ரஜினி சரிதம் - 33 ஏவி.எம் மீது ரஜினி வைத்திருந்த மரியாதை

By திரை பாரதி

ஏவி.எம் எனும் சினிமா சாம்ராஜ்ஜியத்தில் ரஜினி ஒரு எஜமானைப் போல் வலம் வந்தவர். ஒன்றா.. இரண்டா? மொத்தம் 9 படங்கள். அதில் ஒன்றுகூட பழுதில்லை. முரட்டுக்காளை, போக்கிரிராஜா, பாயும் புலி, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், மனிதன், ராஜா சின்னரோஜா, எஜமான், சிவாஜி என 9 படங்களும் ஒவ்வொரு ரகம். ஏவி.எம். சரவணன் தன்னுடைய ஆரூயிர் நண்பர் ரஜினிகாந்த் பற்றி, தன்னுடைய நினைவுகளை நம்மிடம் தொடர்ந்து பகிர்ந்தார்.

“ஏவி.எம். நிறுவனத்துக்கும் ரஜினிக்குமான உறவு ‘முரட்டுக்காளை’ படத்தில் தொடங்கியது என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த அற்புதமான உறவு ‘முள்ளும் மலரும்’ படத்திலேயே தொடங்கிவிட்டது. ‘முள்ளும் மலரும்’ படத்தின் பிரிவியூ காட்சியைப் பார்த்துவிட்டு வந்த அப்பச்சி, எங்களை அழைத்து, ‘ரஜினிகாந்துடைய நடிப்பை மிகவும் பாராட்டினார். ‘தமிழில் இன்னொரு கிரேட் ஆர்ட்டிஸ்ட் உருவாகியிருக்கிறார். அதில் இயக்குருக்கும் பெரிய பங்கு இருக்கிறது’ என்று ரஜினியையும் இயக்குநர் மகேந்திரனையும் ஒருசேரப் பாராட்டினார். அத்துடன் நிற்கவில்லை அப்பச்சி. ‘முள்ளும் மலரும்’ படத்தின் விநியோக உரிமை எந்தெந்த ஏரியாக்களுக்குக் கிடைக்குமோ அவை எல்லாவற்றையும் வாங்கி விடுங்கள். இந்தப் படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்’ என்றார்.

ஏவி.மெய்யப்ப செட்டியாருடன் ஏவி.எம். சரவணன்...

அவர் சொன்னபடியே அந்தப் படத்தை வாங்க நினைத்தபோது, எல்லா ஏரியாக்களும் விற்றுப்போயிருந்தன. ஏற்கெனவே வாங்கியிருந்த ஒரு விநியோகஸ்தரிடமிருந்து, சில ஏரியாக்களை மீண்டும் அதிக விலை கொடுத்து வாங்கினோம். அப்பச்சி சொன்னது உண்மைதான். நாங்கள் திரையரங்க விநியோகம் செய்த வகையில், எங்களுக்கு லாபகரமான படமாக ‘முள்ளும் மலரும்’ அமைந்துபோனது.

இதற்கு 3 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். ரஜினி அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் வெற்றி விழா, எங்களுடைய ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மஹாலில் நடைபெற்றது. அந்த விழாவில் என் தந்தை கலந்துகொண்டு படத்தில் பங்குபெற்ற கலைஞர்கள் பலருக்கும் கேடயம் வழங்கினார். அப்போது ரஜினிக்கு அப்பாதான் கேடயம் கொடுத்தார். முதன்முதலில் அவரிடம் கேடயம் பெற்றதை ராசியாக நினைத்த ரஜினி, ஏவி.எம். தயாரிப்பில் நடிக்க விரும்பினார். அவர் நடிக்க விரும்பியது போலவே, அவரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று அப்பச்சி நினைத்தது, ஒரு சிறந்த கலைஞனுக்கும் ஒரு சிறந்த நிறுவனத்துக்கும் அமைந்த தொடர்பின் முதல்படி என்பேன்.

மின்னல் வேகத்தில் வந்த பதில்

வில்லன் என்கிற இடத்திலிருந்து கதாநாயகனாக ரஜினி முன்னேறிக் கொண்டிருந்த சமயம் அது. அப்போது எப்படியாவது ரஜினியிடம் கால்ஷீட் வாங்கிவிடவேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் அவரைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தனர். என்னைத் தேடி நேரே எனது அலுவலகத்துக்கு வந்தார் ரஜினி. வந்ததுமே, ‘உங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை’ என்றார். அப்படி அவர் சொன்னதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் ஒரு படத்துக்கு உங்கள் சம்பளம் எவ்வளவு என்ற விவரத்தைக் கேட்டேன்.

அதற்கு ரஜினியிடமிருந்து எந்தவித யோசனையும் இல்லாமல் மின்னல் வேகத்தில் பதில் வந்தது. ‘இப்போது நான் ஒரு குறிப்பிட்டத் தொகை வாங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது என்னை நடிக்கச் செய்கிறீர்களோ, அப்போது எனக்கு மார்க்கெட்டில் என்ன சம்பளம் கொடுக்கப்படுகிறதோ அதைத் தந்து விடுங்கள். கூடுதலாக இருந்தால் கூடுதலாகத் தாருங்கள். குறைவாக இருந்தால் அதையே கொடுங்கள். என்னுடைய மார்க்கெட் மங்கிப்போனால் நீங்கள் என்னை வைத்துப் படமே எடுக்க வேண்டாம்’ என்றார். அவர் இப்படிச் சொன்னது அவர் மீது எனக்கு பெரிய ஆச்சரியத்தையும் மரியாதையும் ஏற்படுத்தியது.

முள்ளும் மலரும்

உடனே நான், ‘இப்போது ஒரு குறிப்பிட்டத் தொகையை முன்பணமாக வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றேன். ஆனால், அடியோடு மறுத்துவிட்டார். 'முதலில் என்னுடைய கால்ஷீட் தேதிகளைத் கொடுத்து விடுகிறேன். படப்பிடிப்புக்குப் போகும்போது முன்பணம் தேவைப்பட்டால் வாங்கிக்கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். வளரும் நேரத்தில் நிலைதடுமாறிப் போய்விடும் நடிகர்களுக்கு மத்தியில், ரஜினி நான் வேறொரு மனிதன், எனக்கென்று சில கொள்கைகள் உண்டு எனக் காட்டிவிட்டுப் போய்விட்டார்.

ரஜினி என்னைச் சந்தித்துவிட்டுச் சென்று சுமார் 15 மாதங்கள் ஓடியேவிட்டன. ‘பில்லா’ படம் வெளியாகி ஒரு மாதம் ஓடியிருந்தது. ஊரெங்கும் ‘பில்லா’ பற்றித்தான் பேச்சாக இருந்தது. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி. அவரிடம் கால்ஷீட் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் ரஜினியை வைத்து படம் இயக்குவது என்று ஒரு மனதாக முடிவானது. அவரைச் சந்தித்துப் பேச எப்போது வரலாம் என்று கேட்டுவரும்படி எங்கள் அலுவலக ஊழியர், கே.வீரப்பனை அனுப்பி வைத்தேன். ரஜினி அப்போது வீட்டில் இருந்தார். ‘என்னைப் பார்க்க சரவணன் சார் வர்றேன்னாரா..? நல்லா இருக்கே கதை. அவர் எவ்வளவு பெரிய மனிதர். அவரைப் பார்க்க நானே வருகிறேன்’ என்று சொன்ன ரஜினி, வீரப்பன் வந்திருந்த வெஸ்பா ஸ்கூட்டரில் அவரைப் பின்னால் உட்கார வைத்து, தானே ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு என் வீடு தேடி வந்துவிட்டார். ரஜினி அப்போது கார் எதுவும் வாங்கியிருக்கவில்லை.

மழையோடு வந்த ரஜினி!

ரஜினியும் வீரப்பனும் தொப்பலாக நனைந்து போயிருந்தனர். ரஜினிக்கு தலைமுடியும் அவ்வளவு அழகு. ஸ்கூட்டரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு, ஸ்டைலாக தலையில் இருந்த மழை தண்ணீரை கைகளால் சிலுப்பி உதறிவிட்டபடி உள்ளே வந்தார். அந்தக் கணத்தில் ரஜினியின் எளிமையைப் பார்த்து திக்குமுக்காடிப் போனேன். ரஜினியை வைத்துப் படம் தயாரிக்கும் முடிவைச் சொன்னதும், ‘ரொம்ப சந்தோஷம் சரவணன் சார்... இப்ப நிஜமாகவே எங்கிட்ட கால்ஷீட் இல்லை. ஆனா, ஏவி.எம். படத்தில் நடிக்க அட்ஜஸ்ட் செய்து கால்ஷீட் தருகிறேன்’ என்றார்.

வியந்துபோனோம். ஏவி.எம். எனும் நிறுவனம் மீது அவர் வைத்திருந்த மரியாதையும் நம்பிக்கையும் விளங்கியது. உடனே ஒப்புக்கொண்டு கிளம்பிய ரஜினி, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் வீரப்பனை உட்காரவைத்துக் கொண்டு மழையோடு ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றுவிட்டார். அந்தப் படம் ‘முரட்டுக்காளை’.

பின்னர், ‘போக்கிரி ராஜா’ படத்தின் ஒரிஜினல் படமான ‘சுட்டாது உன்னாரு ஜாக்ரதா’ தெலுங்குப் படத்தைப் பார்க்க வந்தபோதும் ஸ்கூட்டரிலேயே வந்ததை நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். பின்னர், ரஜினி ஸ்கூட்டர் ஓட்டுவதை கைகழுவியதற்கு அடியேன் தான் காரணம். ரஜினி தனக்கொன்று மனைவிக்கொன்று என ஒன்றுக்கு 3 கார் வாங்கிவிட்ட பிறகும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு சுற்றுவதை விடவில்லை. சிறிது மாறுவேடத்தில் ஸ்கூட்டரில் சுற்றி மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. அப்படி ஒருமுறை செல்லும்போது, ஸ்கூட்டர் கவிழ்ந்து ரஜினிக்கு முகத்தில் அடி. கட்டுப்போட்டு வீட்டில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஒரு நடிகனுக்கு குரலும் முகமும் உடலும் தானே முதலீடு. அதைவிட அவனது குடும்பத்துக்கு அவன் தானே காக்கும் கடவுள். பதற்றத்துடன் அவரைப் பார்க்க வீட்டுக்கு விரைந்து சென்றேன் வீட்டில் இருந்தார்.

‘நீங்கள் நடிகர் என்பதற்காகச் சொல்லவில்லை. உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. உங்களை நம்பி மனைவியும் குழந்தையும் உங்கள் உறவுகளும் இருக்கிறார்கள். உங்களை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். உங்கள் மீது கோடிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் நீங்கள் சிந்திக்காமல் இருக்கமாட்டீர்கள். ஸ்கூட்டரில் செல்ல வேண்டிய அவசியம் அப்படி என்ன இருக்கிறது? உங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பல குடும்பங்களுக்கு கேட்டினை உருவாக்கும். இனி ஸ்கூட்டரைத் தொடமாட்டேன் என்று எனக்கு உறுதிமொழி கொடுத்தால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன்’ என்று அப்போது ரஜினியிடம் சொன்னேன். சிரித்தபடியே ரஜினி அதை ஏற்றுக் கொண்டார். எனக்குத் தெரிந்து ரஜினி அதன்பின்னர் ஸ்கூட்டர் ஓட்டவில்லை” என்கிறார் ஏவி.எம்.சரவணன்.

அப்படிப்பட்ட ரஜினி படப்பிடிப்பில் கைகளை விட்டுவிட்டு பைக் ஓட்டும்போது, கையின் கட்டைவிரலை உடைத்துக்கொண்டார். இதுபற்றியும் பேசிய சரவணன், “மைசூரில் 'போக்கிரி ராஜா' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் செல்லும் ரஜினி, ஹேண்டில் பாரிலிருந்து இரண்டு கைகளையும் எடுத்துவிட்டு, பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஸ்டைலாக கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்தபின், கைக்குட்டையை மறுபடியும் பாக்கெட்டில் வைத்துவிட்டு மீண்டும் ஹேண்டில் பாரில் கைகளை வைத்து ஓட்டிச் செல்வதுபோல் ஷாட் எடுக்க வேண்டும். ஒத்திகை பார்க்காமலேயே காட்சி படமாக்கப்பட்டது, இயக்குநர் நினைத்தது போலவே செய்து அசத்திய ரஜினி, திடிரென நிலை தடுமாறி பைக்கை மரத்தில் மோதிவிட்டு கீழே பாதுகாப்பாகக் குதித்துவிட்டார். ஆனால். கையை கீழே அழுந்த ஊன்றியதில் அவரது இடது கை கட்டை விரல் எலும்பு முறிந்து விட்டது.

ரஜினியை உடனே மைசூருக்கு அழைத்துப்போய் அவசர சிகிச்சை அளித்தோம். மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். ஆனால், ரஜினி மறுத்து அன்றைய காட்சிகளை நடித்துக்கொடுத்து விட்டுத்தான் சென்றார். அதுதான் ரஜினியின் உழைப்புக்கு உயர்ந்த உதாரணம்” என்று சொன்னார்.

(சரிதம் பேசும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE