யோகிபாபுவுடன் நடிக்கையில் ரொம்பவே சிரமப்பட்டேன்...

By ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ், தெலுங்கில் ஆண்டுக்கு 2 படங்கள் என்கிற கணக்கில் நடித்து வரும் தாப்ஸியின் கவனம் முழுவதும் குவிந்திருப்பது பாலிவுட்டில். ‘அனபெல் சேதுபதி’ எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், தாப்ஸி நடிப்பில் உருவான ‘ராஸ்மி ராக்கெட்’ அக்டோபர் 15-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. “இந்தப் படத்துக்காக கடும் உழைப்பைக் கொடுத்திருக்கிறேன்... நீதிக்காக ஓடும் ஓர் ஓட்டப்பந்தய வீராங்கனையின் போராட்டம் இந்தப் படம்” என்று சிலாகிக்கும் தாப்ஸியின் தமிழும் ஆங்கிலமும் கலந்த அவரது உரையாடலில் இருந்து...

‘அனபெல் சேதுபதி’ விஜய்சேதுபதி படம் என்பதுபோல் புரமோ செய்தார்கள். ஆனால், படம் முழுக்க நீங்களே நிறைந்திருந்தீர்கள். இது ‘தாப்ஸியின் படம்’ என்று சொல்லி இருந்தால், இன்னும் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்று நினைக்கிறீர்களா?

படத்தின் தலைப்பிலேயே ‘அனபெல்’ என்று என்னுடைய பெயரைத்தானே முதலில் குறிப்பிட்டிருந்தார்கள் (சிரிக்கிறார்). எல்லோரும் ‘விஜய் சேதுபதி’ கடைசி 30 நிமிடம்தான் படத்தில் வருகிறார்’ என்று குறைபட்டுக்கொள்கிறார்கள். என்னையும் விஜய்சேதுபதியையும் முன்னிறுத்தியிருந்தாலும் தன் காதலுக்காக சேதுபதி கட்டிய அரண்மனையை அடைய நினைக்கும் அந்த பொறாமைபிடித்த ராஜாவின் கேரக்டர் மட்டும் என்ன, குறைந்த முக்கியத்துவத்துடனா இருந்தது? சின்னச் சின்ன கேரக்டர்கள் கூட முக்கியத்துவத்துடன் இருந்தன. அந்த அரண்மனை மட்டுமல்ல... சேதுபதியின் சமையல்காரர் இல்லையென்றால் இந்தக் கதையே இல்லையே.

இதற்கு முன் ‘காஞ்சனா 2’ என்று தமிழிலும் ‘அனந்தோ பிரம்மா’ என்று தெலுங்கிலும் 2 பேய்ப் படங்களில் நடித்தேன். அவற்றின் கதை அவ்வளவு திருப்தியாக இல்லை. வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால், தமிழ், தெலுங்கு படவுலக நண்பர்கள் என்மீது வைத்திருக்கும் குட்வில் காரணமாக மறுக்க முடியவில்லை. ஆனால், ‘அனபெல் சேதுபதி’ கதையைக் கேட்டதும் நானே சிரித்தேன். இதில் பயமில்லை, சிரிப்புதான் அதிகமாக இருக்கிறது என்று கதை பிடித்தே ஓகே சொன்னேன். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையே தவிர, ரசிகர்களை ஏமாற்றவில்லை என்றுதான் இன்றுவரை ரிப்போர்ட் வந்துகொண்டிருக்கிறது.

விஜய்சேதுபதி - யோகிபாபு இருவருடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

இயக்குநர் சொல்வதை மட்டுமல்ல... படக்குழுவில் யார் நல்ல ஐடியா கொடுத்தாலும் அவர்களைப் பாராட்டிவிட்டு, அதைத் தனது நடிப்பில் கொண்டுவந்துவிடுவார் விஜய்சேதுபதி. நீளமான காட்சிகளில்கூட அவருடன் நடிப்பது எனக்குச் சிரமாக இல்லை. ஆனால், யோகிபாபுவுடன் நடிக்கும்போதுதான் ரொம்பவே சிரமப்பட்டேன். காரணம், ஆன் ஸ்கிரீன் காமெடியில் மட்டுமல்ல, அவர், ஆஃப் ஸ்கிரீன் காமெடியிலும் அசத்திக்கொண்டே இருப்பார். அவர் என்னை, “டாப்ஸி மேட்டம்...” என்று அழுத்தி உச்சரித்து அழைப்பதே, எனக்கு சிரிப்பை வரவழைத்துவிடும். தவிர, அவருக்கும் எனக்குமான காட்சிகளில், “நான் இப்படிச் சொன்னதும் நீங்க இப்படிச் சொல்லுங்க.. அவ்வளவுதான் இந்த சீன்” என்று சொல்லிக் கொடுப்பார். “யோகிபாபு எனக்கு தமிழ் நன்றாகவே புரியும்… கவலைப்படாதீர்கள்” என்பேன். அதுக்கும் ஒரு ஆஃப் ஸ்கிரீன் பன்ச் கொடுப்பார். நான் சிரிப்பேன்.

‘ராஸ்மி ராக்கெட்’ ஒரு பயோபிக் படமா?

இல்லை. ஆனால், ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு இழைக்கப்பட்ட அநீதியின் தாக்கத்திலிருந்து உருவானது. ஒரு உண்மைச் சம்பவத்தின் பிரதிபலிப்பு படத்தில் உள்ளது. இந்தப் படத்தின் கதாசிரியர் நந்தா பெரியசாமி ஒரு தமிழ்ப் பட இயக்குநர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ராஸ்மி மாதிரியான போராட்ட குணம் மிகுந்த பெண்களை இந்திய நடுத்தரக் குடும்பங்களில் காணலாம். ராஸ்மி நீதியை மீட்டெடுப்பதற்காக ஆடுகளத்தில் வியர்வைச் சிந்துகிறாள். அவளுடைய ஓட்டம் நம் அனைவருக்குமானது.

ஒரு பயோபிக் படத்துக்குத் தேவைப்படும் கேரக்டர் ட்ரான்ஃபர்மெஷனுக்காக நான் வியர்வை மட்டுமல்ல, ரத்தமும் சிந்தியிருக்கிறேன். ஒரு ஓட்டப்பந்தய வீரங்கனைக்கான உடல் தோற்றதைக் கொண்டுவருவதுதான் எனக்குப் பெரும் சவாலாக இருந்தது.

அதேபோல், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜின் பயோபிக்கில் நடித்து முடித்திருக்கிறேன். எனக்கு சுத்தமாகக் கிரிக்கெட் தெரியாது. சிறுவயதிலும் விளையாண்டதில்லை. பாட்மின்டன்தான் பிடிக்கும். அப்படியிருக்கும் போது, கிரிக்கெட் நாயகி படத்தில் என்னபாடு பட்டிருப்பேன் என்று நினைத்துப் பாருங்கள். பயோபிக் படங்கள் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். ஒரு பயோபிக்கில் நடிப்பதற்கான எனர்ஜியில் 3 படங்கள் நடித்துவிடலாம்.

ஒரு ‘பான் இந்தியா’ நடிகையாக கதைகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

இந்தக் கதை ரசிகர்களைக் கவருமா என்பதைத்தான் முதலில் பார்க்கிறேன். நான் கதைகளைத் தேர்ந்தெடுக்க மொழி எல்லைகளை ஒரு தகுதியாகக் கொள்வதில்லை. உதாரணத்துக்கு, ‘காஞ்சனா 2’ படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட்டார்கள். மும்பை, டெல்லி என எங்கும் அந்த படம் வெளியாகியிருந்த சமயத்தில், ‘கஞ்சானா 2’ படக் கதாநாயகியின் பெயரைச் சொல்லித்தான் என்னை அழைத்தார்கள். கதைதான் இறுதியில் நிற்கிறது. ரசனை எங்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. கதை நன்றாக இருந்தால் ரசிப்பார்கள். எனக்கு கதை நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். இன்று வுமன் சென்ட்ரிக் படங்கள் அதிகமாக வருகிறது. ஆனால், அதிலும் நட்சத்திரம் யார் என்றெல்லாம் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை நன்றாக இருந்தால்தான் வுமன் சென்ட்ரிக் படங்களுக்கும் ஆதரவு கிடைக்கும்.

அதிக எண்ணிக்கையில் வுமன் சென்ட்ரிக் படங்களில் நடிப்பவர் என்கிற அடிப்படையில், கதாநாயகர்களுக்கு இணையாக உங்களுக்கு ஊதியம் கிடைக்கிறதா... அல்லது கனவுதானா?

ஹீரோ, ஹீரோயின் என இருவரில் யாராக இருந்தாலும் அவர்களுடைய படத்தின் பட்ஜெட் போல், ஒரு மடங்கு அதிகமாக வசூல் இருந்தால்தான் பட்ஜெட்டில் எத்தனை சதவீதத்தை இவருக்கு ஊதியமாகக் கொடுக்கலாம் என்கிற முடிவுக்கு தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். ஆனால், கதாநாயகர்களுக்காக வரும் கூட்டம், எல்லா வுமன் சென்ட்ரிக் படங்களுக்கும் வரும் என்று சொல்லமுடியாது அல்லவா?

சமமான ஊதியம் என்பது சாத்தியமில்லை என்றாலும் அதிக ரசிகர்கள் எண்ணிக்கை, ஓபனிங் ஆகிவற்றைப் பொறுத்து தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக அதிக ஊதியம் கொடுக்க எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். எனக்கு ஊதிய விஷயத்தில் கசப்பான அனுபவங்கள் ஏதுமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE