‘கோதையம்மா’ எனக்கு சவாலான கதாபாத்திரம்!

By பகத்பாரதி

“பொக்கிஷம்’ சீரியல் மூலம் ஹீரோயினாக தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், ‘நாயகி’ சீரியலில் அம்மாவாக நடித்த பிறகே ரசிகர்களிடம் அதிகம் பரிச்சயம் ஆனேன்” என்கிறார் மீரா கிருஷ்ணன். ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவரிடம் பேசியதில் இருந்து...

உங்களைப் பற்றி..?

என்னோட சொந்த ஊர் கேரளாவாக இருந்தாலும் இப்போ நாங்க ஃபேமிலியோட சென்னையில் செட்டில் ஆகிட்டோம். என்னுடைய மாமனார், மாமியார் எங்க கூடத்தான் இருக்காங்க. பசங்களை அவங்க பார்த்துப்பாங்க. இதைத் தவிர என்னைப் பற்றிச் சொல்ல ஸ்பெஷலா ஏதும் இல்லை.

சீரியல் என்ட்ரி குறித்து..?

ஏழு வருடத்திற்கு முன் தமிழ்ல ‘பொக்கிஷம்’ சீரியல்ல தான் ஹீரோயினா அறிமுகம் ஆனேன். அதுக்கப்புறம் என்னோட ரெண்டாவது பையன் பிறந்துட்டதால, கொஞ்சம் கேப் ஆகிடிச்சு. 2018-ல் ‘நாயகி’ சீரியல்ல நடிக்க சீனியர் ஆக்ட்ரஸ் அம்பிகா மேடம் மூலமா வாய்ப்பு வந்தது. நான் ஏற்கெனவே மலையாளத்தில் அவங்களுக்கு பொண்ணாக நடிச்சிருக்கேன். அவங்களுக்கு தங்கச்சியாக நடிக்க நான் பொருத்தமா இருப்பேன்னு அவங்க தான் என்னை பரிந்துரைச்சிருக்காங்க.

அம்பிகா மேம் என்கிட்ட சொன்னப்போ கூட, “எனக்கு தெரியும் நீ ரொம்ப சின்னப் பொண்ணு. இருந்தாலும் இது நல்ல கேரக்டர் நீ ட்ரை பண்ணிப் பாரு”ன்னு சொன்னாங்க. அம்மா கேரக்டரில் நடிக்கணுமான்னு யோசிச்சேன். வேண்டாம்னு சொல்லிடலாம்னு முடிவு பண்ணி வேற கேரக்டர் எதுவும் இருக்கான்னு கேட்கத்தான் டைரக்டரை பார்க்கப் போனேன். என்னைப் பார்த்ததும் டைரக்டர், “நீங்க தான் இந்தக் கேரக்டர் பண்ணணும்... உங்களுக்கு நிச்சயம் நல்ல ரீச் கொடுக்கும்”னு சொன்னார். அந்த நம்பிக்கையில்தான் அம்மா கதாபாத்திரத்தில் நடிச்சேன். என் நம்பிக்கை வீண் போகல.

'தமிழும் சரஸ்வதியும்' தொடர் அனுபவம்..?

கோதையம்மா கேரக்டர் ரொம்ப போல்டான ஒரு கேரக்டர். அவங்க எடுக்கிற முடிவில் ரொம்ப உறுதியா இருப்பாங்க. இந்த மாதிரி ஒரு கேரக்டரில் நான் இதுக்கு முன்னாடி நடிச்சதில்லை. அதனால, பர்சனலா எனக்கு இது சவாலான கதாபாத்திரமாக இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகும்போது வீட்டுக்கு போற ஃபீல்தான் இருக்கும். செட்ல எல்லோரும் செம ஜாலியா இருப்போம்.

'சித்தி 2'-வில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறீங்களே..?

எனக்கும் அப்படி என்னை திரையில் பார்க்க புதுசாதான் இருக்கு. உடல்மொழிக்கு ஏற்ற மாதிரி குரலை உயர்த்தி பர்ஃபார்ம் பண்ணணும். என்னுடைய முழு திறமையையும் இந்தக் கேரக்டர் மூலமா வெளிப்படுத்திடுறேன்னு நம்புறேன்.

நீங்க ஸ்டேட் அவார்ட் எல்லாம் வாங்கியிருக்கீங்களாமே..?

ஆமாங்க! மலையாளத்தில் நான் நடிச்ச முதல் படத்திற்கு 'சிறந்த நடிகை' பிரிவில், ஸ்டேட் அவார்ட் கிடைச்சது. கமல் சார் கூட ஒரு படம் நடிச்சேன். மலையாளத்தில் இந்த இரண்டு படங்களில் தான் நடிச்சிருக்கேன். அதே மாதிரி கிட்டத்தட்ட 7 சீரியல்களில் நாயகியாக மலையாளத்தில் நடிச்சிருக்கேன்.

வெள்ளித்திரை என்ட்ரி குறித்து..?

சினிமாவா இருந்தாலும் சரி, வெப் சீரிஸாக இருந்தாலும் சரி முக்கியமான கதாபாத்திரம் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE