‘ருத்ர தாண்டவம்’ - மோகன் ஜி முன்வைக்கும் வாதங்கள் சரியா?

By காமதேனு டீம்

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா, ராதா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ருத்ரதாண்டவம்’.

கதைச் சுருக்கம்:

போலீஸ் அதிகாரியான ருத்ர பிரபாகரன், கஞ்சா விற்ற இரண்டு சிறார்களைப் பிடிக்க விரட்டிப்போகும்போது, அவர் எட்டி உதைத்ததில் அவர்கள் இருவரும் கீழே விழுந்து ஒரு சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. சில தினங்கள் கழித்து அந்த சிறுவன் இறந்துவிட, கொலைப்பழி ருத்ர பிரபாகரன் மீது விழுகிறது. இதற்குப் பின்னணியில் வாதாபி ராஜன் என்ற வில்லனின் சூழ்ச்சியும் இருக்கிறது. இதிலிருந்து ருத்ர பிரபாகரன் எப்படி மீண்டு வருகிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதை.

பல மொழித்திரைப்படங்களில் அடித்துத் துவைத்துக் காயப்போட்ட கதைதான் என்றாலும், இந்தப் படத்தில் நிறைய கருத்துகளை முன்வைத்ததன் மூலம் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி.

உறுத்தல்கள் நிறைந்த காட்சியமைப்பைப் படத்தில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. “குற்றவாளிகளின் கையை உடையுங்கள்... யாராச்சும் கேட்டா பாத்ரூமில் வழுக்கி விழுந்தாங்கன்னு சொல்லிக்கலாம்” என்று இணை ஆணையர் ருத்ர பிரபாகரனுக்கு அட்வைஸ் செய்ய, அதற்கு ருத்ர பிரபாகரனும் தலையாட்டுகிறார். இதில் இணை ஆணையர் கதாபாத்திரத்துக்கு அண்ணாமலை என்று ஏன் இயக்குநர் பெயரிட்டார் என்று தெரியவில்லை.

பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் ருத்ர பிரபாகரன், “பப், கிளப்புக்குப் போகும் பெண்களுக்கு வழக்கமா நடக்கிறதுதான், அவங்களுக்கு போதை மருந்து கொடுத்து நிர்வாணப்படுத்தி மிரட்டுவது” என்று சொல்கிறார். ‘பெண்கள் என்றாலே பேதைகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது; அவர்கள் வெளியே போனாலே பலியாகிவிடுவார்கள்’ என்றெல்லாம் 1980-களில் தமிழ் சினிமா பேசிவந்த பிற்போக்குக் கருத்துகள் இந்தப் படத்திலும் எதிரொலிக்கின்றன.

ஒரு காட்சியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஜோசப் முர்ரே கதாபாத்திரத்தில் நடித்த தம்பி ராமையா, ஒரு பெண் காதல் என்ற மிக மிக மோசமான மாயவலையில் விழுந்ததைப் பற்றி ருத்ர பிரபாகரனின் வீட்டுக்கு வந்து சொல்லவரும் காட்சியில், “வீட்டிற்குள் பேச வேண்டாம் சார், மேடம் இருப்பாங்க” என்று சொல்லுவார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைப் பெண்களுக்குத் தெரியாமலேயே பேசி, ஆண்களே அதற்கான தீர்வு கண்டுபிடிப்பது என்ன நியாயம் எனப் புரியவில்லை.

படம் முழுக்க, ரிச்சர்ட் ரிஷி நடிக்கக் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பதைப் பார்க்கவே அயர்வாக இருக்கிறது. படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி நடித்திருப்பது கௌதம் வாசுதேவ் மேனன் மட்டுமே. இடதுசாரிகளை எதிர்மறையாகச் சித்தரிப்பதில் இயக்குநர் அதிக முனைப்பு காட்டியிருக்கிறார். இடதுசாரிகள் போதைப்பொருள் கடத்துவதாக வலிந்து சித்தரித்திருக்கிறார். ஒரு இடதுசாரியின் அலுவலகத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் படம் எதற்கு இருக்கிறது என்று இன்னும் புரியவில்லை.

படத்தின் மையக் கருத்தாக இயக்குநர் வைத்திருப்பது ‘மதமாற்றம்’. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி எந்த மதத்தையும் பின்பற்றவும், பரப்பவும் இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமை இருக்கிறது. ஆனால், ‘மதம் மாறினால், பட்டியலினத்திலிருந்து வெளியேறிப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக மாறிவிடுவீர்கள், அதனால் இட ஒதுக்கீடு உரிமை, வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் போன்ற எந்த சட்ட அம்சங்களையும் பயன்படுத்த முடியாது’ என்று இயக்குநர் இந்தப் படத்தில் நிறுவ முயல்கிறார்.

இடைவெளிக்குப் பிறகு அந்தச் சிறுவனின் கொலையின் பின்னணி தெரிந்துவிடுகிறது. அதற்குப்பின் சலிப்பூட்டும் வகையில் நீதிமன்றக் காட்சிகள் நீண்டுகொண்டே போகின்றன.

சரி, அது திரைக்கதையில் இருக்கும் பிரச்சினை. ஆனால் உண்மையில் சட்டம் என்ன சொல்கிறது? 1976-ம் ஆண்டு ’குண்டூர் மருத்துவக் கல்லூரி தலைமையாசிரியர் vs ஒய்.மோகன் ராவ்’ என்ற வழக்கின் தீர்ப்பில், “ஒருவர் மதம் மாறிவிட்டாலே அவரது சாதி அந்தஸ்து ஒழிந்துவிடும் என்று எந்தச் சட்டமும் இல்லை” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபோக சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் சமூகம் ஒருவர் மீது சூட்டும் அடையாளம். அந்த அடையாளம் சிலருக்கு ஆணவமாகவும் சிலருக்கு அவமானகரமானதாகவும் இருப்பதுதான் சமூக யதார்த்தம். மதம் மாறினாலாவது இதிலிருந்து வெளியேறிவிட முடியாதா என்ற சமூக எத்தனிப்புதான் மதமாற்றம். ஒருவர் மதம் மாறிவிட்டாலே அவருக்கு சமூக அந்தஸ்து கிடைத்துவிடும், அவர் தனக்குக் கிடைக்கும் இடஒதுக்கீட்டு உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் துறக்க வேண்டும் என்று கூறுவது நிராயுதபாணியாக அவரைப் போர்க்களத்தைச் சந்திக்கச் சொல்வதற்குச் சமம்.

ஆதிக்கச் சாதியில் பிறந்து, தீண்டாமையின் வலியறியாமல், சொகுசாகப் பேசும் இப்பேச்சுக்கள் மறுபரிசீலனைக்கு உரியவை. மதம் என்பதை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சாதி என்பது அப்படி அல்ல. அது அருவமாகவும், உருவமாகவும் சிக்கலான ஓர் அமைப்பைக் கொண்டது. அதிலிருந்து விடுபட்டு மேம்பட்ட சமூக நீதி கொண்ட ஒரு சமுதாயத்தை நோக்கிய நகர்வின் சிறு சிறு அடிகள்தான் தனி மனித மதக்கொள்கையில் சுதந்திரம், இடஒதுக்கீட்டு உரிமை, வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் எல்லாம் என்பதை இயக்குநர் புரிந்துகொள்ள வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி, வெளியான பெருபாலான தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. இயக்குநரின் பார்வையில் சில நியாயங்கள் இருக்கலாம். எனினும், பாதிக்கப்படுகின்றவர்களின் பார்வையிலிருந்து ஒரு கலைஞன் சிந்திக்க வேண்டும் என்பதை அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அப்பாவிகளைச் சிக்க வைக்கிறார்கள் என்று படம் எடுத்திருக்கும் மோகன் ஜிக்கு, தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் 50,202 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தெரியுமா எனத் தெரியவில்லை. இந்த 50,202 வழக்குகளும் போலி வழக்கு என்று சொல்லிவிட முடியுமா என்ன? அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் தவறுகளை வைத்துக்கொண்டு மொத்த சட்டத்தையும் பழிப்பது நியாயமற்றது!

இதற்கு முன் மோகன் ஜி எடுத்த ‘திரௌபதி’ திரைப்படத்தோடு ஒப்பிடும்போது, ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் காட்சி மொழி ஓரளவுக்கு மேம்பட்டிருக்கிறது. ஆனால் டப்பிங்கில் ஏகப்பட்ட இடங்களில் சிக்கல்கள், கதாபாத்திர வடிவமைப்பில் பல குழப்பங்கள், சொல்லவரும் கருத்திலும் குழப்பங்கள் என நிறைய குறைகள் இருக்கின்றன.

குறிப்பாக, அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்று கூறிய அடுத்த சில காட்சிகளிலேயே ஒரு பெண் கதாபாத்திரம் மதமாற்றத்துக்கு எதிராக, “நாம எப்படிப் பிறந்தோமோ, அப்படியே போய் சேர்ந்திடணும்” என்ற வசனத்தைப் பேசுகிறார். ‘நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்’ என்று அம்பேத்கரின் புத்தகம் ஒன்று இருக்கிறது என்பதை இந்த இடத்தில் நாம் சொல்ல வேண்டி இருக்கிறது.

டி.டபுள்யூ.க்ரிஃபித்

இறுதியாக, நாம் பழம்பெரும் ஹாலிவுட் இயக்குநரான டி.டபுள்யூ.க்ரிஃபித்தை நினைவுகூர வேண்டும். ஹாலிவுட்டின் போக்கையே மாற்றி அமைத்தவர் க்ரிஃபித். சின்னச்சின்ன வீடியோ துணுக்குகளே சினிமா என்றிருந்த காலகட்டத்தில், திரைக்கதையை மையமாகக்கொண்டு முழுநீள சினிமாக்களை (Narrative Films) அறிமுகப்படுத்தியவர் அவர். திரைப்பட இயக்கத்தில் மிகப் பெரும் மேதையாகவும், அற்புதமான திரைமொழியின் மூலம் பல படங்களைக் கொடுத்த க்ரிஃபித் இன்று வரலாற்றில் அவமானகரமான சின்னமாக நிலைத்து நிற்கிறார். காரணம், அவருடைய ‘தி பெர்த் ஆஃப் எ நேஷன்’(1915) திரைப்படத்தில் கறுப்பினத்தவர்களை மிக மோசமாகச் சித்தரித்து தன்னுடைய வன்மத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

கலை என்பதே நியாத்தைப் பேசுவதுதான். இன்று நம் கையில் கலை இருக்கிறது என்று நியாயத்துக்குப் புறம்பாகக் கலையைப் பயன்படுத்தினால், நிச்சயம் நாளைய வரலாறு நம்மை அவமானப்படுத்தும். திரைமொழி வித்தகரான க்ரிஃபித்துக்கே இந்த நிலைமைதான் என்பதை, புதிதாக வரும் திரைக்கலைஞர்ள் யாராக இருந்தாலும் புரிந்துகொள்ள வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE