ரஜினி சரிதம்- 36 எம்.ஜி.ஆரின் சிபாரிசு!

By திரை பாரதி

இரவு பகலாகப் படப்பிடிப்பில் பங்கேற்ற ஓய்வின்மை காரணமாக, நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு, விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ரஜினி. மெல்ல மெல்ல குணமாகி வந்த அவர், டிஸ்சார்ஜ் தினத்தன்று தனக்குச் சிசிச்சையளித்த மருத்துவர்கள், கவனித்துகொண்ட செவிலியர்களுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டபோது... "சிஎம் மிடமிருந்து போன் வராமல் இங்கிருந்து நீங்கள் கிளம்ப முடியாது. அவரது அலுவலகத்துக்கு தகவல் சொல்லியுள்ளோம். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். எப்போது வேண்டுமானாலும் கால் வரும். அவர் உங்களிடம் பேச விரும்புகிறார்” என்றார்கள்.

இதைக் கேட்ட ரஜினிக்கு ஒரே ஆச்சரியம்! தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு நம் மீது எவ்வளவு அக்கறை என்று நினைத்துக்கொண்டு ஆவலுடன் காத்திருந்தார். அடுத்த அரைமணி நேரத்தில் எம்ஜிஆரிடமிருந்து போன் வந்தது. ரஜினியை அன்புடன் நலம் விசாரித்த எம்ஜிஆர், “தம்பி... திருமணம் செஞ்சுக்கவேண்டிய வயசுல இருக்கீங்க. ஒரு குடும்பப் பாங்கானப் பெண்ணாப் பார்த்து சீக்கிரமா திருமணம் செஞ்சுக்குங்க. அன்பா கவனிச்சுக்க மனைவி இருந்தா நீங்க நலமா இருப்பீங்க. மனைவியை மனசுல வெச்சு நீங்களும் பொறுப்பா நடந்துக்குவீங்க. நான் சொல்றது புரியுதா? நல்ல பெண் அமைஞ்சதும் எனக்குச் சொல்லுப்பா... நானே வந்து உன்னோட திருமணத்தை நடத்தி வைக்கிறேன்” என்று சொன்னார்.

லதாவுடன் ரஜினி

எம்ஜிஆரை “சார்” என்று அழைக்கும் ரஜினி, அவரது விலைமதிப்பற்ற அன்பைப் பெற்றிருக்கிறோமே என்று மனம் நிறைந்தவராக மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். எம்ஜிஆர் சொன்ன வாய் முகூர்த்தமோ என்னவோ அடுத்து வந்த 3 மாதங்கள் கழித்து ‘தில்லு முல்லு’ படப்பிடிப்பில் லதாவை சந்தித்தார். அடுத்த நாளே, “என்னைத் திருமணம் செய்துகொள்ள சம்மதமா?” என்று கேட்டு தன்னுடைய விருப்பதை தெரிவித்தார் ரஜினி. அடுத்தடுத்த நகர்வுகளும் தடங்கலின்றி நடந்து எல்லாம் சுமூகமாக முடிந்திருந்தன. தனக்குப் பெண் கிடைத்துவிட்ட தகவலை எம்ஜிஆருக்குச் சொன்னார் ரஜினி.

அப்படிச் சொல்லி 6 மாதங்கள் ஓடியிருந்தன. திடீரென எம்ஜிஆரிடமிருந்து போன். “என்னப்பா ரஜினி... திருமணம் எப்போ..? நீ எங்கிட்டச் சொல்லியே பல மாதங்கள் ஆச்சே!” என்று கேட்டார் எம்ஜிஆர். அவரிடம் அடக்கமாக, “இல்ல சார்... பெண் வீட்ல தயங்கறாங்க… புதுசா ஏதோ குழப்பம். சரியான பதில் இல்லை” என்றார். “எல்லாம் சரியா நடக்கும்... நம்பிக்கையோட இருங்க” என்று சொல்லி போனை வைத்துவிட்டார் எம்ஜிஆர்.

அடுத்தநாள் லதா வீட்டிலிருந்து ரஜினிக்கு போன். “எங்க எல்லாருக்கும் பூர்ண சம்மதம். நீங்க மீடியாவுக்கு அனவுன்ஸ் பண்றதா இருந்தா பண்ணிடுங்க” என்றார் லதாவின் தந்தை. ரஜினிக்கோ ஒன்றும் புரியவில்லை! நெஞ்சு படபடக்க ஒய்.ஜி.மகேந்திராவுக்கு போன் போட்டார் ரஜினி. நேரில் விரைந்து வந்த ஒய்ஜி., “சிஎம் சாரே என்னோட அப்பாவுக்கு போன் பண்ணிப் பேசிட்டார். ‘ரஜினி நல்லப் பையன்... கொஞ்சம் கோவக்காரன். உங்கப் பெண்ணைக் கொடுங்க. நல்லா பார்த்துக்குவான்’னு சொல்லியிருக்கிறார். இதுக்குமேல யார் உத்திரவாதம் கொடுக்கணும்னு அப்பா ஓகே சொல்லிட்டார். அதுக்கப்புறம் என்னோட மாமனார் வீட்ல மறுபேச்சு இல்ல… இனி நாமெல்லாம் பேசி கல்யாண தேதிய முடிவு பண்ணவேண்டியதுதான்” என்று ரஜினியைக் கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

பிருத்விராஜன் ஆகியிருப்பேன்!

அறிமுகமான 5 வருடங்களில் சூப்பர் ஸ்டார் ஆகியிருந்தபோதும் தன்னுடைய திருமணம் எந்தவிதத்திலும் பரபரப்பான ஒன்றாக இருந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த ரஜினி, தனது திருமணம் மிக எளிமையாக நடக்க வேண்டும் என்ற உறுதியான முடிவுவை எடுத்தார். 1981, பிப்ரவரி 25-ம் தேதி மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார் ரஜினி. பத்திரிகையாளர்கள் கடலெனத் திரண்டுவிட்டனர்.

திருமண போட்டோ

அவர்களிடம் பேசிய ரஜினி, “ வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை அனுபவித்து அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டை சுமந்து, வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களைக் கடந்து இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். அதற்காக இறைவனுக்கு நன்றி. இது என் வாழ்நாளில் முக்கியமான தருணம். நாளை திருப்பதி சன்னிதானத்தில் எனக்கும் லதாவுக்கும் திருமணம். எங்கள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை. நாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம் என்பதைப பல மாதங்களுக்கு முன்பே கண்டுபிடித்து அறிவித்த பிரபல நாளிதழுக்கு என்னுடைய பாராட்டுகள்” என்றார்.

தொடர்ந்து, ‘தில்லு முல்லு’ படப்பிடிப்பில் லதாவை சந்தித்தது, லாதாவின் புத்திசாலித்தனம், இருவரும் கடந்த பல மாதங்களாகப் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டது, இருவீட்டார் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது வரை அனைத்தையும் பொறுமையாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கினார்.

பின்னர், “லதா என்னை மணந்து கொள்ளமாட்டேன் என்று சொல்லியிருந்தால், என் மனம் தாங்கியிருக்காது. ஒருக்கால் அவர் அப்படிச் சொல்லியிருந்தால் சம்யுக்தையை பிருத்விராஜன் தூக்கிச்சென்றது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது” என்று சொல்லிவிட்டு அமைதியானார் ரஜினி. அதன்பிறகு பத்திரிகையாளர்கள் சரமாரியாகக் கேட்ட கேள்விகளுக்கு ரஜினி அளித்த பதில் ஒரு கட்டத்தில் உஷ்ணமாகவும் மாறிப்போனதுதான் அந்த பிரஸ்மீட்டின் ஹைலைட்!

அழைப்பிதழ் இல்லாமல் திருமணம்

பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதலில் சுமூகமாகவும் பக்குவமாகவும் பதில் சொல்லத் தொடங்கினார் ரஜினி. “உங்கள் மனைவியை எப்படி நடத்துவீர்கள்?” என்கிற கேள்விக்கு அட்டகாசமாக சிக்ஸர் அடித்தார்! “ மணமான பெண்கள் வீட்டில் கணவன் காலடியில் நெளியும் புழுவோ, பூச்சியோ அல்ல. அவர்களுக்கு சுதந்திரம் தேவை. அந்த சுதந்திரத்தை நான் முழுமையாகத் தருவேன். லதாவுக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. நன்றாகப் பாடுவார். அவர் விரும்பினால் சினிமாவில் பாடலாம். நடிக்க விரும்பினால் கூட நடிக்கலாம். நான் தடை சொல்லமாட்டேன்” என்று ரஜினி.

“அழைப்பிதழ்கூட இல்லாமல் ஏன் இந்த அவசரத் திருமணம்?” என்று கேட்டார் ஒரு நிருபர். அதற்கு அமைதியாக பதிலளித்த ரஜினி, “அழைப்பிதழ் அச்சடித்து, உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது, தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். இந்தக் காலத்தில் அது எதற்கு? என்னைப்போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால், அதை மக்களுக்குத் தெரியப்படுத்த நவீன வசதிகள் இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை. மேலும், என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள், என்னுடன் பழகி, பணிபுரிந்த பேருந்து நடத்துநர்கள் சிலரைத் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, ஆசியும் வாழ்த்தும் பெற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்.

தாலி கட்டுதல் என்பது வெறும் சடங்கு. ஆனால், தெய்வ சாட்சியாக மனச்சாட்சிக்கு பயந்து, நம்மை ஏற்றுக்கொண்ட ஒரு பெண்ணின் கழுத்தில் தாலிக் கயிற்றைக் கட்டுவதே உண்மையான திருமணம். இதை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமில்லை.” என்றார்.

“செய்தி சேகரிக்க நிருபர்கள், புகைப்படக்கலைஞர்கள் திருமணத்துக்கு வரத் தடையில்லையே?” என்று கேட்டபோதுதான் காரசாரமாக மாறிவிட்டது நிலமை.

ரஜினியும் லதாவும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் ஜோடிப் புகைப்படத்தை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு அந்தக் கேள்விக்கு பதில் சொன்னார் ரஜினி. “ இந்தப் புகைப்படத்தைப் போட்டு எனது திருமணச் செய்தியை வெளியிடும்படி பத்திரிகைச் சகோதரர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். திருப்பதி கோயிலில் மாலை மாற்றி தாலி கட்ட விசேஷ அனுமதி வாங்கியிருக்கிறோம். அங்கே கூட்டம் கூடினால் பிரச்சினை ஏற்படும். எனவே, திருமணத்துக்கு செய்தி சேகரிக்க வரவேண்டாம்”என்றார் ரஜினி.

ஒரு நிருபர் சற்று உரத்தக் குரலில், “மீறி வந்தா?” என்று கேட்க, அதைக் கேட்டதும், “உதைப்பேன்” என்று சட்டெனக் கோபப்பட்டார் ரஜினி. அவரது இந்த ரியாக்‌ஷன் பத்திரிகையாளர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.

ஒரு மூத்த நிருபர், “தற்போது நீங்கள் கூறிய வார்த்தையை அப்படியே பிரசுரிக்கமுடியுமா மிஸ்டர் ரஜினி?” என்றார் வருத்தமான குரலில். அதைக் கேட்டு இறங்கிவந்த ரஜினி, “என் தவறை எனக்குச் சுட்டிக்காட்டிய உங்களை நான் பாராட்டுகிறேன். அப்படிக் கூறியதற்காக வருந்துகிறேன். ஐ யம் வெரி சாரி” என்றார்.

ஆனால், “செய்தி சேகரிக்கறது நம்ம வேலை. அதை செய்யக்கூடாதுன்னு இவர் எப்படிச் சொல்லலாம்” என்று ஒரு ஜூனியர் நிருபர் கத்தவும் மீண்டும் டென்ஷன் ஆனார் ரஜினி. “திருப்பதியில் யாரையாவது கேமராவுடன் பார்த்தால் உதைக்கிறதைத் தவிர வேறு வழியில்லை” என்றார் ரஜினி. மன்னிப்புக் கேட்ட அடி மறைவதற்குள் மீண்டும் பொங்கும் குணமும் கோபமும் சேர்ந்த வித்தியாசமான கலைவைதான் உண்மையான ரஜினி.

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE