எம்ஜிஆர் வேடத்தில் நடிப்பதே சவால் தான்!

By ஆர்.சி.ஜெயந்தன்

அரவிந்த்சாமி என்றாலேஅழகு, ரொம்பக் கூலான மனிதர் என்றெல்லாம் ரசிகர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ‘தளபதி’ படத்தில் அறிமுகமாகி, ‘தலைவி’ வரை தன்னுடைய இருப்பை தொடர்ந்து நிலைநாட்டி வரும் அவர், தற்போது இயக்குநராகவும் புதிய முகம் காட்டியிருக்கிறார். காமதேனுவுக்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதி இது.

உங்கள் சொந்த ஊரான தஞ்சையின் மெலட்டூர், 'பாகவத மேளா’ நாடகங்களுக்கு ரொம்பவே புகழ்பெற்ற ஊர். பாகவத மேளா நாடகத்தில் சிறு வயதில் நடிக்கும் வாய்ப்பு ஏதும் கிடைத்ததா... உங்களுக்கு கிராமத்து வாழ்க்கை பிடிக்குமா?

இரண்டு விஷயங்கள்... ஒன்று என்னுடைய அம்மா பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர். அப்பா மெலட்டூர். அம்மா பரதநாட்டிய கலைஞர். அப்பா, சிறு வயது முதலே மெலட்டூரில் பாகவத மேளாவைப் பார்த்து வளர்ந்தவர். இரண்டு பேரையும் இணைத்ததும்கூட கலையாக இருக்குமோ என்று நினைக்கிறேன். அப்பா - அம்மா திருமணம் முடிந்தபிறகு ,பூந்தமல்லியில் குடியேறி வாழ்ந்தார்கள்.

சிறு வயதில் பூந்தமல்லி எனக்கு பரிச்சயமான கிராமம். அங்கே அப்பாவுக்கு பண்ணை வீடு இருந்தது. ஆறு, ஏரி, வயல் என எனக்குப் பசுமைதான் தோழன். சிறுவயதில் கிராமத்து வாழ்க்கையை அனுபவித்திருக்கிறேன். அதேபோல் மாநகரத்து வாழ்க்கையில் வளர்ந்திருக்கிறேன். சென்னை என்பதேகூட ஒரு பெரிய கிராமம் என்று புரிந்துகொண்டிருப்பவன். குளோபலைசேஷனுக்குப் பிறகான இன்றைய சென்னை வேறு என்றாலும், கிராமத்து மனிதர்களின் கோபமும் பாசமும் சென்னைவாசிகளிடம் அப்படியே இருக்கிறது.

சென்னையை நேசித்து, இங்கே வருபவர்களும் சென்னைவாசிகளாக மாறிப்போய்விடுகிறார்கள். அவர்கள் சொந்த ஊரைத் துண்டித்துக்கொண்டு சென்னையிலேயே தங்கிவிடுவதும் இந்த ஊரின் தாயுள்ளத்துக்கு எடுத்துக்காட்டு.

பாகவத மேளா பற்றி கேட்டீர்கள். கோயில் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்துவரும் நாடகக் கலை அது. நமது கல்ச்சரின் ஒரு பகுதி. நான் பாகவதமேளா நாடகத்தை சென்னையில் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அதற்குக் காரணம் அப்பா. பாகவதமேளா கலைஞர்களைச் சென்னை பூந்தமல்லி வீட்டுக்கு அழைத்து, அவர்களுக்கு விருந்துகொடுப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார். தனது சொந்த ஊரின் கலையை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்த அப்பா, சென்னை மியூசிக் அகாடமியில் அதை நிகழ்த்த வைத்தார்.

‘மெலட்டூர் பாகவத மேளா’ என்று ஒரு கலைவடிவம் இருக்கிறது. அதைக் காப்பற்ற வேண்டும் என்று பத்திரிகையாளர்களை அழைத்துக் கூறினார். அப்போது நான் சின்னப்பையன். பெண் வேடங்களையும் ஆண்களே ஏற்று நடிக்கும் பக்த பிரகலாதன் கதை அது. பிரம்மாண்டமான காட்சிகள், பாடல்கள் என்று பிரம்மிப்பாக இருக்கும். அதேபோல், அம்மாவுடைய சகோதரியின் கணவர் பெயர் நடராஜன். அவரும் சிறந்த பரதக் கலைஞர். மிடில் ஈஸ்டில் இருந்தார். அவருக்கும் சொந்த ஊர் மெலட்டூர் தான். அவரும் பணி ஓய்வுக்குப் பின் மெலட்டூர் திரும்பி, பாகவத மேளாவைச் சிறப்புற நடத்தி வந்தார். கரோனா முதல் அலையின் போது மறைந்துவிட்டார். இப்போது, மெலட்டூருடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

இளம் வயதில் தஞ்சாவூரிலிருந்து கொல்கத்தாவில் குடியேறி, அங்கே தன்னுடைய தொழிலை அமைத்துக்கொண்டவர் உங்களுடைய அப்பா. அந்தத் தொடர்பில் தான் உங்களுக்கு அரவிந்தரின் பெயரை சூட்டினாரா?

ஆமாம்! சிறுவயதில் ‘ஸ்ரீ அரபிந்தோ’ என்று எழுத்தப்பட்ட பெரிய பைண்டிங் தொகுப்புகள் எங்கள் வீட்டு புத்தக அலமாரியில் நிறைந்திருக்கும். இப்போதும் அந்தப் புத்தகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அரவிந்தரின் தத்துவங்கள், எழுத்துகளை அப்பா வாசித்து அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை பெரியவனானதும் தெரிந்துகொண்டேன். அரவிந்தரின் பெயர் எனக்குச் சூட்டப்பட்ட பின்னணியை உணர்ந்துகொண்டேன். அதைப் பற்றி அப்பாவிடம் கேட்டதில்லை.

அப்பாவிடமிருந்து உங்களையும் அறியாமல் வந்தடைந்த அவருடைய குணம் என்று எதைச் சொல்வீர்கள்?

அறிந்து வந்தது கோபம் என்று நினைக்கிறேன். அறியாமல் வந்தது தேடல். அப்பா வி.டி. சுவாமியின் வாழ்க்கை, தேடல்கள் நிறைந்த ஒன்று. 18 வயதில் பள்ளியிறுதி வகுப்பை முடித்திருந்த நேரத்தில், வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் கொல்கத்தாவுக்கு ஓடிப்போய்விட்டார். கிராமத்து வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துகொள்ளவேண்டும் என்கிற உந்துதல்தான் அதற்குக் காரணம். அங்கேபோய் முதலில் கணக்குப்பிள்ளை, பிறகு இதெல்லாம் ஒரு வேலையா என்று அதை உதறிவிட்டு, பள்ளி ஆசிரியராக வேலைசெய்திருக்கிறார்.

பிறகு, அதுவும் பிடிக்காமல்போய் ‘ஸ்டீல் ட்ரேடிங்’ துறையில் நுழைந்து சொந்தத் தொழில் தொடங்கி பலருக்கு வேலை கொடுத்திருக்கிறார். ஸ்டாக் மார்க்கெட்டில் தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். வந்த வருமானத்தை மூட்டை கட்டி வைக்காமல், தேசிய இயக்கத்தில் கலந்து நேதாஜியின் ஐஎன்ஏவுக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். நேதாஜியுடன் நேரடிப் பழக்கத்தில் இருந்திருக்கிறார். விடுதலைப்போராட்டத்தில் வழக்கில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றி விட்டிருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்றதும் தன்னுடைய ஸ்டீல் விற்பனையை இந்தியாவுடன் நிறுத்திக்கொள்ளாமல், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார். 60-களில் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் கிடையாது. 8 இடங்களில் மாறி மாறிச் செல்லவேண்டும். அதற்கெல்லாம் சளைத்துவிடாமல், அமெரிக்கா சென்று ஆர்டர்கள் பிடித்துவந்து ஸ்டீல் ஏற்றுமதி செய்திருக்கிறார் அப்பா.

அவர் தன்னுடைய சாகசக் கதைகளைச் சொல்லக் கேட்கும்போது வியப்பாக இருக்கும். துணிச்சல் மிக்கவர். எனக்கு அவர்தான் ஒரு ரியல் லைஃப் ஹீரோ என்பேன். அவருடைய அந்த தேடல் என்னையும் அறியாமல் எனக்குள் வந்துவிட்டது என்று உறுதியாகச் சொல்வேன். அப்பா சாதித்ததில் பத்தில் ஒரு பங்கு கூட நான் தொடவில்லை.

உங்களுடைய திரையுலக ஈடுபாடு, அதாவது.. கலையார்வம் என்பது அம்மாவிடமிருந்து வந்தது எனலாமா?

நிச்சயமாக… நான் அப்படித்தான் நினைக்கிறேன். அம்மா வசந்தா புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர். விமர்சகர்கள் ‘வசந்தா என்றால் அபிநய சரஸ்வதி. அபிநயத்தில் நம்பர் 1’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பத்திரிகைகளில் வந்த விமர்சனங்களை அம்மாவிடமிருந்து பெற்று, இன்னும்கூட நன் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

சிறுவயதிலேயே குருகுல வாசத்தின் மூலம் பரதக் கலையை கற்றுக்கொண்டவர். பரதக் கலையை அதன் ‘ப்யூரிட்டி’ யுடன் மட்டுமே அணுகியவர். சிறுவயது முதலே நிறைய ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளார். அம்மாவைத் தேடிவந்து பரதம் குறித்து தெரிந்துகொண்டும், திருத்திக்கொண்டும் செல்வோரை நான் பார்த்துள்ளேன். திருமணத்துக்குப் பிறகு அவர் மேடை நிகழ்ச்சிகளைத் தவிர்த்துக் கொண்டார். பரதத்தின் பாரம்பரிய வடிவமும் மரபும் மாற்றப்படுவதை அவர் விரும்பவில்லை. அம்மா சினிமா பார்க்கமாட்டார்.

நீங்கள் மணிரத்னத்தின் கண்டுபிடிப்பு. எந்தப் புள்ளி உங்கள் இருவரையும் இணைத்தது? தவிர, உங்கள் உறவு குரு - சிஷ்ய மனோபாவம் கொண்டதா... அல்லது நண்பர்களா?

எந்தப் புள்ளி எங்களை இணைத்தது என்று தெரியவில்லை. என்னைப் பார்த்ததும், ‘தளபதி’ படத்தின் கலெக்டர் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பேன் என்பதற்காக தேர்வு செய்தேன் என்று சொன்னார். அப்போது முன்பின் அவரோடு பழக்கமில்லை. சினிமா உலகத்தின் பழக்க வழக்கங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. இப்போதும் அப்படித்தான். நான் நானாக இருந்தது அவருக்குப் பிடித்திருக்கலாம். தொடக்கத்தில் எங்களுக்கு குரு - சிஷ்ய உறவுதான் இருந்தது. இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயமாக நண்பர்கள் ஆகிவிட்டோம்.

கேரக்டர், அதற்கான நடிப்பு என்பதைத் தாண்டி, அப்போதே செட்டில் எனக்குச் சின்னச் சின்ன வேலைகளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டார். “கூட்டத்தைக் கன்ட்ரோல் பண்ணு” என்பார். “டப்பிங்ல போய் உட்கார்ந்து கரெக்‌ஷன்ஸ் வேலையைக் கவனி” என்பார். இப்படி பிலிம் மேக்கிங்கில் எல்லாவிதமான வேலைகளிலும் பொறுப்புகளைக் கொடுத்து என்னை வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறார். அது என்னை இன்னும் சினிமாவின் மீது ஈடுபாடு கொண்டவனாக மாற்றிவிட்டது.

அடிப்படையில் நீங்கள் எம்ஜிஆர் ரசிகாரா, சிவாஜி ரசிகரா?

ஒரு வயது வரை, இரண்டுபேருடைய ரசிகரும் என என்னால் தயங்காமல் சொல்லமுடியும். சிறு வயது முதலே அப்பாவுடன் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் படங்களை மாறி மாறி பார்த்து வளர்ந்தவன் நான். சிவாஜி சாரின் நடிப்பைப் பார்த்து வியந்தது போலவே, எம்ஜிஆரின் ஸ்டைலையும், அவருடைய படங்களின் ஃபார்முலாவில் இருக்கும் ஹீரோயிசத்தையும் பார்த்து வியந்திருக்கிறேன். எந்தவிதமான டெக்னாலஜியும் இல்லாத காலத்திய அவர்களின் உழைப்பை இன்றைய தலைமுறை நடிகர்களால் கொடுக்கமுடியாது. இந்த இரண்டு வித பாதைகளையுமே அதன்பிறகு வந்த கமலும் ரஜினியும் உடைத்தெறிந்ததையும் பார்த்து வளர்ந்திருக்கிறேன். சிறுவயதில் இந்த நான்கு பேருக்குமே ரசிகன் தான். ஆனால், ரசிகன் என்கிற நிலை ஒரு வயது வரையில்தான். அதன்பின்னர் சினிமா ஆர்வலனாக என்னை உணர்ந்து கொண்டேன் என்று சொல்லலாம். இப்போது, அதே சினிமாவில் நானும் இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான்.

எம்ஜிஆராக நடிக்க வேண்டும் என அழைப்பு வந்தபோது உங்கள் மனதில் தோன்றியது என்ன?

தமிழ் நாட்டின் சினிமா, அரசியல் இரண்டிலுமே மக்கள் மனதில் அவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்துக்கொண்ட ஒருவருடைய ஐகானிக் லைஃப் டைம் கேரக்டர் எனும்போது எனக்கு சிலிர்ப்பாகத்தான் இருந்தது. என்றாலும், நான் முதலில் கதையைத் தான் பார்த்தேன். பிறகு, இயக்குநர் விஜய் என்பதில் இருந்த ஈர்ப்பு. கதை சுவரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறதா இல்லை ‘ட்ரை’ ஆக இருக்கிறதா என்பதையும் பார்த்தேன். கேட்டதுமே இதில் இரண்டு நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் எப்படி நொறுக்குகிறது என்பதை ‘எமோஷன்’ குறையாமல் சொல்லப்பட்டிருப்பதாகத் தோன்றியது. அதற்குக் காரணம், இயக்குநர் விஜயின் திரைக்கதை. அவர் தன்னுடைய படங்களில் மனித உணர்வுகளை சிறப்பாகக் கையாளக் கூடியவர். நான் நினைத்தது போலவே ‘தலைவி’ கதையையும் உணர்ச்சிகரமாகவே உருவாக்கியிருந்தார். அவர், ஒரு இயக்குநராக நம்மை வேலை வாங்குவதில் காட்டும் பணிவும், நமது கருத்துகளை உள்வாங்கிக் கொள்வதில் காட்டும் அக்கறையும் அவருக்கே உரியது.

எம்ஜிஆராக நடிப்பதில் உங்களுக்கு இருந்த சவால்கள் என்ன?

எந்தப் படமாக இருந்தாலும் சரி... என்னால் இந்தக் கேரக்டரைப் பண்ணமுடியுமா? என்கிற சவாலான சந்தேகம் மனதுக்குள் வந்துவிட்டாலே பிடிவாதமாக அந்தக் கேரக்டரைப் பண்ணியே தீருவது என்று இறங்கிவிடுவேன். அப்படித்தான் இந்த எம்ஜிஆர் கேரக்டரும். எது சவாலாகத் தோன்றுகிறதோ அதைச் செய்து பார்க்கும்போதுதான் கற்றுக்கொள்ளமுடியும்.

தலைவி படத்துக்கு இரண்டு வாரத்தில் ஷூட்டிங் போகணும் என்றபோது அவ்வளவு குறுகிய அவகாசத்தில் எப்படி என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஏனென்றால் எம்ஜிஆர் படங்களைப் பார்த்து வளர்ந்த நான், அவருடைய உடல்மொழியில் சிலவற்றை தேவையான இடங்களில் வெளிப்படுத்த முடியாது என்று நம்பிக்கை குறைவாக எண்ணவில்லை. மேலும், இதில் உணர்வுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருந்ததே தவிர, எம்ஜிஆரை அப்படியே ரிப்ளிக்கா செய்வதில் இல்லை. அது படத்தில் நன்றாகவே கூடி வந்ததிருக்கிறது. குறிப்பாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா வாழ்க்கையின் எந்தப் பகுதி, எந்தக் கால கட்டம் கதையில் தேர்வு செய்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் என்னை அவருடைய வேடத்தில் நடிக்க வேண்டும் என்கிற முடிவை எடுக்க உதவியது. அவருடைய வேடத்தில் நடிப்பதே சவால்தான். அதைக் கடந்து வந்திருப்பதில் நெகிழ்ச்சி. குறிப்பாக, உயிரற்ற உடலாக படுத்திருந்தபோது மனதுக்குள் ஓடிய உணர்வுகள் எனக்கு மட்டுமே சொந்தமானவை. அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை.

ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற அனுபவம் உண்டா?

25 வயதில் அவருடைய கையால் கலைமாமணி விருது பெற்றிருக்கிறேன். அப்போது மேடையிலேயே என்னுடைய காதில் “இன்னும் பல விருதுகளை நீங்கள் பெற வேண்டும்” என்று பாராட்டினார். அதை மறக்கமுடியாது. அதேபோல் சினிமாவிலிருந்து விலகி நான் எனது தொழில்களை கவனித்து வந்தபோது, ஒரு தொழிலதிபராக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்போது, “எதற்காக சினிமாவில் நடிக்காமல் விலகிச் சென்றீர்கள். மீண்டும் நடிக்க வாருங்கள்” என்று எனக்கு அறிவுரை கூறினார். அப்படிச் சொல்ல ஒரு மனம் வேண்டும். அந்தத் தாய்மை குணம் அவரிடம் இருந்தது.

திரைக்காக உருவாக்கப்பட்ட ஜெயலலிதாவான கங்கனா ரனாவத்திடம் உங்களுக்கு பிடித்தது என்ன?

அவருடைய சின்சியாரிட்டி. சிறுவயது முதல் எம்ஜிஆரைப் பார்த்து வளர்ந்த எனக்கு இருந்த அட்வான்டேஜ் அவருக்குக் கிடையாது. வட இந்தியாவில், இமாச்சல் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த அவர், தமிழ் மொழி தெரியாமலேயே ஜெயலலிதாவை உள்வாங்கிச் செய்ய, அவர் ஜெயலலிதா நடித்த எவ்வளவு படங்களை முதல் முறையாகப் பார்த்திருப்பார்! அவர் ஜீரோவிலிருந்து தொடங்கி ஜெயலலிதாவை உள்வாங்க நிறைய வாசித்து, பார்த்து உழைத்திருப்பார். அவருடைய சினிமா வாழ்க்கையில் ‘தலைவி’ சிறந்த பரிசு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மணிரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படத்தில் ‘கோபம்’ என்கிற உணர்ச்சியை தேர்வு செய்ய என்ன காரணம்... உங்களின் முதல் இயக்குநர் அனுபவம் பற்றி..?

மகனுடைய பேர் ‘ருத்ரா’. ‘நவரசா’வில் உள்ள உணர்ச்சிகளைப் பார்த்தபோது ‘ரவுத்திரம்’ என்று இருந்தது. அதனால் அதை தேர்ந்துகொண்டேன் என்று சொல்லலாம். ஆனால் உண்மையான காரணம், என்னிடமுள்ள கோபம். அது என் கூடப் பிறந்கதது என்று சொல்வேன். அரவிந்த் சுவாமி கூலான மனிதர் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், என்னிடமுள்ள குணங்களில் கோபம் எனக்குப் பிடிக்காத விஷயம். ஏனென்றால், கோபம் அவ்வளவு சீக்கிரம் வராது; வந்துவிட்டால் கன்ட்ரோல் போய்விடும்.

என்னுடைய கோபத்தால் நான் இழந்தது அதிகம். பெரும்பாலான மனிதர்கள் அப்படித்தான் என்றாலும் அதை நாம் நியாயப்படுத்துவது முறையல்ல. அதைத்தான் நான் ‘நவரசா’வில் ரவுத்திரம் படத்தில் சொல்ல நினைத்தேன். அது சிறப்பாக வந்திருப்பதாக பெரிய இயக்குநர்கள் எல்லாம் பாராட்டும்போது எடுத்துக்கொண்ட வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறோம், இனியும் செய்ய வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. மணி சார் என்னை அழைத்து ‘ நவரசா’ பற்றி சொன்னபோது, “நான் நடிப்பா, இயக்கமா?” என்று விளையாட்டாகக் கேட்டேன். “அது உன்னுடைய தேர்வாக இருக்கட்டும்” என்றார். நான் இயக்கத்தை தேர்ந்துகொண்டேன். ‘கோபத்தை மனதில் பூட்டிவைத்து அதை வன்மமாக மாற்றிக் கொள்ளாதீர்கள்’ என்பதை அந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன்.

அடுத்த இயக்கம்..?

சில கதைகள் கைவசம் இருக்கின்றன. அதில் ஒன்று காதல் கதை. அதை இயக்கவேண்டும் என்கிற திட்டம் இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE