மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படம், கடந்த அக்டோபர் 1-ம் தேதி வெளியாகி திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சென்னையிலுள்ள வி.ஆர் மாலில் இருக்கும் பி.வி.ஆர் திரையரங்கத்தில் இத்திரைப்படம் வெளியான முதல்நாள் அன்று இரவுக் காட்சியின்போது, படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே பாதியில் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்படுவதாகத் திரையரங்க நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டாலும், இந்த திரைப்படத்தில் வரும் கருத்துகள் மக்களுக்குப் போய்ச் சேரக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு தடுக்கப்பார்க்கிறீர்கள் என்று படம் பார்க்க வந்த ஒரு பெண்மணி சத்தம் போட்டார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஏன் படம் நிறுத்தப்பட்டது, பின்னணியில் உள்ள காரணம் என்ன என்று அறிய, குறிப்பிட்ட பி.வி.ஆர் திரையரங்கத்தைத் தொடர்புகொண்டோம். அத்திரையரங்கத்தின் மேலாளரான குலோத்துங்கன் நம்மிடம் கூறும்போது, “புரொஜக்சன் கருவியில் ஏற்பட்ட ஒரு கோளாறால்தான் இரவுக்காட்சி பாதியில் நிறுத்தப்பட்டது. அந்தத் தொழில்நுட்பக் கோளாறைச் சரி செய்யக் குறைந்தது 2 மணி நேரமாகும் என்பதால்தான் அவ்வளவு நேரம் மக்களைத் திரையரங்கில் சும்மா காத்திருக்கச் சொல்ல முடியாது என்பதால், அந்தக் காட்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தோம். சமூக வலைதளங்களில் பரவுவது போலத் திட்டமிட்டு இத்திரைப்படத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படம் வெளியான அன்று காலை முதல் மாலை வரை 3 காட்சிகளும், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்த பிறகு தொடர்ந்து 2 நாட்களாக இத்திரைப்படம் எந்த சிக்கலுமின்றி பி.வி.ஆர் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் பார்க்க வந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மக்கள் கோபமடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதன் வெளிப்பாடுதான் நீங்கள் சமூக வலைதளத்தில் பார்க்கும் அந்த வீடியோ மற்றபடி அதில் கூறி இருப்பது உண்மையல்ல” என்று கூறினார்.