பெண்களிடம் இனி மறைக்க எதுவுமில்லை; சமூகம் தான் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்!

By ஆர்.சி.ஜெயந்தன்

வணிகப் படங்களின் கதாநாயகியாக மல்லுக்கட்டாமல், தனது தோற்றத்துக்கு ஏற்றார்போல் கவுரவமான கதாநாயகி வேடங்களில் காத்திருந்து நடிப்பவர் ரம்யா நம்பீசன். டிவி ஆங்கர், பரதக் கலைஞர், பாடகி, நடிகர் என பல தளங்களில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருபவர். தமிழ், மலையாள படவுலகில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் இவரது நடிப்பில் ‘பிளான் பண்ணிப் பண்ணணும்’, ‘என்றாவது ஒருநாள்’ ஆகிய 2 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன. இதையடுத்து, காமதேனு மின்னிதழுக்கு அவர் அளித்த பேட்டி இது.

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் நீங்கள் உங்ளுடைய சினிமா பயணத்தை சுருக்கமாகப் பகிருங்கள்...

அப்பா சுப்ரமணியம் உன்னி ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். ‘ஜூப்ளி’, ‘ஹரிஸ்ரீ’ என்று 2 பெரிய கலைக் குழுக்களில் நாடகங்கள், பல கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அவருக்கு நன்றாகப் பாடவும் வரும். சிறுவயது முதல் அவருடைய நாடகங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். என்னை 6 வயதில் வாய்ப்பாட்டு கற்றுகொள்ள அனுப்பினார். அவரால் தான் எனக்கு இன்று ஒரு பாடகியாகவும் பெயர் கிடைத்திருக்கிறது.

2000-ல் வெளிவந்த ‘சயனம்’ படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானேன். சுமார் 50 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்பு, துணைக் கதாபாத்திரங்கள் கிடைத்தன. அவற்றைத் தொடர்ந்து 2007-ல் நடித்த ‘சாக்லேட்’ மலையாளப் படம் வெற்றிபெற்றது. அதன்பிறகு தெலுங்கு, தமிழ் வாய்ப்புகள் தேடி வந்தன. அனைவருக்கும் பிடித்தமான நடிகராக ஆகவேண்டும் என்றால், ‘வெர்சடைல் ஆர்ட்டிஸ்டாக’ இருக்கவேண்டும் என்று அப்பா சொல்லித் தந்தார். அதைப் பின்பற்றுகிறேன்.

‘ராமன் தேடிய சீதை’ தமிழில் உங்களுக்கு முதல் படம் என்று சொல்லலாமா?

இல்லை. ஃபாசில் சார் ‘ஒருநாள் ஒரு கனவு’ படத்தில் அறிமுகப்படுத்தினார். படம் தோல்வி அடைந்துவிட்டது. ஆனால், அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘காற்றில் வரும் கீதமே’ பாடல் செம்ம ஹிட். எல்லோருக்கும் என்னை தெரியும்படி செய்தது சேரன் சார் நடித்து, அவருடைய உதவியாளர் ஜெகன்நாத் இயக்கிய ‘ராமன் தேடிய சீதை’. இன்றைக்கும் எங்கு போனாலும் ரசிகர்கள் அருகில் வந்து ‘ராமன் தேடிய சீதை’, ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ என 3 படங்களை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். ‘குள்ளநரிக் கூட்டம்’ படத்தை விட்டுவிடுகிறார்களே என வருத்தமாக இருக்கும். தமிழில் அடுத்து, ‘என்றாவது ஒருநாள்’ நான் நடித்துள்ள படங்களில் என் மனதுக்கு நெருக்கமான படைப்பாக இருக்கும்.

உங்களுடைய நடிப்பில் ‘என்றாவது ஒருநாள்’, ‘பிளான் பண்ணிப் பண்ணணும்’ என்று அடுத்தடுத்து 2 படங்கள் வெளிவர இருக்கின்றன. அவற்றைப் பற்றி கொஞ்சம் பேசலாமா?

ஒன்று, சீரியஸான படம், 2-வது, சிரிப்புப் படம். ‘என்றாவது ஒருநாள்’ படத்தில் கோவை மாவட்டத்தில் வசிக்கும் ஓர் ஏழை கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். தற்போது அமேசான் ப்ரைமில் சூர்யா சார் நிறுவனம் தயாரித்துள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தைப் பார்க்கச் சொன்னார்கள். உணர்வு ஒன்றாக இருந்தாலும் ‘என்றாவது ஒரு நாள்’ எளிய விவசாய மக்களுக்கும் கால்நடைகளுக்குமான பிணைப்பானது குளோபலைசேஷனுக்குப் பிறகு எப்படி உடைந்து நொறுங்கிப்போயிருக்கிறது என்பதைச் சொல்லும். விதார்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இயக்கியிருக்கிறார்.

‘பிளான் பண்ணிப் பண்ணணும்’ படத்தில் கொடைக்கானலிலிருந்து சென்னை வந்து கோலிவுட்டில் சாதிக்கும் பெண்ணாக நடித்திருக்கிறேன். ரியோ கதாநாயகன். முதல்முறையாக நகைச்சுவை வேடம். படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. கரோனா 2-வது அலையின் முடிவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, 30 நாட்களில் படத்தை எடுத்து முடித்துவிட்டோம். அதாவது பிளான் பண்ணிப் படத்தை முடித்தோம்.

ரம்யா நம்பீசனின் குறும்படத்தைக் காண:

தமிழைவிடத் தாய்மொழியில் அதிக எண்ணிகையில் நடித்து வருவதற்கு என்ன காரணம்?

நான் சிறுவயது முதல் அங்கே நடிக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட புரிதல் என்று சொல்வேன். முதலில் எனக்கு ஒரே மாதிரியான கேரக்டர்கள் கொடுத்தார்கள். அதை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக அதிரடியாக சில வேடங்களை ஏற்று நடித்தேன். அந்த முடிவை நான் எடுத்திருக்காவிட்டால், இன்று நான் மலையாள சினிமாவில் நிச்சயமாக இருந்திருக்க மாட்டேன் என்று தெரியும். ஒரு கட்டத்துக்குப் பின் ரம்யாவிடம் எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து கொடுக்கலாம் என்று கொடுக்கிறார்கள்.

நவரசா ஆந்தாலஜியில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘லட்சுமி’ என்கிற கதாபாத்திரத்தில் இளமை - முதுமை என 2 தோற்றங்களில் விரும்பித்தான் நடித்தீர்களா?

அது இயக்குநரின் விருப்பம். ப்ரியதர்ஷன் சார், “2 கேரக்டர்களையும் நீயே செய்தால்தான் இந்தக் கேரக்டர் பேசப்படும்” என்றார். நான் இயக்குநரின் நடிகர். அவர் சொன்னதை தட்டவில்லை. அவ்வளவு சிறப்பாக எடுத்தார். ஏனோ அது பேசப்படவில்லை. ஹியூமர் என்று எதை ஏற்றுக்கொள்வது என்பதிலும் நாம் பெரும் கன்சர்வேட்டிவ்களாகத்தான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

‘அன்ஹைடு’ குறும்படம் மூலம் இயக்குநராகவும் முகம் காட்டியிருக்கிறீர்கள்... அதற்கான உந்துதலும் வரவேற்பும் எதிர்ப்பும் எப்படியிருந்தது?

அதற்கான உந்துதல், சினிமாவில் உழைக்கும் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மட்டுமல்ல, சிறு குழந்தைகள் மீதும் நடத்தப்படும் பாலியல் வன்முறையைச் சாடுவதுதான். மலையாள சினிமாவில் ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ சங்கம் தொடங்கப்பட்டபிறகு அதில் அங்கம் வகிக்கும் ஒருத்தியாக, பாலியல் வன்முறைக்கு எதிராக நான் சார்ந்த துறையிலிருந்தே எனது எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பினேன். அதன் வெளிப்பாடுதான் ‘அன்ஹைடு’ குறும்படம். பெண்களிடம் இனி மறைக்க எதுவுமில்லை. சமூகம்தான் தன் கண்களையும் அதன் பார்வையையும் அகல விரித்துப் பார்க்க வேண்டும். சமூகம் என்பதில் ஆண்கள், பெண்கள் ஆகிய 2 தரப்புமே இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE