சினிமா சிற்பிகள் - 10: ராபர்ட் ஜோசப் ஃப்ளகர்டி - ஆவணப்படங்களின் தந்தை!

By க.விக்னேஷ்வரன்

சினிமா என்ற கலை வடிவம் மாயாஜாலக் கற்பனைக் கதைகளைச் சொல்வதற்கு மட்டுமல்லாமல், வாழ்வின் உண்மைப் பக்கங்களைப் பதிவெடுத்து பத்திரப்படுத்தி வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ‘டாக்குமென்டரி’, ‘டாக்குடிராமா’ என்றழைக்கப்படும் ஆவணப்படங்கள், பெரும்பாலானோர் அறிந்திராத கலைப் பரிமாணங்கள். இன்று நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் பிரபலமடைந்த பிறகு, ஆவணப்படங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வணிகரீதியான சினிமாவுக்குக் கிடைத்த வரவேற்பு, ஆவணப்படங்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஆனால், உலகின் முதல் ஆவணப்படம் என்றழைக்கப்படும் ‘நனூக் ஆஃப் தி நார்த்’ (Nanook of the North-1922) வணிக ரீதியாகவும் மக்களின் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கிய ராபர்ட் ஜெ. ஃப்ளகர்டி ஆவணப்படங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஃப்ளகர்டி எடுத்த ஆவணப்படங்கள், ஆவணப்படங்களே அல்ல. அவை சித்தரிக்கப்பட்டவை என்று பலவிதமான விமர்சனங்கள் இருந்தாலும், உலக சினிமாவில் ஆவணப்படங்களின் ஆரம்பப்புள்ளி ராபர்ட் ஜெ ஃப்ளகர்டிதான் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது!

படச்சுருளுடன் ராபர்ட் ஜெ ஃப்ளகர்டி

‘நனூக் ஆஃப் தி நார்த்’

1913-ம் வருடம் தன் முதலாளி சர்.வில்லியம் மெக்கன்சியின் பரிந்துரையின்படி, ஒரு கேமராவுடன் கனடாவின் ஆர்க்டிக் பகுதிக்கு தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார் ஃப்ளகர்டி. மனிதர்கள் உண்ணத் தகுந்த தாவரங்கள் எதுவும் வளராத அந்த வறண்ட பனிப்பிரதேசத்தில், மிருகங்கள் மற்றும் மீன்களின் இறைச்சியை மட்டுமே நம்பி வாழும் இனுக் இனமக்களின் வாழ்க்கையைக் காணொலியாகப் படம் பிடிக்க ஆரம்பித்தார். அவர் எடுத்த காணொலிப் பதிவுகளுக்குக் திரைக்கதையும் வசனமும் தேவைப்படவே இல்லை. அம்மனிதர்களின் வாழ்வே பெருங்கதைதான். அவர்கள் அன்றாடம் செய்யும் பணிகள், அவர்களுக்கிருக்கும் சவால்கள், அவர்களுக்கிடையே இருக்கும் உறவின் பந்தங்கள் ஆகியவற்றை மிக எளிமையாகக் காட்சிப்படுத்த ஆரம்பித்தார் ஃப்ளகர்டி.

ஒருகட்டத்தில் அவர் தான் செய்யவந்திருந்த கனிமவள ஆராய்ச்சி வேலையை மறந்துவிட்டு, படம் பிடிப்பதையே பிரதான வேலையாக மேற்கொள்ள ஆரம்பித்தார். முப்பதாயிரம் அடி நீளமுள்ள அளவுக்குப் படச்சுருளில் காட்சிகளைப் பதிவிட்டு, அந்தப் படச்சுருளோடு டொரான்டோ திரும்பினார் ஃப்ளகர்டி. பின்னர், அந்தக் காட்சிகளை வெட்டி ஒட்டும் எடிட்டிங் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது துரதிருஷ்டவசமாக அவர் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டின் கங்கு, அந்த படச்சுருள்களின் மீது விழுந்து மொத்த படச்சுருளும் தீக்கிரையானது. அக்காலகட்டத்தில், பிலிம் சுருள்கள் சில்வர் நைட்ரேட் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இந்த நைட்ரேட் மிக எளிதாகத் தீப்பற்றக்கூடிய பொருள். அதனால்தான், அக்காலகட்டத்தில் பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகளில், ரயில்களில், டிராம் வண்டிகளில் படச்சுருள்களை எடுத்துப் போவதற்குத் தடையிருந்தது.

தன்னுடைய முழு கலைப் படைப்பும் தீக்கிரையாகிப் போனதில் துவண்டுவிடாமல், மீண்டும் அதே ஆர்க்டிக் பகுதிக்குச் சென்று படமெடுக்கப் பொருளாதார ரீதியாகத் தன்னை பலப்படுத்திக் கொண்ட ஃப்ளகர்டி, 1920-ம் வருடம் மீண்டும் ஆர்க்டிக் பிரதேசம் சென்று படப்பிடிப்பு வேலையைத் தொடங்கினார். இம்முறை சிறந்த கேமராக்கள், பிரின்டிங் மற்றும் படம் திரையிடக் கூடிய கருவிகள் ஆகிய அனைத்து உபகரணங்களுடன் அங்குப் போய்ச் சேர்ந்தார் ஃப்ளகர்டி. படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே, அதைப் பிரின்ட் செய்து அந்த பனிவாழ் மக்களுக்குப் போட்டுக் காட்டுவார். தான் செய்துகொண்டிருக்கும் பணி குறித்து விளக்கி அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி, தன் பட வேலைகளைப் படுவேகமாக நடத்தினார்.

‘நனூக் ஆஃப் தி நார்த்’ ஆவணப் படக் காட்சி...

‘நனூக் ஆஃப் தி நார்த்’ ஆவணப் படக் காட்சி...

அலெக்கிஹல்லாக் என்ற பெயர் கொண்ட இனுக் இன மனிதரை, ‘நனூக்’ என்று பெயர் வைத்து பிரதான கதாபாத்திரமாக நடிக்க வைத்தார் ஃப்ளகர்டி. ‘நனூக்’ என்றால் இனுக் மொழியில் ‘துருவக்கரடி’ என்று அர்த்தம். மேலும் 2 இனுக் இனப்பெண்களை அலெக்கிஹல்லாக்கின் மனைவிகளாகவும் நடிக்க வைத்து, ஓர் ஆவணப் படத்தை இயக்க ஆரம்பித்தார். “செயற்கையாக மனிதர்களை நடிக்க வைப்பது எப்படி ஆவணப்படமாகும்?” என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இத்திரைப்படத்தை அவர் உருவாக்கிய காலகட்டத்தில், ஆவணப்படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ, இன்னின்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்றோ எந்த வரையறையும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், ஆவணப்படம் என்ற ஒரு வகைமையே அக்காலகட்டத்தில் கிடையாது. ‘டாக்குமென்டரி’ மற்றும் ‘டாக்குடிராமா’ என்று 2 வகைமைகளைக் கலந்த கலவையாக ஒரு படைப்பை உருவாக்கிக்கொண்டிருந்தார் என்பது அப்போது ஃப்ளகர்டிக்கே தெரியாது.

இப்படிப் பலவிதமான போராட்டங்களுக்குப் பிறகு ஃப்ளகர்டி உருவாக்கிய திரைப்படம்தான் ‘நனூக் ஆஃப் தி நார்த்’. 2 மனைவிகளைக் கொண்ட ஒரு இனுக் இனத்தவர், அவரைச் சார்ந்து ஒரு கூட்டம், இந்தக் கூட்டத்தின் தலைவராக நனூக் எப்படி அவர்களை வழிநடத்துகிறார், அன்றாட வாழ்க்கையில் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள், பசியின் கொடுமையில் சிக்கி இறந்துவிடாமலிருக்க அவர்கள் என்னென்ன போராட்டங்களை எதிர்கொள்கிறார்கள், பனிப்பிரதேசம் அவர்களை எப்படி வதைக்கிறது, அதை எதிர்த்து எப்படிப் போராடுகிறார்கள்... இப்படி அவர்களுடைய வாழ்க்கைதான் படத்தின் கதை. கடுமையான பனிப்பிரதேசத்தில் அக்காலகட்டத்திலிருந்த அடிப்படையான கேமரா கருவிகளைக் கொண்டு ஃப்ளகர்டி உருவாக்கிய ‘நனூக் ஆஃப் தி நார்த்’ கிளாஸிக் என்றழைப்பதற்கு அனைத்துவிதமான தகுதிகளையும் பெற்ற ஒரு கலைப் படைப்பாகும்.

‘நனூக் ஆஃப் தி நார்த்’ ஆவணப் படக் காட்சி...

அடுத்தடுத்த ஆவணப்படங்கள்

‘நனூக் ஆஃப் தி நார்த்’ திரைப்படம் வெளியான பின்பு, தாங்கள் இதுவரை அறிந்திராத ஒரு இன மக்களின் வாழ்க்கையைத் திரையில் கண்ட ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். இதைத் தொடர்ந்து ஃப்ளகர்டி ஹாலிவுட் சினிமாக்கள், பிரிட்டிஷ் சினிமாக்கள், ஐரிஷ் சினிமாக்கள் என்று பல தளங்களில் இயங்க ஆரம்பித்தார்.

‘மோனா’ (1926)

‘நனூக் ஆஃப் தி நார்த்’ ஆவணப்படத்தைத் தொடர்ந்து, ஃப்ளகர்டி இயக்கிய ‘மோனா’ (1926) ஆவணப்படம் சமோவா தீவுகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வின் காட்சிப் பிரதியாக இன்றும் நிலைத்து நிற்கிறது. அதைத் தொடர்ந்து ‘மேன் ஆஃப் ஆரன்’ (1934) என்று சித்தரிக்கப்பட்ட ஆவணப்படம் (Fictional Documentary), ஆரன் தீவுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தியது. இதுபோக ‘தி பாட்டரி மேக்கர்’(1925), ‘ட்வென்டி ஃபோர் டாலர் ஐலேண்ட்’ (1926) போன்ற குறும்படங்களையும் இயக்கிய ஃப்ளகர்டி, ஜெர்மானிய எக்ஸ்பிரஷனிஸ சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான எஃப்.டபிள்யூ.முர்னாவுடன் இணைந்து ‘டாபு’ என்ற திரைப்படத்தின் திரைக்கதையையும் எழுதினார்.

வாழ்நாளில் பல புறக்கணிப்புகள், விமர்சனங்கள், பாராட்டுகள் என கலவையான எதிர்வினைகளைச் சந்தித்த ராபர்ட் ஜோசப் ஃப்ளகர்டி, தன்னுடைய 67-வது வயதில், 1956-ம் வருடம் ஜூலை 23-ம் தேதி மரணமடைந்தார்.

ராபர்ட் ஜெ. ஃப்ளகர்டி

ஆவணத் திரைப்படங்களின் தந்தை

‘நனூக் ஆஃப் நார்த்’ படத்தில், இனுக் இன மக்களின் வாழ்க்கையை ஃப்ளகர்டி தவறாகச் சித்தரித்திருக்கிறார் எனப் பரவலான விமர்சனங்கள் உண்டு. உதாரணமாக, இத்திரைப்படம் வந்த காலகட்டத்தில் அம்மக்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தாலும், ஆவணப்படத்தில் அவர்கள் ஈட்டியைப் பயன்படுத்துவது போலக் காட்சிப்படுத்தியது சரியா எனப் பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், “இனுக் இன மக்களின் வாழ்வியல் ஒரு காலகட்டத்தில் இப்படியிருந்தது. அதைத்தான் காட்சிப்படுத்த நினைத்தேன்” என்ற பதிலில் ஆணித்தரமாக இருந்தார் ஃப்ளகர்டி.

இன்று ‘டாக்குமென்டரி’, ‘டாக்குடிராமா’, ‘ஃபிக்‌ஷனல் டாக்குமென்டரி’, ‘எத்னிக் ஃபிக் ஷன் என்று பல வகைமைகள் ஆவணப்படங்களில் வந்துவிட்டாலும், ஆரம்ப காலங்களில் அன்றாட வாழ்க்கைக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதைக் காட்சிப்படுத்துவதின் பின்னணியில் ஒரு கலை வடிவம் இருக்கிறது என்று உலகுக்கு முதலில் உணர்த்திய முன்னோடி ஃப்ளகர்டி தான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE