ரஞ்சித்துக்கு ஜோடியா நடிக்கிறதுல தயக்கமா?

By பகத்பாரதி

தமிழ் சின்னத்திரை உலகில் பேசப்படும் நடிகையாக வரவேண்டும் என நினைத்தேன். என்னுடைய அந்தக் கனவு இப்ப நிறைவேறிவிட்டதா நினைக்கிறேன்” பூரிப்பு பொங்க சொல்கிறார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘செந்தூரப்பூவே’ சீரியலின் நாயகி ஶ்ரீநிதி. அவருடன் உரையாடியதிலிருந்து...

நடிப்பின் மீது எப்படி ஆர்வம் வந்தது?

சின்ன வயசுல இருந்தே நடிக்கிறதுல ஆர்வம் இருந்துச்சு. எனக்கு கேரளாதான் பூர்விகம்கிறதால, ஸ்கூல் படிக்கும் போதே மலையாள ஆல்பம் சாங்ஸ் நிறையப் பண்ணேன். அது மூலமா மலையாளத்துல ‘மலர்வாடி’ சீரியல்ல நடிக்கும் வாய்ப்புக் கிடைச்சது. அது நல்ல அனுபவமா இருந்தது. இருந்தாலும் தமிழ் சீரியல்கள்ல பேசப்படும் நடிகையா வலம் வரணும்னு எனக்குக்குள்ள ஒரு ஆசை அச்சடிச்சாப்ல போல இருந்துச்சு. சன் லைஃப் சேனல்ல ஒளிபரப்பான 'ஜிமிக்கி கம்மல்' சீரியல் மூலமா அதற்கான தொடக்கம் அமைஞ்சுது.

நெசவாளர்களின் வாழ்க்கையைப் பேசும் ‘தறி’ சீரியலில் நடித்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க..!

தமிழ் சீரியல்களில் அதுவரை இல்லாத கதை அது. ரொம்ப எளிமையான பொறுப்பான பொண்ணா 'அன்னம்' என்ற கேரக்டரில் நடிச்சேன். சின்ன கிராமத்துலதான் மொத்த படப்பிடிப்புமே நடந்தது. ஒரு சேலையை எப்படி நெய்யணும்னு ரியலாவே எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. பாரம்பரியமான நெசவு வேலைகளை பக்கத்துல இருந்து பார்த்தது புது அனுபவம். அந்த நாட்கள் முழுக்கவே நிறைய கத்துக்கிட முடிந்தது.

'செந்தூரப்பூவே' சீரியலில் வயதான ஹீரோவுக்கு ஜோடியா நடிக்கிறதுல தயக்கம் ஏதும் இல்லையா?

முதல்ல ஆடிஷன்ல கலந்துக்கிறப்போ எனக்கு கதை இதுதான்னு தெரியாது. நான் செலக்ட் ஆனதும் கதையைச் சொன்னாங்க. ஆனாலும் எனக்கு எந்த தயக்கமோ அதிர்ச்சியோ வரல. ஏன்னா, நான் ஆரம்பத்துல நடிக்க வரும்போதே நல்ல கேரக்டர் கிடைச்சா நடிக்கலாம்னு ஃபிக்ஸ் ஆகியிருந்தேன். அதனாலதான் 'செந்தூரப்பூவே' கதையைக் கேட்டதும் என்னோட கேரக்டர் பிடிச்சது. ரஞ்சித் சார் சீனியர் ஆக்டராச்சே அவருக்கு ஈடா எப்படி நடிக்கிறதுனுதான் தோணுச்சே தவிர, அவருக்கு ஜோடியாக நடிக்க தயக்கமே இல்ல. ஷூட்டிங் டைம்ல என்னை நல்லாவே கைடு பண்றாங்க. கூட நடிக்கிற சீனியர் நடிகர் நடிகைகள் எல்லாருமே ஜாலியா பேசி, பழகுறதோட மட்டும் இல்லாம, நடிப்பு குறித்து நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறாங்க. 'பிக் பாஸ்' ஷோ டெலிகாஸ்ட் ஆகறதால, எங்க சீரியலுக்கு மூணு மாசம் பிரேக். மூணு மாதத்துக்கு அப்புறமும் அதே எனர்ஜியோட திரும்ப வருவோம்.

மலையாளத்திலும் தொடர்ந்து நடிக்கிறீங்களா... அடுத்தகட்ட இலக்கு என்ன?

கரோனா காலம்கிறதால மலையாள சீரியல் எதிலும் கமிட் ஆகல. தமிழ் ஆடியன்ஸ் ரொம்பவே பாசமா ரிசீவ் பண்றாங்க. இன்னும் சொல்லப்போனா, நான் கேரளா போயே ரொம்ப நாள் ஆகுது. இங்கேயே வேலை சரியா இருக்கு. இப்போ சீரியல் டெலிகாஸ்ட் ஆகலன்னாலும் ஷூட் போயிட்டு இருக்கு. அதுபோக ஆல்பம் சாங்ஸ், போட்டோ ஷூட்னு டைம் சரியா இருக்கு.

சினிமா வாய்ப்புகளும் வந்துட்டு இருக்கு. ஏற்கெனவே சொன்ன மாதிரிதான். நல்ல கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா நடிப்பேன். இலக்குனு சொல்றத விட பெரிய ஆசைனு சொல்வேன்... அது என்னன்னா, விஜய் சார், அஜித் சார் கூட ஒரு சின்ன ரோலா இருந்தாலும் ஆடியன்ஸ் மனசுல நிக்கிற மாதிரி நடிக்கணும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE