சாதியை எதிர்த்து ஒரு படம்... சாதியை ஆதரித்து ஒரு படமா?

By விக்கி

சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவருடைய 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகப் பல படங்களை தயாரித்து வருகிறார் சூர்யா. ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘சூரரைப் போற்று’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த இந்நிறுவனம், தற்போது வாணி போஜன், ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ஜோதிகா, சசிகுமார் நடிப்பில் ‘உடன்பிறப்பே’, அருண் விஜய் நடிப்பில் ‘ஓ மை டாக்’, சூர்யாவின் நடிப்பில் ‘ஜெய் பீம்’ போன்ற படங்களைத் தயாரித்து வருகிறது.

ஜெய் பீம்

ஜெய் பீம்

சாதிய கட்டமைப்புக்கு எதிராகப் போராடிய அம்பேத்கரைக் குறிக்கும் வண்ணம், ‘ஜெய் பீம்’ என்ற தலைப்பிட்டதற்காக இத்திரைப்படக் குழுவுக்கு, குறிப்பாக சூர்யாவுக்குப் பல தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்தன.

காணாமல் போன பாராட்டுகள்

‘ஜெய் பீம்’ தலைப்புக்காக, சில நாட்களுக்கு முன்பாகப் பாராட்டிய அனைவரும் தற்போது சூர்யாவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கவிருக்கும் ‘விருமன்’ என்ற திரைப்படத்தை, சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதால்தான் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் சூர்யா.

‘விருமன்’ பட போஸ்டர்

“சாதியமைப்பை எதிர்த்து ஒரு படம், சாதியமைப்பைத் தூக்கிப்பிடித்து பெருமை பேசும் ஒரு திரைப்படம். இரண்டையும் ஒரே நேரத்தில் சூர்யா தயாரிப்பது, அவர் ஒரு சிறந்த சினிமா வியாபாரி என்பதை நிரூபிக்கிறது” என்று கடுமையான விமர்சனங்கள் சூர்யாவை நோக்கி எழுந்துள்ளன.

முத்தையாவின் முந்தைய படங்களில் ஆதிக்க சாதியைத் தூக்கிப்பிடிக்கும் வண்ணம் கதையமைப்பு இருந்ததால், அவருடைய அடுத்தப் படமும் அப்படித்தான் இருக்கும் என்ற அனுமானத்தில் இப்போதே ‘விருமன்’ திரைப்படத்தை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர் சாதி ஆதிக்க எதிர்ப்பாளர்கள்.

‘கொம்பன்’ படப்பிடிப்பில்..

இரண்டாவது முறையாக அமையும் கார்த்தி-முத்தையா கூட்டணி

கார்த்தி-முத்தையா கூட்டணியில் இதற்கு முன்பு ‘கொம்பன்’ திரைப்படம் வந்திருந்த நிலையில், 2-ம் முறை இணையும் இக்கூட்டணியில், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளார். முத்தையாவின் படங்களுக்கு யுவன் இசையமைப்பது இதுவே முதல்முறையாகும். மேலும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

அறிவிப்புக்கே பல சர்சைகளை கிளப்பியுள்ள விருமன், ரிலீஸ் ஆனபிறகு என்னென்ன விவாதங்களை எழுப்பப் போகிறதோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE