கடந்த 2012-ம் ஆண்டு இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை ரத்து செய்யக்கோரி, நீதிமன்றத்தை நாடினார் நடிகர் விஜய். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த ஜூலை மாதம், வழக்கை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், விஜய்யை கண்டிக்கும் விதமாக காரசாரமான சில கருத்துகளை தெரிவித்து 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இதைத் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக ஒரு சாரரும், விஜய்யை கண்டித்த நீதிபதியை பாராட்டி ஒரு சாரரும் சமூக வலைதளத்தில் கருத்திட்டனர். நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளான அடுத்த நாளே, அதே ரோல்ஸ்ராய்ஸ் காரில் விஜய் ஷூட்டிங் சென்றது மேலும் வைரலானது.
இதைத் தொடர்ந்து, அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்கக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் விளைவாக 1 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், விஜய் ஏற்கெனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, மீதமுள்ள 80 சதவீதத்தை செலுத்த உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை முழுவதுமாக விஜய் செலுத்திவிட்டார் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.