புகழ்பெற்ற ‘தி டெக்சாஸ் செயின்ஸா மஸக்கர்’ திகில் பட வரிசையின் புதிய படம், நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது.
டோபி ஹூப்பர் இயக்கத்தில் 1974-ல் வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘தி டெக்சாஸ் செயின்ஸா மஸக்கர்’ படம், உலக அளவில் திகில் பட ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றது. நர மாமிசம் உண்ணும் கொடூரக் குடும்பத்திடம் சிக்கிக்கொள்ளும் இளம் பெண் எதிர்கொள்ளும் திகில் அனுபவங்களைப் பதிவுசெய்த படம் இது. இப்படத்தின் ‘லெதர்ஃபேஸ்’ எனும் வில்லன் பாத்திரம் உலகப் புகழ்பெற்றது.
இப்படத்தின் தொடர்ச்சியாக வெளியான பல பாகங்களும் பேசப்பட்டவை. இப்படத்தின் கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து நாவல், காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்கள் வெளியாகியிருக்கின்றன. 2013-ல் ‘டெக்சாஸ் செயின்ஸா 3டி’ படம் வெளியானது. 2017-ல் ‘லெதர்ஃபேஸ்’ எனும் பெயரிலேயே ஒரு படம் வெளியாகிக் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதன் அடுத்த பாகம், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், டேவிட் ப்ளூ கார்சியா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் எப்போது வெளியாகும் என்று திகில் பட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், இப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. இதையடுத்து ஓ.டி.டி. வழியே பயந்து நடுங்க ரசிகர்கள் தயாராகிவருகிறார்கள்.