சினிமா சிற்பிகள் - 8: விக்டர் ஷோஸ்ட்ரம் - தாக்கம் தந்த கலைப் புயல்!

By க.விக்னேஷ்வரன்

உலக அளவில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் சினிமா தயாரிப்பில் பெரும் சாதனைகளைச் செய்ய ஆரம்பித்த அதே காலத்தில், தங்களுடைய பங்கைச் சத்தமின்றி ஆரம்பித்திருந்தனர் ஸ்வீடன் திரைத் துறையினர். ஸ்வீடன், நார்வே நிலப்பரப்புகளில் தோன்றிய கவிஞர்களும், கதாசிரியர்களும் யதார்த்தவியலில் (Realism) நம்பிக்கை கொண்டிருந்தனர். அதன் நீட்சியாக அந்த நிலப்பரப்பில் உருவான சினிமாவிலும் யதார்த்தவியல் வெளிப்பட்டது. தோராயமாக ஜெர்மனியில் எக்ஸ்ப்ரஷனிஸம் வளர்ந்த அக்காலகட்டத்தில், ஸ்வீடனில் ரியலிஸம் பிரபலமடையத் தொடங்கியிருந்தது.

ஜோடிக்கப்பட்ட ஸ்டுடியோவுக்குள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஸ்டூடியோவைவிட்டு வெளியே வந்து யதார்த்த உலகில் எடுக்கும் படங்களிலும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்களைப் பயன்படுத்த முடியும் என்பதைச் செய்துக்காட்டியவர் விக்டர் ஷோஸ்ட்ரம் (Victor Sjöström). மவுனத் திரைப்பட யுகத்தில் அவர் செய்துகாட்டிய திரை வித்தைகள், உலகம் முழுவதும் உள்ள திரைமேதைகளுக்குத் தாக்கம் தந்தவை. அவரது படங்கள் தந்த தாக்கத்தால், பல அற்புதமான திரைப்படைப்புகள் உலகுக்குக் கிடைத்தன.

‘தி பேந்தம் கேரேஜ்’

நோபல் பரிசு பெற்ற கதைகள்

ஸ்வீடனின் வார்ம்லேண்ட் பகுதியில், 1879 செப்டம்பர் 20-ம் தேதி பிறந்தார் விக்டர் ஷோஸ்ட்ரம். அவருடைய தந்தை ஓலோஃப் அடால்ப் ஷோஸ்ட்ரம், தனது தொழில் நிமித்தம் அமெரிக்காவுக்குக் குடும்பத்தோடு மாற்றலாகிப்போனார். எனவே, விக்டர் ஷோஸ்ட்ரமின் இளம் பருவத்தின் சில வருடங்கள் அமெரிக்காவில் கழிந்தன. தனது தாயாரின் மறைவுக்குப் பிறகு ஸ்வீடனுக்குத் திரும்பிய விக்டர் ஷோஸ்ட்ரம், பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்பே நாடகத் துறையால் ஈர்க்கப்பட்டார். வாய்ப்பு கேட்டு, மேடை நாடகக் கம்பெனி ஒன்றை அணுகினார்.

தனது 17-வது வயதில் நாடக நடிகராக மாறிய ஷோஸ்ட்ரம், தனது 33-வது வயதில் ‘எ ரூயின்டு லைஃப்’ (1912) எனும் திரைப்படத்தை இயக்கினார். முதல் படமே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு பணக்காரக் கனவானுக்கும் ஓர் ஏழைப் பெண்ணுக்கும் இடையிலான ரகசிய உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், ஸ்வீடன் நாட்டு மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாகப் பறைசாற்றியது.

அதே 1912-ம் வருடம், தன்னுடைய 2-வது படமான ‘தி கார்டனர்’ என்ற படத்தை இயக்கினார் ஷோஸ்ட்ரம். அப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் அவரே நடித்திருந்தார். நன்னடத்தைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, ஸ்வீடன் அரசாங்கத்தின் தணிக்கைக் குழு அப்படத்தைத் தடைசெய்தது. நோபல் பரிசு பெற்ற நாவல் ஆசிரியரான செல்மா லாகர்லோவின் கதைகளைத் திரைப்படமாக எடுப்பதில் ஆர்வம் காட்டினார் ஷோஸ்ட்ரம். ‘தி சன்ஸ் ஆஃப் இங்க்மார்’ (1919), ‘காரின், தி டாட்டர் ஆஃப் இங்க்மார்’ (1920) போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம். திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமாகி 8 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் இயக்கியிருந்தார் ஷோஸ்ட்ரம். 1917-ல் அவர் இயக்கிய ‘எ மேன் தேர் வாஸ்’ என்ற திரைப்படம், அக்கால கட்டத்தில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஸ்வீடன் திரைப்படம். அத்திரைப்படம்தான், ஸ்வீடன் சினிமாவின் பொற்காலத்தின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. ‘ஸ்வீடன் சினிமாவின் பொற்கால தந்தை’ என்று ஷோஸ்ட்ரம் கருதப்படுகிறார்.

‘தி பேந்தம் கேரேஜ்’

1917 முதல் 1930 வரை வந்த ஸ்வீடன் சினிமாக்கள் அனைத்தும், சினிமா காதலர்கள் பார்க்க வேண்டிய கலைப் படைப்புகள். 1921-ல், செல்மா லாகர்லோவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு ‘தி பேந்தம் கேரேஜ்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் ஷோஸ்ட்ரம். மரணம், மரணத்துக்குப் பிந்தைய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும், பாவச் செயல்கள் செய்யும் மனிதன், அவனின் மனமாற்றம், அவனுடைய மறுவாழ்வு ஆகியவற்றை மிக யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியதால் அத்திரைப்படம் உலகளவில் புகழ் பெற்றது.

நூறு ஆண்டுகளாகத் தொடரும் தாக்கம்

ஸ்டூடியோவுக்குள் அல்லாமல் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தில் டபுள் எக்ஸ்போஷர், டிஸ்ஸால்வ் போன்ற பல எடிட்டிங் நுணுக்கங்களைப் பயன்படுத்தியிருப்பார் ஷோஸ்ட்ரம். அவரே நடித்து இயக்கிய ‘தி பேந்தம் கேரேஜ்’ திரைப்படம் வந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் பல நவீன திரைப்படங்களில் அத்திரைப்படத்தின் தாக்கத்தைக் காணலாம். இதற்கு, புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘தி ஷைனிங்’ (1980) திரைப்படத்தின் இறுதிக்காட்சி ஓர் உதாரணம். அப்படத்தில், தீயசக்தியாலும் உளவியல் சிக்கல்களாலும் பீடிக்கப்படும் ஜாக் டோரன்ஸ் கதாபாத்திரம் தன் மனைவியையும் மகனையும் கொல்ல, கோடரியைக் கொண்டு கதவைப் பிளக்கும் திகில் காட்சி நேரடியாக ‘தி பேந்தம் கேரேஜ்’ திரைப்படத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்டது. இன்று மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் தோன்றும் சில காட்சிகளையும் உதாரணமாகச் சொல்லலாம். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் தனது பூத உடலைவிட்டு ஆன்மா பிரிந்து தன் உடலைப் பார்ப்பது போன்ற காட்சிகள், 100 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘தி பேந்தம் கேரேஜ்’ திரைப்படத்தின் தாக்கத்தில் உருவானவைதான்!

‘தி பேந்தம் கேரேஜ்’

ஹாலிவுட்டில் ஷோஸ்ட்ரம்

‘தி பேந்தம் கேரேஜ்’ திரைப்படத்துக்குப் பிறகு உலகப்புகழ் பெற்றார் ஷோஸ்ட்ரம்; ஹாலிவுட்டிலும் அவரது புகழ் பரவியது. அமெரிக்காவின் புகழ்பெற்ற சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘மெட்ரோ கோல்ட்வின் மேயர் ஸ்டுடியோ'வின் நிறுவனர்களில் ஒருவரான லூயிஸ் பர்ட் மேயர், ஹாலிவுட்டில் திரைப்படம் இயக்க ஷோஸ்ட்ரமுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று அமெரிக்காவுக்குச் சென்ற ஷோஸ்ட்ரம், ‘நேம் தி மேன்’ (1924) என்ற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து ‘ஹி ஹூ கெட்ஸ் ஸ்லாப்ட்’ (1924) என்ற சைக்காலஜி த்ரில்லர் திரைப்படத்தை இயக்கிய ஷோஸ்ட்ரம், அடுத்தடுத்து ‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ குயின்’ (1925), ‘தி டவர் ஆஃப் லைஸ்’ (1925), ‘தி ஸ்கார்லட் லெட்டர்’ (1926) போன்ற அமெரிக்காவின் மிகப் பிரசித்தி பெற்ற திரைப்படங்களை இயக்கினார்.

1930-களுக்குப் பிறகு, மவுனத் திரைப்படங்களின் காலம் முடிந்து முழுக்க முழுக்க வசனங்கள் கொண்ட திரைப்படங்கள் வரத் தொடங்கியபின், திரைப்படம் இயக்குவதில் நாட்டம் இழந்த ஷோஸ்ட்ரம், அமெரிக்காவிலிருந்து ஸ்வீடன் திரும்பினார். நாடு திரும்பிய பின்பு ஒரு சில படங்களை இயக்கிய ஷோஸ்ட்ரம், அதன் பின் திரைப்படம் இயக்குவதைக் கைவிட்டு, நடிகராக மட்டும் இயங்கிவந்தார். பல மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துவந்தார். இறுதியாக 1957-ல் ஸ்வீடனின் இன்னொரு முக்கிய இயக்குநரான இங்மார் பெர்க்மனின், ‘வைல்ட் ஸ்ட்ராபெரீஸ்’ என்ற திரைப்படத்தில் பேராசிரியர் வேடத்தில் நடித்தார். இதுவே, ஷோஸ்ட்ரம் நடித்த கடைசித் திரைப்படம். அதன்பின் 3 வருடங்கள் கழித்து, 1960 ஜனவரி 3-ல் வயது மூப்பின் காரணமாக தன்னுடைய 80-வது வயதில் மரணமடைந்தார்.

சிறந்த இயக்குநராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடிகராகவும் ஷோஸ்ட்ரம் விளங்கினார். ஸ்வீடனில் அவர் எடுத்த பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும், ஏனோ.. அமெரிக்காவுக்குச் சென்று தான் இயக்கிய எந்தத் திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை.

டபுள் எக்ஸ்போஷர் காட்சி அமைப்பு

ஒரு திரைப்படம் பொழுதுபோக்கு என்ற குறுகிய வட்டத்துக்குள் நிற்காமல், நூறாண்டுகள் கழித்தும் காலத்தால் அழியாத கலைப்படைப்பாக நிற்கும் என்பதற்கு உதாரணத்தை விட்டுச்சென்ற ஷோஸ்ட்ரம், சினிமா என்னும் பெருங்கடலில் ஒரு கலைப் புயலாகவே வாழ்ந்து மறைந்தார்!

‘தி பேந்தம் கேரேஜ்’ திரைப்படத்தில், கையில் மது பாட்டிலுடன் ஷோஸ்ட்ரம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE