சினிமா சிற்பிகள் 13: ஏபல் கான்ஸ்: பெருங்காவியத் திரை வித்தகர்!

By க.விக்னேஷ்வரன்

சினிமா என்பது பல கலைகளின் கூட்டுக் வடிவமாக இருந்தாலும், அதன் மையப்புள்ளி கதை சொல்லல் என்ற கலைதான். மனித இனம் தோன்றி தங்களுக்குள் கதை சொல்ல ஆரம்பித்துக்கொண்டதிலிருந்தே, நம்மிடையே வாழ்ந்த மாவீரர்கள், அசகாய சூரர்கள் பற்றிய கதைகளே பெரும்பாலும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதன் நீட்சி சினிமாவிலும் தொடர்ந்தது. ஜார்ஜ் மிலியஸ் காலத்திலேயே ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ போன்ற சரித்திர நாயகி / நாயகர்கள் கதைகள் திரைப்படமாகக் கையாளப்பட்டிருந்தாலும், மாவீரர்களின் கதைகளைக் காப்பியங்களாக (எபிக் ஃபிலிம்ஸ்) திரை வடிவில் வார்த்தெடுக்க பல ஆண்டுகள் சினிமாத் துறை காத்திருக்க வேண்டியிருந்தது.

உலகின் சமீபத்திய வரலாற்றின் மாவீரர்களில் ஒருவரான நெப்போலியன் போனபார்ட்டின் வாழ்க்கை மிக சுவாரசியமானது. ஓர் எளிமையான ராணுவ வீரராக வாழ்க்கையை ஆரம்பித்த நெப்போலியன், பிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக உருவெடுத்த கதையை அதனுடைய பிரம்மாண்டம் குறையாமல் அதேசமயம் தொழில்நுட்ப ரீதியாகவும், நவீன கால சினிமா தொழில்நுட்பங்களுக்கே சவால்விடும் வகையிலும் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ‘நெப்போலியன்’ (1927). இதை இயக்கியவர் ஏபல் கான்ஸ்.

‘நெப்போலியன்’ திரைப்படம் (1927)

திரையும் இலக்கியமும்

1889 அக்டோபர் 25-ல், பாரிஸ் நகரில் ஏபல் கான்ஸ் பிறந்தார். தன்னுடைய 14-வது வயதிலேயே பள்ளிப் படிப்பைக் கைவிட்ட கான்ஸ், சுயமாகவே கலை, இலக்கியம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். ஆனால், முழுமையான பள்ளிப்படிப்பைப் பெறவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. ஆரம்பத்தில் குமாஸ்தா வேலை பார்த்த கான்ஸ், தன்னுடைய 18-வது வயதில் பெல்ஜியமில் உள்ள ராயல் பார்க் தியேட்டரில் தன் நடிப்புப் பயணத்தை ஆரம்பித்தார்.

அங்கே, விக்டர் பிரான்ஸன் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளரான ப்ளெய்ஸி சென்றார்ஸ் போன்றவர்களின் நட்பு கிடைத்தபின், சினிமாவை மேலும் ஆழமாக அணுக ஆரம்பித்தார் கான்ஸ். முதலில் லியோன்’சி பெரட் என்ற இயக்குநருக்குக் காட்சிகள் எழுதிக் கொடுக்கும் பணியை ஏற்றார். அதன்பிறகு ‘காமோன்ட்’ நிறுவனத்துக்கும் காட்சிகள் எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில், காச நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கான்ஸ், அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, ‘லா டிகுயி’ என்ற திரைப்படத்தை 1911-ல் இயக்கினார். அதுதான் அவரது முதல் படம்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், கவனம் ஈர்க்கும் பல திரைப்படங்களை அவர் இயக்கினார். ‘தி மாஸ்க் ஆஃப் ஹாரர்’ (1912), ‘லா ஃபோலியீ டூ டாக்டியுர் டுபே’ (1915) போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் ‘லா ஃபோலியீ டூ டாக்டியுர் டுபே’ திரைப்படம் ‘பியூர் சினிமா' கருத்தியலின் தாக்கத்தில் எடுக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக கொக்கைன் போன்ற ஒரு போதைப்பொருளின் தாக்கத்துக்கு ஆளான ஒரு விஞ்ஞானி, போதையுடன் உலகத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதை விவரிக்கும் காட்சித் தொகுப்புதான் இத்திரைப்படம்.

இதுபோன்ற பல திரைப்படங்களை கான்ஸ் இயக்கிக்கொண்டிருந்த சமயத்தில், முதலாம் உலகப் போர் ஆரம்பித்தது. காசநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் ராணுவம் அவரைச் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது. எனவே, திரைப்படங்களை எழுதி, இயக்குவதில் நேரம் செலவழித்தார் கான்ஸ். திரைப்படங்களில் பல தொழில்நுட்ப உத்திகளை முயன்று பார்த்து தன்னுடைய கலை நேர்த்தியை வளர்த்துக்கொண்டே வந்தார். பல வர்த்தக ரீதியான திரைப்படங்களை இயக்கினாலும், அப்படங்களிலும் இலக்கியங்களில் தன்னைப் பாதித்த விஷயங்களைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

ஏபல் கான்ஸ்

எம்ஜிஎம் நிறுவனத்தின் அழைப்பு

பல போராட்டங்களுக்குப் பிறகு 1917-ல் ராணுவப் பணியில் சேர்ந்த கான்ஸ், ராணுவத்துக்கான படங்களைத் தயாரித்துக் கொடுக்கும் பணியை ஏற்றார். போர்ச் சூழல் தனக்கு ஏற்படுத்திய மன இறுக்கத்தையும், பல நண்பர்களைப் போரில் இழந்த துக்கத்தையும் 1919-ல் ‘ஜக்யூஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் வெளிப்படுத்தினார். முதலாம் உலகப்போரில் நடந்த கொடூரங்களையும், அநியாயங்களையும் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், போரை எதிர்த்து உலகில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிக முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது.

1921-ல் ‘ஜக்யூஸ்’ திரைப்படத்தை அமெரிக்காவில் சந்தைப்படுத்த 5 மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்தார் கான்ஸ். அப்போது அவர் பெரிதும் மதித்த டி.டபுள்யூ.க்ரிஃபித்தைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவிலிருக்கும்போது, தங்களுக்குப் படம் இயக்கிக் கொடுக்க வேண்டும் என்று எம்ஜிஎம் நிறுவனம் விடுத்த அழைப்பை மறுத்து, பிரான்ஸ் திரும்பினார் கான்ஸ்.

‘ஜக்யூஸ்’

நெப்போலியன்

1927-ம் ஆண்டு, ‘நெப்போலியன்’ என்ற பெயரில் மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு பெருங்காவிய வடிவில் திரைப்படமாக்கினார் கான்ஸ். நெப்போலியனின் இறப்பு வரை திரைப்படமாக்க விரும்பினாலும் அதற்குப் பெரும் பொருட்செலவு ஏற்படும் என்பதால், நெப்போலியன் இத்தாலி மீது படையெடுத்து வெற்றி பெறும் காட்சியோடு இத்திரைப்படம் முடிக்கப்பட்டிருக்கும். 1927-ல் இத்திரைப்படத்தை முதல்முறை கான்ஸ் வெளியிட்டாலும், மேலும் மேலும் இத்திரைப்படத்தில் பல புதிய விஷயங்களைப் புகுத்திப் புதுப்புது பதிப்புகளாக வெளியிட்டுக்கொண்டே இருந்தார். நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு ஒரு மிகப்பெரும் சகாப்தம் என்றாலும் கலை நேர்த்தியுடன் சொன்ன விதத்தில், அந்தக் கதையை வேறொரு தளத்துக்கு நகர்த்தி அழுத்தம் மிகுந்த காவியமாக மாற்றியிருப்பார் கான்ஸ்.

கிராஸ் கட்டிங், ஸ்பிளிட் ஸ்கிரீன், க்ளோஸ்-அப், பாயின்ட் ஆஃப் வியூ, மல்டிபிள் எக்ஸ்போஷர், சூப்பர் இம்போசிஷன் போன்ற பல கேமரா நுணுக்கங்களையும் ஒரே படத்தில் மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருப்பார் கான்ஸ். அக்காலகட்டத்தில் கேமராவை நிலையாக நிறுத்திப் படமெடுத்துக்கொண்டிருந்த சமயத்தில், கைகளில் கேமராவை எடுத்துக்கொண்டு ஓடியபடியே பதிவுசெய்வது, குதிரையில் கேமராவைப் பொருத்திப் பதிவுசெய்வது என்று அக்காலகட்டத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பல வழிமுறைகளைக் கையாண்டிருப்பார் கான்ஸ்.

’நெப்போலியன்’ படப்பிடிப்புத் தளத்தில் குதிரையில் கேமராவைப் பொருத்தும் படக்குழுவினர்

கான்ஸின் காட்சி மொழி

ஒரு காட்சியை அமைக்கும் விதத்திலேயே, கதாபாத்திரங்களின் ஆழத்தையும் அதன் தன்மையையும் எப்படி மக்களுக்குப் புரிய வைப்பது என்பதற்கு இத்திரைப்படத்தின் முதல் காட்சியே ஒரு சிறந்த உதாரணம். தான் தங்கிப் படிக்கும் கிறிஸ்துவ பள்ளியில் நடக்கும் பனிப்பந்து எறியும் போட்டியில், 10 பேர் கொண்ட அணிக்குத் தலைவனாக இருக்கும் சிறுவன் நெப்போலியன், 40 பேர் கொண்ட அணியை எதிர்த்துப் போரிடுவார். தனியாளாக எதிரிகளின் கூடாரத்துக்குள் நுழைந்து, எதிரிகளை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் காட்சியைத் தொடர்ந்து, சூப்பர் இம்பொசிஷன் உத்தி மூலம் பின்னணியில் மிகத்தீவிரமாக நடக்கும் சண்டைக் காட்சியின் மேலேயே, சலனமற்ற முகத்துடன் சிறுவன் நெப்போலியனை க்ளோஸ்-அப்பில் காட்டி, தன்னைச் சுற்றி நடக்கும் ஆரவாரங்களுக்கு ஆட்படாமல் மிக நிதானமாகத் தன்னுடைய குழுவினருக்கு நெப்போலியன் உத்தரவுகளைப் பிறப்பிக்கும்படி காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சியில் நெப்போலியனின் மனத் திண்மையை சூப்பர் இம்பொசிஷன் மூலம் நமக்குப் புரியவைத்திருப்பார் கான்ஸ்.

’நெபோலியன்’ (1927)

பனோரமாவின் முன்னோடி

தற்போது தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட நிலையிலிருக்கும் நாம் மொபைல் போன்களிலேயே வைட் லென்ஸ், அல்ட்ரா வைட் லென்ஸ் என்று பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஆனால், சினிமா ஆரம்பித்த கால கட்டங்களில் திரையில் தெரியும் காட்சி சதுர வடிவிலேயே இருக்கும். அக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 35 எம்.எம் படச்சுருள்களும் அதைத் திரையிடப் பயன்படுத்தப்பட்ட புரொஜக்‌ஷன் கருவிகளின் செயல்திறனும் மிகவும் குறைவு. சதுரமான ஒரு திரையில் மிக விஸ்தாரமான காட்சிகளை எப்படி காட்டுவது என்று யோசித்து கான்ஸ் உருவாக்கிய ஒரு உத்திதான் ‘பாலிவிஷன்’.

இன்று நாம் பயன்படுத்தும் ‘பனோரமா’ முறையின் முன்னோடி என்று ‘பாலிவிஷ’னைச் சொல்லலாம். அருகருகே வைக்கப்பட்ட மூன்று கேமராக்கள் மூலம் ஒரே சமயத்தில் எடுக்கப்படும் காட்சிகளின் படச்சுருள்கள் அருகருகே ஒட்டப்பட்டு அவை ஒன்றாகத் திரையிடும்போது காட்சியின் விஸ்தாரம் அட்டகாசமாகத் தெரியும். பிலிம்கள் ஒட்டப்பட்டிருப்பது அப்பட்டமாகத் திரையில் தெரிந்தாலும் அக்காலகட்டத்தில் இது மிகப்பெரும் ஆச்சரியம்தான். குறிப்பாக, இத்திரைப்படத்தின் இறுதியில் இத்தாலிக்குள் படையெடுக்கும் நெப்போலியன், ஆல்ப்ஸ் மலைகளின் சிகரத்தில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் அந்த காட்சி ‘பாலிவிஷ’னில் பார்க்க அதி அற்புதமாக இருக்கும்.

பாலிவிஷன்

ஐந்தரை மணி நேரம் ஓடக்கூடிய ஓர் திரைப்படத்தில், பல காட்சிகள் மிகக் கவித்துவமாகக் கலை நயத்துடனும் படைக்கப்பட்டிருக்கும். கோர்சிகா படைகளிடம் இருந்து நெப்போலியன் அந்திசாயும் வேளையில் குதிரையில் தப்பிக்கும் பரபரப்பான காட்சியைக்கூட, மிகக் கவித்துவமாக அமைத்திருப்பார் கான்ஸ். வண்ணமயமான கண்ணாடி லென்ஸைப் பயன்படுத்துவதன் மூலம் கறுப்பு - வெள்ளை படச்சுருள்களிலும் வண்ணத் திரைப்படங்கள் எடுக்கலாம் என்ற ‘கெல்லர்-டொரியன் சினிமாடோகிராபி’ முறையைப் பயன்படுத்திப் படத்தின் இறுதிக் காட்சியில் பாலிவிஷன் முறையில் பிரான்ஸ் கொடியின் வண்ணம் தெரிவது போலக் குறியீடு வைத்து கலக்கியிருப்பார் கான்ஸ்.

‘கெல்லர்-டொரியன் சினிமாடோகிராபி’ முறையில் எடுக்கப்பட்ட பாலிவிஷன் காட்சி

மவுனத் திரைப்படங்களின் காலம் முடிந்து, வசனத் திரைப்படங்கள் வந்தபோதும் இயக்குநராகத் தன்னுடைய இடத்தை மிக வலுவாக நிலைநிறுத்திக்கொண்டார் கான்ஸ். 1967 வரை பல அற்புதமான திரைப்படங்களை இயக்கிய கான்ஸ், 1981 நவம்பர் 10-தேதி தன்னுடைய 92-வது வயதில் மரணம் அடைந்தார். ‘அழுத்தம் நிறைந்த திரைக்கதையை, அழுத்தமான காட்சிமொழியில் சொல்வதே இயக்குநர்கள் படிக்க வேண்டிய பாலபாடம்’ என்பதை, வாழ்க்கைப் பாடமாக விட்டுச் சென்றவர் ஏபல் கான்ஸ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE