தாய், தந்தை மீது வழக்குத் தொடுத்திருக்கும் விஜய்!

By காமதேனு டீம்

‘தன் பெயரை அரசியலில் பயன்படுத்தக்கூடாது‘ என்று விஜய், தன் தந்தை மற்றும் தாயாரின் மீது வழக்குத் தொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, விஜய், தனது பெயரை அரசியலில் பயன்படுத்தக்கூடாது எனத் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டிஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், தனது தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம், செயல்பாடுகள் மூலம் ஏற்படும் எந்தவொரு விளைவுக்கும் விஜய் பொறுப்பேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நடிகர் விஜய்யின் ஒப்புதலின்றி, 'அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சியும், 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ளதற்கும் தனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத் தொடர்புமில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். தன் ரசிகர்கள், தனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களைக் கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சிப் பணியாற்றவோ வேண்டாம் என ரசிகர்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், தொடர்ந்து தனது தந்தை உட்பட அவரது அமைப்பின் நிர்வாகிகள் தனது பெயரைப் பயன்படுத்தி வருவதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று, தற்போது சென்னை 15-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கின் நகல்

அந்த வழக்கில், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் எந்தவித நடவடிக்கைகளுக்குத் தான் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் அவரது கட்சியிலும் அமைப்பிலும் தன் பெயரையும்,புகைப்படங்களையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சிவில் வழக்கில் தனது தந்தை, தாய் மற்றும் அவரது அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 11 பேரைப் பிரதிவாதிகளாகச் சேர்த்துள்ளார். இந்த மனு வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE