ஓ.டி.டி உலா : கறுப்பு விதவையின் கதை

By எஸ்.எஸ்.லெனின்

அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோஸ் கூட்டாக அதகளம் செய்வதற்கு அப்பால், ஒவ்வொருவரும் வகைதொகையாய் திரைப்படம், வலைத்தொடர் என தனி ஆவர்த்தனமும் செய்வதுண்டு. அந்த வகையில், அவெஞ்சர்ஸ் குழுவின் ‘பிளாக் விடோ’ கதாபாத்திரம் மட்டுமே தோன்றும் தனித்துவத் திரைப்படம் அதே தலைப்பில் வெளியாகியுள்ளது.

மார்வெல் சினிமா உலகத் திரைப்பட வரிசையின் அங்கமாக ‘அயர்ன் மேன்-2’ திரைப்படத்தில் அறிமுகமான அதேநாயகிதான் ‘பிளாக் விடோ’. பின்னர், ‘அவெஞ்சர்ஸ்’ முதல் ‘எண்ட்கேம்’ வரையிலான பல்வேறு அவெஞ்சர்ஸ் படைப்புகளிலும் பிளாக் விடோ பாத்திரம் முக்கிய இடம் பிடித்தது. தற்போது, பிளாக் விடோவை முழு முதல் முன்னணிப் பாத்திரமாகக் கொண்ட திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

‘நடாஷா’ என்கிற பிளாக் விடோ கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன். அவெஞ்சர்களில் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லையென்றும், கவர்ச்சிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் பேட்டிகளில் அதிருப்தி தெரிவித்திருந்தார் ஸ்கார்லெட். அவரது நியாயமான ஆதங்கத்தை நேர் செய்யும் வகையில் ‘பிளாக் விடோ’ திரைப்படம் உருவாகி உள்ளது.

அதிரடி ஆக்‌ஷன்

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்திலேயே பிளாக் விடோ இறந்துவிடுவார். எனவே, இந்த ‘பிளாக் விடோ’ திரைப்படம் அதற்கு முன்பான சாகச வரிசையில் சேர்கிறது. ‘அவெஞ்சர்ஸ்’க்கு அப்பாலும் ஸ்கார்லெட்டுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். அவற்றை ஏமாற்றாத வகையில் படமும் ஆக்‌ஷனில் அசத்தியிருக்கிறது. தான் யார் என்பதை அறிந்துகொள்ள பிளாக் விடோ முயற்சிப்பதும், தன்னைப்போல உருவாக்கப்பட்ட இதர பிளாக் விடோக்களை ரெட் ரூமிலிருந்து காப்பாற்ற முயற்சிப்பதும், அதில் தனது குடும்பத்துடன் இணைந்து போராடுவதும்தான் இப்படத்தின் கதை!

சிறுமி நடாஷாவின் இளம் பருவத்தில் கதை தொடங்குகிறது. தந்தையின் விபரீதப் பின்னணியால், ஆபத்துக் காலத்தில் அமெரிக்காவிலிருந்து கியூபாவுக்குத் தப்பிக்கிறது நடாஷா குடும்பம். அங்கே அவளது குடும்பம் சிதறுவதுடன், ரெட் ரூம் பயிற்சிகள் சகோதரிகள் மீது திணிக்கப்படுகின்றன. அங்கிருந்து வளர்ந்த நடாஷாவிடம் தாவும் கதை, அவெஞ்சர் குடும்பத்துடனான மனஸ்தாபத்தில் தனியாகப் பயணிக்கும் பிளாக் விடோ சாகசங்களைப் பின்தொடர்கிறது.

ஜேம்ஸ் பாண்ட் பாணி

சூப்பர் ஹீரோ படங்களுக்கே உரிய அதிரிபுதிரி ஆக்‌ஷன் பட்டாசுடன் காட்சிகள் விரைய, மீண்டும் தனது குடும்பத்துடன் இணையும் நடாஷா, ரஷ்ய வில்லன் ட்ரேகாவைக் க்ளைமாக்ஸில் சந்திக்கிறார். அத்துடன் உள்ளுக்குள் குமைந்துவந்த பெரும் உறுத்தல் ஒன்றுக்கும் தீர்வு தேடுகிறார். உலகமகா வில்லன் ட்ரேகாவ், வழக்கம்போல உட்கார்ந்த இடத்திலிருந்தே பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்களையும், பங்குச் சந்தைகளையும் இயக்குகிறான். அவனுடன் புஜத்தால் மட்டுமன்றி மூளையாலும் நடாஷா மோதும் காட்சிகள் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் விருந்தாகின்றன.

டேவிட் ஹார்பர், ஃபிளாரன்ஸ் பக், ரேச்சல் வெய்ஸ் உள்ளிட்டோர் உடன் நடிக்க கேட் ஷார்ட்லாண்ட் திரைப்படத்தை இயக்கி உள்ளார். ஆக்‌ஷன் மட்டுமன்றி உருக்கமான நடிப்பிலும் ஸ்கார்லெட் கவர்கிறார். அவெஞ்சர்ஸ் படங்களுக்கே உரிய பாணியில் பிளாக் விடோ பாத்திரத்தை சுயபகடி செய்வதும், சூப்பர் ஹீரோ குடும்பத்தினர் சந்திப்பிலும் அந்த எள்ளல் தொடர்வதும் ரசிக்கும்படி உள்ளது.

தமிழ் உட்பட 6 மொழிகளில் ’பிளாக் விடோ’ திரைப்படத்தைத் தரிசிக்கலாம்!

‘க்ரூயெல்லா’: எதிர் நாயகியின் நிஜ முகம்

‘101 டால்மேஷன்ஸ்’ என்ற திரைப்படம் 1996-ல் வெளியானது. பிரபல ஆடை வடிவமைப்பாளரான க்ரூயெல்லா என்ற பெண்மணி, டால்மேஷன் நாய்களிடமிருந்து தோலாடை தைக்கும் நோக்கில் அந்த ரக நாய்களாகப் பார்த்து திருடுவார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த இந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் 2000-ல் வெளியானது. தற்போது, அக்கதையின் பிரதான எதிர்மறை பாத்திரமான க்ரூயெல்லாவை மையமாகக் கொண்ட தனி திரைப்படம் வெளியாகி உள்ளது.

புறக்கணிக்கப்படும் சிறுமி

1960-களில் கதை தொடங்குகிறது. எஸ்தெல்லா என்ற சிறுமி சதா குறும்பும், சேட்டையுமாக வளர்கிறாள். மெலனின் குறைபாட்டால் அவளது கேசம் சரிபாதி கறுப்பு வெள்ளையில் தோற்றமளிப்பதால், சக வயதினர் விலகிச் செல்கின்றனர். எஸ்தெல்லாவை எல்லோரும் ‘க்ரூயெல்லா’ என்றே அழைத்து வெறுப்பேற்றுகின்றனர். இதுவும் சிறுமியின் அடங்காத போக்கை அதிகரிக்க, பள்ளியில் கெட்ட பெயர் சேர்கிறது. வேறுவழியின்றி, அங்கிருந்து லண்டன் மாநகருக்கு மகளை அழைத்துச் செல்கிறார் அவளது தாய். சிறு வயதிலிருந்தே ஆடை வடிவமைப்பில் அசாத்திய திறமை கொண்டிருக்கும் எஸ்தெல்லாவும், அதற்கான வாய்ப்புகளை அள்ளித் தரும் லண்டன் மீதான கனவிலிருக்கிறாள்.

ஆனால், எதிர்பாரா சம்பவங்களினால் லண்டன் நோக்கிய பயணத்தின் பாதி வழியிலேயே எஸ்தெல்லாவின் தாய் இறந்துபோகிறாள். தாய் சாவுக்குத் தானும் ஒரு காரணம் என எஸ்தெல்லா வருந்துகிறாள். தனியாளாய் தவிக்கும் அவளுக்கு, லண்டனின் ஆதரவற்ற சிறுவர்கள் இருவர் அபயமளிக்கிறார்கள். ஆடை வடிவமைப்பு கனவில் வளரும் எஸ்தெல்லாவுக்கு, நகரின் பிரபல டிசைனரான பரோனஸ் என்ற பெண்மணியின்கீழ் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.

அங்கே, எஸ்தெல்லாவின் கடந்த கால ரகசியங்கள் பலவற்றுக்கும் விடை கிடைக்கிறது. சீற்றம் கொண்ட எஸ்தெல்லா, எதிர்மறையான க்ரூயெல்லாவாக அவதாரமெடுத்து பழைய கணக்கைத் தீர்க்க முயற்சிக்கிறாள். அவளது முயற்சிகள் பலித்தனவா, அவள் கண்டுகொண்ட ரகசியங்கள் என்ன, க்ரூயெல்லாவின் எதிர்மறை வேடம் எடுபடுகிறதா என்பதையெல்லாம் மிச்ச திரைப்படம் சொல்கிறது.

பிரம்மாண்டமான கலையமைப்பு

‘101 டால்மேஷன்ஸ்’ திரைப்படத்தின் க்ரூயெல்லா பாத்திரத்தின் முன்கதை என்பதால், திரைப்படம் மீதான எதிர்பார்ப்புகளே க்ரூயெல்லா திரைப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. எழுபதுகளின் லண்டன் மாநகரம், ஆடை வடிவமைப்பாளர்களைச் சுற்றி அமையும் கதை என்பதால் அவற்றைப் பிரதிபலிக்கும் கலையமைப்பில் க்ரூயெல்லா சுவாரசியம் சேர்க்கிறது. அதிலும் எஸ்தெல்லா/க்ரூயெல்லாவாகத் தோன்றும் எம்மா ஸ்டோன், பரோனஸாக வரும் எம்மா தாம்ப்ஸன் என இரண்டு ஆஸ்கர் நாயகியரும் போட்டிபோட்டு தங்கள் திறமைகளைப் பறைசாற்றுகிறார்கள்.

1956-ல் நாவலாக வெளியான பழங்கதையிலிருந்து நெய்த திரைக்கதை என்பதால், விறுவிறுப்புக்காகப் பெரிதும் மெனக்கிட்டிருக்கிறார்கள். ஆனபோதும் நகைச்சுவைப் பஞ்சம், திரைக்கதைத் தொய்வுகள் ஆகியவையும் ஆங்காங்கே தட்டுப்படுகின்றன. பெரியவர்களும் பார்ப்பதற்கான குழந்தைகள் திரைப்படத்துக்கே உரிய தடுமாற்றங்களும் க்ரூயெல்லாவில் உண்டு. ‘101 டால்மேஷன்ஸ்’ அளவுக்குக் குழந்தைகளை முழுவதும் கவரும் கதை இதில் இல்லை.

ஆனபோதும், வால்ட் டிஸ்னி தயாரிப்பு என்பதாலேயே குடும்பத்துடன் ரசிப்பதற்கான தகுதியைப் பெறுகிறது ‘க்ரூயெல்லா’. ஜோயல் பிரை, எமிலி பீச்சம் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் திரைப்படத்தை க்ரெய்க் கில்லெஸ்பி இயக்கி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE