நகைச்சுவை நடிகர் போண்டாமணி, கதைநாயகனாக நடிக்கும் ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட நடிகர் போண்டாமணி, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கூட்டணியில் முக்கியமானவராக இடம் பிடித்தவர். இதுவரை சிறுசிறு நகைச்சுவைப் பாத்திரங்களிலேயே நடித்துவந்த போண்டாமணி, ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ எனும் படத்தில் முதன்முதலாக நாயகனாக நடிக்கிறார். தனசேகரன் தயாரிக்கும் இந்தப் படத்தை பகவதி பாலா இயக்கியிருக்கிறார்.
தீபாவளி வெளியீடாக இந்தப்படம் திரைக்கு வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நியாயமான கிராம நிர்வாக அலுவலராக நடித்துள்ளார் போண்டாமணி.
சின்ன பண்ணை, பெரிய பண்ணை எனும் இருவர் கிராம மக்களின் சொத்துகளை ஏமாற்றி அபகரிக்க, ஏழை மக்களுக்கு நீதி கேட்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார் போண்டாமணி. “இந்தப் படத்தில் நகைச்சுவை பிரதானமாக இருக்கும். அதேநேரத்தில் நல்ல கருத்துக்களும் இருக்கும்” என அறிவித்துள்ளது படக்குழு.