குனர்களான ப்ரியதர்ஷன் , சிபிமலயில் , கமல் மற்றும் லோகிதாஸ் ஆகியோரது வெற்றிப் படங்களின் அங்கமாக திகழ்ந்தார். இக்காலகட்டத்தில், ’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’, ’சர்கம்’, ’பரதன்’ போன்ற படங்களில் சங்கீத வித்வானாக ஒரே மாதிரி பாத்திரத்தில் நடிக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போதும் அந்தத் திரைப்படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அவர் உயிரூட்டிய விதம் அவர் மேதமைக்குச் சான்று.

ரசிகனாக, வித்வானாக மற்றும் கற்றுத்தரும் குருவாக மூன்றிலும் நாம் காண்பது நடிப்பின் வேறு வேறு பரிமாணங்கள்.

’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’வில் இசை மீது ஆலாதி பிரியம் கொண்ட ராஜா உதய வர்மா தம்புரானாக... ’பரதன்’-ல் தன்னை விஞ்சும் தம்பியின் திறமையை தாங்கிக்கொள்ள முடியாத ராமனாதனாக... ’சர்கம்’ படத்தில் தன் மகனின் திறமையை அறியாமல் அவனை அடிக்கடி அவமானப்படுத்தும் ஞானச்செருக்கு மிகுந்த இசைக்குரு ஹரி பாகவதராக... பிறகு தன்னால் நிராகரிக்கப்பட்ட மகனே கோயில் விழாவில் அனைவரும் வியக்கும் பாடலைப் பாடுவதைக் கேட்டு உணர்ச்சி மிகுந்த தகப்பனாகவும் குற்றவுணர்ச்சி கொண்ட குருவாகவும் நெக்குருகுபவராக... இப்படி தன் கதாபாத்திரங்கள் வழியாகத் திரையில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அபாரமானது.

இளவயதிலேயே தன்னைவிட வயதில் மூத்த நடிகை சாரதாவுடன் ஜோடி சேர்ந்து, வயதான தோற்றத்தில் அவர் நடித்த படம் ’ஒரு மின்னாமிங்கின நொறுங்குவட்டம்’. இந்தப்படம் அவரது பண்பட்ட நடிப்புக்கு இன்னுமொரு சான்று.

”என்னை தொலைத்ததில்லை!

ஜிம்பாப்வே நாட்டில் 2007-ல் நடந்த உலகத் திரைப்பட விழாவில் ஒரே ஒரு இந்திய படத்துக்குத்தான் அங்கீகாரம் கிட்டியது. அது நெடுமுடி நடித்த ’சாய்ரா’. இந்தப் படத்துக்கான சிறந்த நடிகர் விருதைப் பெற்றார் நெடுமுடி. இதுதவிர 3 தேசிய விருதுகள், மாநில விருதுகள், பிலிம் பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைத் தனது அளப்பரிய நடிப்பால் ஈட்டினார்.

ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரிடம் பொது நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் கேட்ட கேள்விக்கு நெடுமுடி அளித்த பதில், காலத்தைக் கடந்து அவர் யாரென பறைசாற்றும்.

”ஒரே சமயத்தில் பல படங்களில் சிறந்த பாத்திரங்களில் சிறப்பாக நடிக்கிறீர்கள். ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்துக்கு எப்படி சட்டென மாற முடிகிறது, அதுவும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்த முடிகிறது?” என கேட்டார் அப்பெண்.

அதற்கு நெடுமுடி, “ஒவ்வொரு படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் காரணம் நான் டைரக்டர் சொல்வதை மட்டும் எடுத்துக்கொண்டு நடிக்கப்போவதில்லை. அந்த பாத்திரத்தின் பிறப்பு, தாய் - தந்தை, கல்வி, வயது, ரசனை என இன்னபிற விவரங்களைக் கூடுதலாக டைரக்டரிடம் கேட்டோ அல்லது நானே கற்பனையில் உருவகித்துக் கொண்ட பிறகே பாத்திரத்துக்குள் என்னைப் பொருத்திக் கொள்வேன்.

அதுபோல நடிக்கும்போது என்னுடைய மனதை முழுவதுமாக நடிப்பில் இழந்து விடமாட்டேன். என்னதான் முதலில் நடிகனாகவும் பின் அந்த வடிவமைக்கப்பட்ட பாத்திரமாகவும் மாறினாலும் அவை எதுவுமே என் கட்டுப்பாட்டை மீறிப் போவதை அனுமதிக்க மாட்டேன். நான் நானாக இருந்தே பாத்திரத்தின் லகானைப் பிடித்துக்கொண்டு அளவோடு வெளிப்படுத்துவேன். அதனால்தான் ஒரே சமயத்தில் என்னால் பல பாத்திரங்களில் நடித்துவிட்டு உடனுக்குடன் வெளியேற முடிகிறது” என்றார்.

அநேக கதாபாத்திரங்களை ஏற்கவும் அவற்றில் இருந்து வெளியேறவும் பழகிய நெடுமுடி என்ற மகாநடிகன், சினிமா காதலர்கள் மனத்தைவிட்டு என்றுமே வெளியேற மாட்டார்.

கட்டுரையாளர்: எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா, ’தமிழ் சினிமா வரலாறு’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர். தொடர்புக்கு: ajayanbala@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE