தமிழ் சினிமாவில், பாலா இயக்கும் படங்களுக்கு என்று ஒரு தனித் தன்மை இருந்து வருகிறது. ஆரம்ப காலகட்டங்களில் அவர் இயக்கிய 'சேது', 'நந்தா', 'பிதாமகன்' போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தாலும் அதற்கடுத்து அவர் எடுத்த 'நான் கடவுள்', 'பரதேசி', 'அவன் இவன்', 'நாச்சியார்' போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாகப் பெரிய வெற்றி பெறவில்லை. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து அவர் இயக்கிய 'வர்மா' அவருக்கு மிகவும் கசப்பான அனுபவமாக அமைந்தது. தற்போது தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகி, ஒரு காதல் திரைப்படத்தை இயக்க உள்ளார் பாலா. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்காகப் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில், அதர்வா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.