லைக்கா நிறுவனத் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துவந்த ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் பெயரிலேயே சதீஷும் ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பதால், சமீபத்தில் யாருக்கு ‘நாய் சேகர்’ என்ற தலைப்பு என்ற சர்ச்சை நிலவியது. தலைப்பை விட்டுத்தர சதீஷ் தரப்பு தயாராக இல்லாத நிலையில், வடிவேலு நடிக்கும் படத்துக்கு ‘வடிவேலுவின் நாய் சேகர்’, ‘ஒரிஜினல் நாய் சேகர்’ என்ற தலைப்புகள் வைக்கக்கூடும் என்ற பல வதந்திகள் நிலவி வந்தன.
இந்நிலையில், வடிவேலு நடிக்கும் திரைப்படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற பெயர் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. லைக்கா நிறுவனம் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. கோட் சூட்டில், மோவாக் ஹேர் ஸ்டைலில், ஜெர்மன் ஷெப்பர்ட், ஹஸ்கி, ரொடிஷன் ரிட்ஜ்பேக், கோல்டன் ரிட்ரீவர், சிப்பிப்பாறை போன்ற நாய்கள் புடைசூழச் சிம்மாசனத்தில் வடிவேலு அமர்ந்திருப்பதுபோல், இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளது.